[X] Close

சிறுத்தையைப் பிடித்த நீலன்!


short-story-of-neelan

  • Team
  • Posted: 03 Mar, 2018 07:59 am
  • அ+ அ-

தேக்கம்பட்டி கிராமம் மேற்குமலை அடிவாரத்துக்கு அருகில் இருக்கிறது. சில நாட்களாக அந்த ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் இரவு நேரத்தில் ஆடு, கோழிகளை அடித்துச் செல்வதாகவும் தகவல் பரவியது. பயத்தில் சிலர் வெளியூர்களுக்குச் சென்று விட்டனர்.

சிறுத்தையைப் பிடிப்பதற்கு வன அலுவலகர்கள், காவல்துறையினருடன் பொதுமக்களும் முயற்சி செய்துகொண்டிருந்தனர்.

அந்த அடிவார வனம் செடிகளும் மரங்களுமாகக் காட்சியளிக்கும். உச்சிமலையிலிருந்து பாய்ந்துவரும் கானாற்றில் குளிப்பதற்குச் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மக்கள் வந்துகொண்டே இருப்பார்கள். விடுமுறை நாட்களில் ஆற்றங்கரையில் சமைத்துச் சாப்பிட்டு, ஓய்வெடுப்பார்கள். மரங்களில் இருந்து பழங்களைப் பறித்து உண்பார்கள். குரங்குக் கூட்டங்களைக் கண்டு ரசிப்பார்கள். சிறுத்தை பயத்தால் ஒருவரும் இந்தப் பக்கம் இப்போது வருவதில்லை.

கண்காணிப்பு கேமரா பொருத்தினார்கள். இரவில் பாதுகாப்புக்கு ஆள் போட்டார்கள். எதிலும் சிறுத்தை சிக்கவில்லை. ஒருவாரமாகியும் சிறுத்தையைப் பிடிக்க முடியாததால், பொதுமக்கள் கோபப்பட்டனர்.

“சார், நேற்று இரவு கூட ஒரு ஆட்டுக் குட்டியைச் சிறுத்தை தூக்கிட்டுப் போயிருக்கு. மக்கள் கிட்ட என்ன சொல்றதுன்னே தெரியலை” என்றார் ஓர் இளம் வன அதிகாரி.

“எனக்கும் ஒண்ணும் புரியலை. விஷயம் நாளுக்கு நாள் சிக்கலாகுது” என்றார் உயர் அதிகாரி.

அப்போது இரண்டு மாணவர்கள் வந்தார்கள்.

“சார், ராஜபாளையம் மலையடிவாரம் பக்கம் நீலன் என்று ஒரு மலைவாசிச் சிறுவன் இருக்கான். அவன் ரொம்பவும் கெட்டிக்காரன். காடுகளைப் பற்றி அவனுக்கு அத்தனை விஷயங்களும் தெரியும். அவனால் நிச்சயம் சிறுத்தையைப் பிடிச்சிடமுடியும். ஒரு கார் ஏற்பாடு செஞ்சீங்கன்னா நாங்க அவனை அழைச்சிட்டு வந்துடுவோம்” என்றார் ஒரு மாணவர்.

“என்னப்பா சொல்றீங்க? ஒரு சிறுவனால் சிறுத்தையைப் பிடிக்க முடியுமா? விளையாடாதீங்கப்பா” என்றார் இளம் அதிகாரி.

“இதையும் செஞ்சு பார்த்துடலாம். மூர்த்தி, இவங்க கூடப் போய், நீலனை அழைச்சிட்டு வந்துடுங்க” என்றார் உயர் அதிகாரி.

நான்கு மணி நேரத்துக்குப் பிறகு நீலன் வந்துசேர்ந்தான். எளிமையான அவனது தோற்றத்தைக் கண்டதும் அதிகாரிகளுக்கு நம்பிக்கை வரவில்லை. அவர்களுக்கும் வேறு வழியில்லாததால், நீலனுக்கு மசால் தோசை வாங்கிக் கொடுத்துவிட்டு, யோசனை கேட்டார்கள்.

“ரெண்டு கிலோ இறைச்சியை வாங்கிக் கொடுங்க. நான் மட்டும் காட்டுக்குள் போறேன். சிறுத்தையைப் பிடிச்சிட்டேனா விசில் ஊதுவேன். நீங்க வந்து தூக்கிட்டுப் போயிடலாம்” என்றான் நீலன்.

“என்னது, ரெண்டு கிலோ இறைச்சியை வச்சுப் பிடிச்சிடுவீயா? கொஞ்சமாவது நம்புற மாதிரி சொல்லுப்பா” என்றார் உயர் அதிகாரி.

“சார், நான் பிடிக்கலைன்னா ஏன்னு கேளுங்க” என்றான் நீலன்.

எல்லோரும் காட்டுக்குச் சென்றார்கள்.

“இனி நான் மட்டும் உள்ளே போறேன். நீங்க பத்திரமா இங்கேயே இருங்க” என்ற நீலன், வேகமாகச் சென்றான்.

ஒரு மரத்தில் ஏறி அமர்ந்தான். ஊதுகுழலில் பச்சை இலையில் ஊறப்போட்ட காக்கை முள்ளைப் பொருத்தினான். பிறகு இறைச்சி பையைக் கீழே வீசினான். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இறைச்சியின் வாசனைக்கு சிறுத்தை வந்தது. அது ஆர்வமாகச் சாப்பிடும்போது, ஊதுகுழலை எடுத்து நீலன் வேகமாக ஊதினான். காக்கை முட்கள் சரியாகச் சிறுத்தையின் மீது பாய்ந்தன. சில நிமிடங்களில் சிறுத்தை மயங்கி விழுந்தது. மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தான். சிறுத்தையைப் பரிசோதித்தான். பிறகு விசிலை எடுத்து ஊதினான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு வனத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் வந்துசேர்ந்தனர். மயங்கிய சிறுத்தையைக் கண்டதும் நீலனைக் கட்டிப்பிடித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

“நீலா, சின்னப் பையனா இருந்தாலும் வனம் பற்றியும் வன உயிரினங்கள் பற்றியும் உனக்கு அனுபவ அறிவு அதிகம் இருக்கு. இப்போதைக்கு இந்தச் சன்மானத்தை வைச்சிக்க” என்று ரூபாய் நோட்டுகளைத் திணித்தார் உயர் அதிகாரி.

“வேண்டாங்க. என்னால முடிஞ்ச உதவியைச் செய்திருக்கேன். அவ்வளவுதான். இதுக்கு எதுக்கு சன்மானம்?” என்றான் நீலன்.

“சன்மானம் இல்லை, இது எங்க அன்புப் பரிசு. வச்சுக்க. உன்னுடைய அறிவுக்கும் உழைப்புக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கணும்” என்ற உயர் அதிகாரி, சிறுத்தையுடன் சேர்த்து நீலனைப் படம் எடுத்துக்கொண்டார்.

மறுநாள் செய்தித்தாள்களில் ‘சிறுத்தையைப் பிடித்த சிறுவன்’ என்ற தலைப்பில் நீலன் பற்றிய செய்திகள் வெளிவந்தன. தேக்கம்பட்டி கிராம மக்கள் நீலனுக்கு நன்றி சொல்வதற்குக் கிளம்பினார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close