[X] Close

ஒரு நிமிடக் கதை: வெட்டாட்டம்


one-minute-story

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 May, 2018 15:45 pm
  • அ+ அ-

காலை எட்டு மணிக்கே சாலை முழுவதும் நிரம்பி வழிந்த அதீத வாகன நெரிசலில் ஸ்கூட்டரை ஒடித்துத்திருப்பி, திருப்பி ஒடித்து ஆனந்தியின் வீட்டு வாசலை அடைந்து, பீப்பிட்டபோது சலனமின்றி நின்றது வாசல்.

ஸ்டாண்டில் இட்டு உள்ளே சென்றாள்.

"வாருங்கள். ஆனந்தி புடவை மாற்றுகிறாள்" என்று கைகளில் பேப்பரைத் திணித்துவிட்டு டைனிங் டேபிளுக்குச்சென்றான் ஆனந்தியின் கணவன்.

ஒரு ஒற்றைக்கல் சுவர் தடுப்பிற்குப் பின் இருந்த சாப்பாட்டு டேபிளில் ஆனந்தியின் கணவன் மற்றும் குழந்தை அமர்ந்திருக்க ஊரிலிருந்து வந்திருந்த ஆனந்தியின் மாமியார் சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தார்.

உறிஞ்சிச் சாப்பிடும் உர் சத்தத்திற்கு நடுவே

"அம்மா, பிரமாதம். இப்படிச் சாப்பிட்டு எத்தனை மாசம் இருக்கும். அம்மா கை மணம் தனிதான். ஆனந்திக்கு வரவேமாட்டேங்குது. மண்ணு போல எத்தையோ சமைத்து தர ,நாங்களும் விழுங்கித்தொலைக்கிறோம்...இல்லையாடா கண்ணு.."

பதில் தெரியாமல் குழந்தை விழித்து பெரிய உண்டையாக ஒரு கவளத்தை வாயில் திணித்துக்கொண்டது.

அவளுக்கு லேசாகக் கோபம் வந்தது. ஆனந்தியின் கை பக்குவம் அனைவரும் அறிந்தது. மிக அற்புதமாகச் சமைப்பவள். அதுவும் கணவனுக்கு குழந்தைக்கு என்று பார்த்துப்பார்த்து செய்பவள்.அவள் கணவன் பேசுவது அவள் காதுகளில் விழுந்திருந்தால்...?

" அட.... நீ சீக்கிரம் வந்துட்டயா.... இல்லை நான் லேட் செஞ்சுட்டேனா , வா.. சீக்கிரம் போகலாம். மேனேஜர் முசுடு சத்தம் போடும்"

இருவரும் அவசரமாகச் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.

முதுகில் சாய்ந்தபடி பாட்டு ஒன்றை முணுமுணுக்கும் ஆனந்தியிடம் அவள் வீட்டில் நடந்ததைச் சொல்வதா வேண்டாமா? குழப்பம்.

" என்ன... ஓயாமல் பேசிகிட்டே வருவே, இன்றைக்கு மௌன விரதமா?"

மிகவும் அருகே இடிப்பதுபோல் வந்த கார்காரனை திட்டியபடி

" இல்லே அனு, சொல்வதா வேண்டாமான்னு மனசுக்குள்ளே ஒரு ஷாட் பூட் த்ரீ "

" ஷாட் இட் அவுட்"

" உன் வீட்டில் நீ வருவதற்குக் காத்திருந்தேன். அப்போது உன் கணவர் அவர் தாய் கை சமையலை மிகவும் உயர்த்தி உன் சமையலை மட்டப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார். அதான்.."

ஆனந்தி பெரியதாக நகைத்தாள்

" என்ன போட்டு கொடுக்கிறியா?"

அவளுக்குச் சுருக்கென்றது.

இண்டிகேட்டர் போட்டுப் பின் ஓர் ஓரமாக ஸ்கூட்டரை நிறுத்தினாள்.

" ஸ்டுப்பிட்....நான் அப்படிப் பட்டவளா?"

ஆனந்தி புன்முறுவலுடன்

"அப்பா...முகத்தில் கோபத்தைப்பார் , சாரிடா சும்மா சீண்டினேன்."

" சரி என் கோபம் இருக்கட்டும் . உனக்கு இந்தப் பேச்சு கோபம் ஏற்படுத்தவில்லை ..?"

" கண்ணு... இது ப்ளான் செய்யப்பட்ட பேச்சு. உனக்குத் தான் தெரியுமே என் மாமியாருக்குத் தெரிந்த ஒரே வேலை சமையல் மட்டும்தான். என்னைப்பார்க்கும்போது நான் ஆபீஸ் போவது , சமையலை நன்றாகச் செய்வது , குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது...இப்படி எல்லா வேலையும் செய்யும்போது இங்கே வரும் போது ரொம்பவுமே அந்நியமாக நினைக்கத் தொடங்கிவிடுகிறார் மனதில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால். வயதானதால் சமையலும் சுமாராகத்தான் செய்கிறார். எல்லா இயலாமைகளும் சேர்ந்து என் மீது வேண்டாத கோபமும் எரிச்சலும். அதான் யோசித்தோம். வயதானவருக்கு மனசுக்கு இதம் தன் மகனுக்கு இன்னும் அவரால் தான் பிடித்ததைச் செய்து தர முடியும் எனும் நினைப்பு தான்.அதனால் தான்..."

அவள் லேசாக புன்முறுவலிட்டாள்.

" அம்மாடி...கணவனும் மனைவியும் வடிவேலு சொல்லும் ரொம்ப நல்லவங்கம்மா தான் . ஆனால் கொஞ்சம் யோசனை செய், நூறு தரம் ஒரு பொய்யைச்சொன்னால் அதுவே உண்மை ஆகிவிடும்.

இந்தப் பேச்சைக்கேட்கும் உன் குழந்தை இன்னும் சில நாட்களில் மனதில் நினைக்கத்தொடங்கும்...அம்மாவிற்கு சமைக்கவே வராது என்று... சரி ஒரு பெர்சண்ட் தான் இப்படி நடக்கும் என்று வைத்துக்கொண்டாலும் , ஒருவரை குறைத்துபேசி மற்றவரை சந்தோஷப்படுத்துவது சரி என்று தோன்றவில்லை"

ஆனந்தி யோசிக்கத்தொடங்கினாள்.

- லதா ரகுநாதன்

lrassociates@gmail.com

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close