[X] Close

ஒருநிமிடக் கதை : கடனே வேணாம்!


oru-nimida-kadhai

  • kamadenu
  • Posted: 23 Jul, 2018 10:34 am
  • அ+ அ-

ஒருக்களித்து மூடி இருந்த கதவை லேசாகத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. சத்தமில்லாமல் கதவைச் சாத்தினாள். உள்ளே பெரியவர் நிறுத்தி நிதானமாக மூச்சிழுத்துக் கொண்டிருந்தார். கண்கள் மூடியபடி இருக்க, அது தூக்கத்தையோ, மயக்கத்தையோ காட்டின. பக்கத்து ஸ்டூலில் அமர்ந்தபடி கதவை மறுபடியும் பார்த்து உறுதி செய்து கொண்டாள்.

கைப்பேசியை கைப்பையிலிருந்து எடுத்து ஆன் செய்தாள். டிடிங் என்று அது ஆன் ஆகிற ஓசை பொன்னுசாமியின் நாயனம் கேட்டது போல் ஒரு திகைப்பை ஏற்படுத்தியது. கதவை மறுபடியும் பார்த்தாள். யாரும் வரவில்லை

”ஹலோ.... ”

அன்றும் இப்படித்தான். அவள் ஹலோ சொல்லிவிட்டு காத்திருக்கும் நேரத்தில் மருமகள் வந்து விட்டாள்.

’’யேய்...பேரு என்ன...ராணியா கோணியா...இதப்பாரு, உங்க ஏஜென்சியிலே மொதக்கா சொல்லி இருக்கம். இங்கே வந்து நாள் முழுக்க போனை நோண்டுறது, கெக்கேபிக்கேன்னு சத்தம் போட்டுப் பேசுறது, தூங்கி வழியுறது இதெல்லாம் கூடாதுன்னு.  சொல்லட்டுமா இப்புடிச் செய்யிறேனு! ஜாக்கிரதை, வேல போயிடும். இன்னும் ஒருமுறை போன் கையிலே பாத்தேன்னு வையி...அம்புட்டுதான்.’’

"ஹலோ....யாரு ரோஜா அம்மாங்களா...."

" ஹலோ... ஹலோ....யாரு அது...ஹலோ யாரு பேசறீங்க..."

எதிர்புறம் மிகவும் சத்தமாக பேசப்படும் குரல் வெளியே கேட்டுவிடக்கூடும். 

"அம்மா, நாந்தான்மா உங்க பக்கத்து வூட்டு ராணி. ரோஜா இல்லீங்களா?"

" ஓ...நீயாடி...எப்புடி இருக்க? ரோஜா குளிச்சிகிட்டு இல்ல இருக்கு...ஆமா...எங்கேடி போனே நீயி. உங்க அப்பா இழுத்துகிட்டு கிடக்காரு. நீ காசு பாக்க மெட்ராசுக்குப்  போயிட்ட..."

" ரோஜாம்மா, நானு இப்ப நிறைய நேரம் பேசமுடியாது. அண்ணி போனை எடுக்க மாட்டேங்குறாங்க. அண்ணனும்தான். அதான் அப்பா எப்படி இருக்காரு.. ?"

"இதப்பாருடி கூத்த? .அப்பா நலம் விசாரிக்க நேரமில்லையாமுல்ல! ரொம்ப சரிதான் உங்க அண்ணி சொன்னது..."

" அய்யோ...அப்பா எப்படி இருக்காரு?"

" ஆங்.. இந்த அவசதத்துக்கு குறைச்சல் இல்ல...மூத்திரம் பெஞ்சு அதுலயே பொறண்டு கிடக்காரு...சொந்த மக ஒனக்கில்லாத அக்கறை வந்தவளுக்கு என்னாத்துக்கு? அதான், கேட்டி இல்ல, சோறு தண்ணி கொடுக்க ஆள் இல்ல, ஒண்ணுக்கோ ரெண்டுக்கோ எடுத்துப் போட நாதி இல்ல. கேட்டுக்க...நானு போய் பார்க்கப் போனேன்...நாத்தம் கொடலைப் புடுங்குது..."

பெரியவர் முகம் லேசான சுருக்கத்தோடு கால்கள் மேலும் கீழும் அசைந்தன. ஒண்ணுக்கு எடுக்கத்தான் இப்படிச் செய்வார்.

"ரோஜா அம்மா.... வேலை வந்திடுச்சு...அப்புறமா பேசுறேன்..." போனைக் கட் செய்து ஜாக்கிரதையாக ஸ்விட்ச் ஆப் செய்து கைப்பையில் வைத்தாள்.

"அம்மாடி ராணி, எனக்கு ஒரு சத்தியம் நீ செய்யோனும். இதப்பாரு உன் அண்ணா, வீட்டு மேலே கடன் வாங்கித்தான் எனக்கு இந்த ஆபரேசனை செஞ்சிருக்கான். அதனால, நீ மதராசுக்குப் போயி நிறைய சம்பாதிச்சு அந்தக் கடனை அடைக்கணும். உங்க அண்ணி என்னை எப்படி பாத்துகிட்டாலும் சரி. இருந்த ஒரே வீட்டையும் தின்னுட்டுப் போயிட்டான் கிழவன்னு பேச்சு எனக்கு வரக்கூடாது. வேற எந்தக்காரணம் காட்டியும் இங்கே வரக்கூடாது...செய்வியா? "

மெதுவாக டையப்பரைக்கழட்டி எடுத்தாள். அங்கேயும் இங்கேயும் அசைந்ததால் படுக்கை வரை ஈரம் பரவி இருந்தது.

 "தாத்தா.... மெதுவா திருப்பி படுக்க வைக்கிறேன். அசையாம படுங்க, பெட்ஷீட்டை மாத்திடுறேன்..." என்றாள் டெட்டால் பாட்டிலை கையில் எடுத்தபடி.

அந்த மனிதரின் கண்களில் இருந்து கசிந்த கண்ணீர், தலையணையை நனைத்திருந்தது.

 - லதா ரகுநாதன்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close