[X] Close

ஒருநிமிடக் கதை: காதால் கேட்பதை நம்பாதே!


oru-nimida-kadhai-kaadhal-ketpadhai-nambadhe

  • kamadenu
  • Posted: 18 Jun, 2018 11:28 am
  • அ+ அ-

லதா ரகுநாதன்

பரத்திற்கும் அனந்திற்கும் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது.

" இந்த அப்பா காது டமாரமாகத்தான் போயிடுத்து"

ஆம் என்று அனந்த் அவசரமாகத் தலையசைத்தான்.  

"நேற்று இந்த மாதச் செலவு சற்றே அதிகம் ஆகும். அதனால் அதிகமாக பணம் தேவைப்படும் என்பதைச் சொல்ல முயன்று என் தொண்டைத்தண்ணி வத்திப்போனதுதான் மிச்சம்" அனந்த், தன் பக்கக் கதையைச்சொன்னான்.

"ஆமாண்டா.. ஹியரிங் ஏய்டெல்லாம் ஒரு பிரயோசனமும் இல்லை" பரத் அதோடு நிறுத்தாமல் செவிடு, கிழம், பணப்பிசாசு, சனியன் போன்ற அழகிய தமிழ் வார்த்தைகளுடன் அப்பாவின் பல கதைகளை அவிழ்த்துவிட்டான்.  

ராமலிங்கம் காது கேட்காதவர்களுக்கான பிரத்தியேக அசட்டுப் புன்னகையுடன் தலையாட்டிக்கொண்டிருந்தார்.

"முட்டாள் கிழம்.... நாம என்ன பேசுறோம்னு தெரியாம தலையைத் தலையை ஆட்டுது பார்..." இருவரும் எரிச்சலோடு அப்பாவைப் பார்த்துப் புகைந்தனர்.

"காது கேட்காவிட்டாலும் பணத்தைக் கெட்டியா கையிலே புடிச்சுகிட்டே இல்ல இருக்கு...? ’’

"ஆமாம், எப்போ மண்டயைப்போட்டு, எப்போ நம் கைகளுக்கு பணம் வந்து, எப்போ நாம நிம்மதியா செலவு செய்து.....அது கிடக்கு. கனவாகத்தான் போகும் போல... சில சமயம் கிழத்தின் தலையிலே பெரிய கட்டையால அடிச்சா என்னன்னும் தோணுது..."

அவர்கள் இருவரும் ஆபீஸ் கிளம்பிச்சென்றதும் காரை எடுத்துக் கொண்டு டாக்டர் செந்திலிடம் சென்றார்.

"வாங்க ராமலிங்கமய்யா. என்ன காது கேட்காதவர் போல நடிப்பது சிரமமாக இருக்கோ?"

" ஆமாம் டாக்டர், அவுங்க இரண்டு பேரும் பேசும் பேச்சைக் காதாலே கேக்க முடியலை. சிலநேரம் நிஜமாகவே காது கேக்காமல் போனா நல்லா இருக்குமேன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.."

" கூல் சார், ஒரு டாக்டரா அதுவும் உங்கள் ஃபேமிலி டாக்டரா இப்படி ஒரு பொய்யை நான் சொல்லி இருக்கக்கூடாது. ஆனாலும் நீங்க அவங்களைப்பற்றி தெரிஞ்சுக்கத்தான் இந்த ஐடியா கொடுத்தேன். பாருங்க உங்க பசங்க உங்ககிட்ட அன்பா இருக்காங்கன்னு சந்தோஷப்பட்டீங்க. இதுதான் அவுங்க உண்மையான முகம்."

ராமலிங்கம் ஒரு முடிவோடு எழுந்தார்.

"ரொம்ப நன்றி டாக்டர். உங்க ப்ரொஃபஷனல் எதிக்சையும் மீறி எனக்காக இந்த உதவியை செஞ்சீங்க. அதுக்கு நான் ஏதாவது செய்யணும்டாக்டர். என் சொத்து முழுவதையும் உங்க நர்சிங் ஹோமிற்கு நன்கொடையா தர முடிவு செஞ்சுட்டேன். என் உயிலை மாற்றி எழுதப்போறேன் டாக்டர்" கைகளிலிருந்த ஹியரிங்க் ஏய்டை தூக்கி வீசியபடி ராமலிங்கம் கிளம்பினார்.  

மிகவும் அற்புதமாகச் சிரித்துக்கொண்டே டாக்டர் செந்தில் தனக்குள் சொல்லிக்கொண்டார் ’இதை....இதை....இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்”

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close