[X] Close

ஒருநிமிடக் கதை: டைம்..!


oru-nimida-kadhai-time

  • kamadenu
  • Posted: 25 Jun, 2018 09:09 am
  • அ+ அ-

 

அங்கே இருந்த இருக்கைகள் யாவையும் யாரோ ஒருவரால் இறுக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. மணிக்கணக்காக இப்படித்தான் இருக்கிறது. எழுந்து, இருக்கையில் கைக்குட்டை அல்லது கையில் இருந்த ஃபைல் என்று இடத்தை பத்திரப்படுத்தி பின் ரிசப்ஷனுக்குச் சென்று, ஏதோ விசாரித்து வந்தார்கள்.

என்ன கேட்கப்பட்டது என்பதை அறிய கம்பசூத்திரம் தெரிய வேண்டாம், கேட்டது காதுகளில் விழவும் வேண்டாம். வேறு வேறு தொனிகளில், வேறு வேறு மொழிகளில், வேறு வேறு டெசிபலில் இது ஒன்றுதான் கேட்கப்பட்டிருக்கும் …

“ டாக்டர் என்னை எப்போ கூப்பிடுவார்?”

காத்திருப்பின் பாரம் அங்கே கருமேகமாகச் சூழ்ந்து வேகமாக அழுத்திக் கொண்டிருந்தது.

சாம் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் சுவாமிநாதன் எள்ளாய் பொரிந்துகொண்டிருந்தார். பக்கத்தில் உள்ளவர் சிலரிடமும் பேசி முடித்துவிட்டார். அது போதாமல் ரிஸப்ஷனில் நின்றிருந்த அந்தச் சின்னப் பெண்ணிடம் சென்றார்.

“ஏம்மா… பண்ணண்டுக்கு அப்பாயிண்ட்மெண்ட். வாங்கன்னு சொன்னீங்க. மணி பாருங்க மூணு. விளையாடறீங்களா…வேலை இல்லாதவன்னு நினைச்சீங்களா? இத்தனை நேரம் வீணாப்போயிடுத்து”

 “சார், அர்ஜெண்ட்டா ஒரு ஆபரேஷன். டாக்டர் இப்போதான் வந்தார். நீங்க மூணாவது. இன்னும் அரை அவர்லே பாத்துடலாம் சார்.”

“இது இனெஃபிஷென்ஸி டு தி கோர்… ஃபோன் பண்ணி சொல்லலாமில்ல… நேரத்தை வீணடிச்சு…”

நிறுத்தாமல் கத்திக்கொண்டே இருந்தார் நேரத்தைப்பற்றியும், அதன் உபயோகம் பற்றியும்!  உள்ளே போகும்வரை.

ஆபீஸ் உள்ளே நுழைந்த சாமிநாதனிடம் அவர் பிஏ..

“சாம்…. ஒரு எக்ஸ் எம்ப்ளாயி. காலையிலே பத்து மணிக்கு வரச்சொல்லி இருந்தீர்களாம். அவர் வெயிட்டிங்…”

 “ என்ன விஷயமாம்… இப்ப என்ன…?”

“ நாம் சஸ்பெண்ட் செய்தோமே போன வாரம். அவர்தான். ரிலீவிங் ஆர்டரில் உங்க கையெழுத்து வேண்டும். நம்ம கம்பெனி ரூல்ஸ் படி கையெழுத்துக்கு முன்னாடி, உங்களோட அவர் பேச வேண்டும். பாவம். நாம்தான் இன்று வரச்சொல்லி இருந்தோம். பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட கடைசி நாளாம். இந்த பணம் செட்டில் ஆகி வந்தால்தான் முடியுமாம். பணத்திற்கு வேறு ஏற்பாடும் செய்ய முடியவில்லையாம். அவஸ்தைப் படுவதைப் பார்க்க பாவமாக இருக்கு. வரச்சொல்லவா…?”

“ஓஹோ... அவன் புகார் சொல்ல, நீ கேட்டு தலை ஆட்ட, நன்றாக பொழுது போனதோ? நான் என்ன வேலைவெட்டி இல்லாம சும்மா இருக்கேனா..? போ… அவனை நாளைக்கி வரச்சொல்….  ஆயிரம் வேலை இருக்கு. டைம் இஸ் ப்ரெஷியஸ்…”

உண்மைதான் .நேரம் பொன்னானது… ஆனால் அது அவரவருக்கு மட்டும்தான்.

 - லதா ரகுநாதன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close