[X] Close

நிமிடக்கதை: நல்லா கதை விடுறாங்க!


nimidakkadhai

  • kamadenu
  • Posted: 30 Jul, 2018 09:38 am
  • அ+ அ-

இன்னும் அரைமணி நேரம்தான் இருந்தது. அதற்குள் புடவை மாற்றி, முக டச்சப் செய்து, லேசாக வெள்ளை தெரிய ஆரம்பித்த முடி ஆரம்பங்களைக் கறுப்பு மை இட்டு மறைத்து... படப்படப்போடு கையும் படபடத்தது.

"நந்தினி, அம்மா நந்தினி.... நெஞ்சு கரிக்குது, இருமல் நிக்காம வருது பார்...கொஞ்சம் சுக்கு வெல்லம் தட்டிப்போட்டு சுடு தண்ணீ எடுத்தா...." உள் அறையில் இருந்து கேட்டது குரல்.

அலங்காரத்தை பாதியில் நிறுத்திவிட்டு அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

"என்ன நந்தினி...ரெடியா? மசமசன்னு சமையல் அறையிலே நிக்குற. நேரமாயிடுத்து. முகூர்த்தம் எட்டுக்கு. எல்லாம் முடிஞ்சு சாப்பாட்டு டைமுக்குத்தான் போக முடியும் இப்படி வேலை செய்தா...."

எப்போதும் போல் சீக்கிரமாகக் கிளம்பி பின் முணுமுணுக்கத் தொடங்கினான் முரளி.

அவளுக்கு எரிச்சல் வந்தது. அவன் அப்பா தண்ணீர் கேட்டதை அவனும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். என்னவோ இவளால் நேரம் ஆவது போல்....

" நானா வரேன்னு சொன்னேன். நீங்கதான் ஆபீஸ் பாஸ் வீட்டுக் கல்யாணம். நீயும் வரணும்னு சொன்னதால அவசரமா கிளம்புறேன். இல்லை முதல்லயாவது சொல்லி இருக்கணும். கடைசி நிமிஷத்துல ... "

முரளிக்கு சட்டென்று கோபம் வந்தது.

" சரி நீ வரவேணாம். நான் மட்டும் போகிறேன். எதையாவது காரணம் சொல்லிச் சமாளிக்கிறேன்."

அவளுக்கும் லேசாகக் கோபம் வந்தது.

" ஆமாம் , சொல்லுங்கோ. அப்பாவுக்கு  உடம்பு முடியலை. பாரத்துக்க வேண்டி இருப்பதால் முடியவில்லை என்று"

சுர் என்று கோபம் மூக்கில் ஏறியது.

"இதப்பாரு, உடம்பு சரியில்லைன்னு காரணம் நான் சொல்லமாட்டேன். மேலே இருந்து தேவர்கள் நம் வார்த்தைக்கு ததாஸ்து என்று சொல்லிக்கொண்டே இருப்பாங்க. இதுபோல சொல்ல, அவர்கள் ததாஸ்து  என்று சொல்லி, அவருக்கு ஏதாவது ஆயிட்டா..."

அவளுக்கும் அது சரியில்லை என்றே பட்டது. ஏற்கெனவே கொஞ்சம் உடம்பு படுத்துகிறது அவருக்கு!

"அப்போ சரி, நம்ம பெண்ணுக்கு உடம்பு சரி இல்லை, அதனால் ஸ்கூல் போகலைனு சொல்லலாம்."

"ஸ்டுபிட், உடம்பு சரியாயில்லைன்னு சொல்லக்கூடாதென்று இப்போதுதானே சொன்னேன். சரி, நேரம் ஆயிடுத்து, நான் பார்த்துக்குறேன்...." அவசரமாகக் கிளம்பிச்சென்றான்.

நந்தினி நினைத்துக்கொண்டாள். என்ன காரணம் சொன்னார் என்பதை வந்ததும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். நாளை யாரையாவது நேரே சந்திக்கும்போது எதையாவது மாற்றிச்சொல்லி பிரச்சினையாகிவிடக்கூடாதே!  

முரளி மிகவும் நேரம் ஆனதால் நேரே ஆபீசுக்குச்செல்ல, அவள் இதைப்பற்றி மறந்தே போனாள்.

அடுத்தநாள் காலை விடாமல் அடித்துக்கொண்டிருந்த போனை எடுத்து ஹலோ சொல்வதற்குள்...

"என்ன நந்தினி, ரொம்ப நேரமா போனை நீ எடுக்கவில்லையா. பயமாக போயிடுத்து. உடம்பு வேற சரி இல்ல உனக்கு. அதான் மயக்கமா இருக்கியோன்னு”

ஆபீசில் முரளியுடன் பணி புரியும் ஆனந்தின் மனைவி...

" எனக்கு உடம்பா...இல்லியே...." அவள் மேலே சொல்வதற்குள்...

"உடம்பை பார்த்துக்கோ. எதாவது உதவி வேண்டும் என்றால் சொல்லு. முரளிக்கு நேற்று கல்யாணத்துல இருக்கவே முடியலை’  - அவள் பேசிக்கொண்டே இருந்தாள்... பொத்தென்று கீழே நந்தினி விழுந்தது அவளுக்கு எப்படித் தெரியும்?

 - லதா ரகுநாதன்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close