[X] Close

ஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..!


oru-nimida-kadhai

  • kamadenu
  • Posted: 09 Jul, 2018 12:33 pm
  • அ+ அ-

 

சிவா மிகவும் பதைபதைப்புடன் இருந்தான். அட்ரினல் சுரப்பிகள் ஓவர்டைமில் வேலை செய்து கொண்டிருந்தன. இருப்பா  அல்லது இறப்பா அளவிற்குப் பெரிய விஷயம் இல்லை.

ஆனாலும் இருப்பா, கல்தாவா என்பது அந்த முப்பது வயது, வேலை இல்லாமல் இப்போது ஒரு ட்ரெய்னியாக எடுக்கப்பட்டு, இன்னும் சில வாரங்களில் வேலை நிச்சயமாக்கப்படும் நினைப்பில் தெருக் கோடி சாரதாவை அடிக்கடி பார்த்து,  அசட்டுத்தனமாக இளித்து, எதிர்பார்ப்போடு காதலைச் சொல்ல நினைத்தவனுக்குப் பெரிய விஷயமாகத்தான் இருக்கும்.

சென்ற வாரம்தான் தலைமை எடிட்டர் காது குடைந்த சுகத்தில் மூழ்கி இருந்த வேளையில், அவனையும் ராஜாவையும் அழைத்தார். சுகானுபவத்தில் பாதி கிறங்கிய கண்களோடு அவர் வாயிலிருந்து விழுந்த முத்துக்கள் இவை...

" ஏலே ரெட்டப்பயலுகளா.... பப்ளிஷர் முதலாளி ஒரு அசிஸ்டெண்ட் எடிட்டர் போஸ்ட்டுக்கு சம்மதிச்சுட்டான்.. கேட்டீயளா. நான் சொல்லிட்டேன், ஆமாம், புதுசா ஒரு பயலை எடுத்தாரவேண்டாம். போன வாரம் சேர்ந்த இந்த ரெண்டு பயலுக்கும் ஒரு டெஸ்ட்டு வெச்சுப் பாத்து, ஒருத்தனை பர்மனெண்ட் செஞ்சிடுவோம்னு.... "

சிவா ராஜாவைப்பார்க்க, ராஜா சிவாவைப்பார்க்க ஒரு நிமிடம் அங்கே நீயும் நானுமா கண்ணா சீன் அரங்கேற்றியது.

" இந்தா....ரெட்டை பேருக்கும் இத்தான் சவாலு. இந்த வார மேகசீனுக்கான மேட்டர் இந்தா இருக்கு. ரெண்டு பேரும் தனியா இத்த எடிட் செஞ்சு எடுத்தாங்க...அத்த வெச்சு முடிவு செஞ்சிடுவோம்."

அப்போது சுரக்கத்தொடங்கிய அட்ரினல்தான் இதோ இப்போது கைகளில் இருவரின் எடிட்டட் மேட்டரை கைகளில் வைத்தபடி பார்க்கும் சீப் எடிட்டரை பார்க்கும் போது அதிகரித்திருந்தது.

அவனுக்கு நம்பிக்கை இருந்தது, தான்தான் தேர்ந்தெடுக்கப் படுவோம் என்று.

பின்னே... சும்மாவா வேலை செய்திருக்கிறான்.

" அண்ணே ....முனுசாமிண்ணே.... நீங்கதான் இங்க பல வருஷமா இருந்துருக்கீங்க...நம்ம சீப் எடிட்டருக்கு என்ன பிடிக்கும்.... "

" அட.. என்ன பயப்பா நீ...இன்னுமா தெரிஞ்சு வெச்சுக்கல்ல .... தமிழ் தான் ... ஆமாம்பா ... அய்யாவோடு உசிரே தமிழ்லதான் இருக்கு ... தெரியுமில்லை ...."

" நண்பா.. நீ எனக்கு சீனியர்...போட்டோகிராபரா சீப் கூட நிறைய இடத்துக்குப்போயிருக்கே. அவருக்கு என்ன பிடிக்கும்?"

" மச்சி, தமிழ்தான் அவருக்கு ரொம்ப பிடிச்சது. ஆங்கிலம் கலக்காமல் சுத்தமான தமிழ்ல எழுதினா ஆள் க்ளோஸ்..."

இப்படி நிறைய ஹோம்வொர்க் செய்து அவன் தெரிந்து கொண்டது.... சுத்தமான , அழகான, ஆங்கிலம் கலக்காமல் பேசினால் அல்லது எழுதினால் சீப் எடிட்டரை இம்ப்ரெஸ் செய்யமுடியும்.

இரண்டு நாட்கள் இரவு தூங்காமல் எடிட் செய்யக்கொடுத்த செய்திகளை மிக அழகாகத் திருத்தி, பத்தியில் இட்டு, பத்திரிகையின் முப்பது பக்கத்துக்குள் அடக்கினான்.

அதுதான் இப்போது சீப் எடிட்டர் பார்வையில்.

" அட ரெட்டப்பயலுங்களா... இப்படி என்ன அவஸ்தையிலே விட்டுட்டீங்களே... நா என்னா முடிவெடுக்க...?"

சிவா ராஜாவின் பக்கங்களை கையில் எடுத்தான்.

" சார்.... இங்க பாருங்க... இந்த கதையோட டைட்டில்.. இரண்டு வார்த்தைக்கு நடுவே ஒற்றுமிகும் "ப்" விட்டுப் போயிருக்குது.."

சீப் எடிட்டர் சடாலென்று அதைப் பிடித்துக்கொண்டார்.

" ஆமாம்ல....அட..இது தப்புதான்னேன்..."

ராஜா மெதுவாகச் சொன்னான்.

" அய்யா... இது தெரியாம நடக்கலை... இந்த ஒற்று எழுத்தைப்போட்டா மேலே இடம் நிறைய தேவைப்படுது. அதான் எடுத்துட்டேன். அங்க ஒரு பத்தி சோப்பு விளம்பரம் சின்னதாப் போடலாம்.. இதப்போலவே உள்ளேயும் செஞ்சிருக்கேன்...அதுலேயும் விளம்பரம் போட முடியும்.... "

சீப் எடிட்டர் முகம் மலர்ந்தார்..

" இதுல்ல புது திங்கிங் ...பாரு, விளம்பரம் அதிகமானா நம்ம ப்ரேக் ஈவன் லைனைத்தாண்டி எங்கியோ இல்ல மார்ஜின் போயிடும்.... அட... இந்த ஒற்றெழுத்து இப்போ யாரும் போடுதில்ல தெரியுமோ .... அதான் அர்த்தம் புரியுதுல்ல அது இல்லாமலே. . அப்புறம் அது இன்னாத்துக்கு ?"

சிவாவிற்குப்புரிந்தது  வேலை யாருக்கு என்று . மற்றுமொன்றும் புரிந்தது ...மொழிக்கான சேவையும் தேவையை ஒட்டியே....!!!

 - லதா ரகுநாதன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close