[X] Close

ஒரு நிமிடக் கதை: கடி


one-minute-story

  • kamadenu
  • Posted: 29 Apr, 2018 17:35 pm
  • அ+ அ-

"என்னது...உடம்பு அரிக்கிறதா....எரிச்சலா...அரிப்பா?"

கோமதியிடம் நூறாவது முறையாகக் கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விகளுக்கான ஆரம்பம் நேற்று அவள் சொன்ன சில வார்த்தைகள்...அவை

" என்னன்னு தெரியலை... ஒரு வாரமாகவே இரவு முழுவதும் உடல் அரிக்கிறது. தூங்கப் போகும்போது இருப்பதில்லை...."

சொல்லிமுடிப்பதற்குள் தலைக்குத்தலை முடிவுகள் சொல்லப்பட்டது..

" கோமதி... வீட்டிலே சுகர் ஹிஸ்டரி இருக்கு...எனக்கென்னவோ இது அதன் அறிகுறி போல்தான் தெரிகிறது" இது கணவர்.

" அம்மா, எதைச்சாப்பிட்ட....எனக்கென்னவோ அலர்ஜிதான்னு தோணறது..." இது மகன்.

" மஞ்சள்காமலைக்குக்கூட உடல் அரிப்பு வரும்" இது மருமகள்.

இப்படிப் பல தீர்வுகளுக்குப்பின் முதலில் கூறப்பட்ட கேள்வி கடைசி முறையாக டாக்டர் வைகுண்டத்தினால் கேட்கப்பட்டது .

" சரி...முதலில் சுகரை எலிமினேட் செய்து பார்ப்போம். " வேகமாக டெஸ்டிற்கு எழுத்கிக்கொடுத்தார்.

" டாக்டர் , வரிசையா நிறைய டெஸ்டுக்கள் போட்டுருக்கீங்க..?"

" ஆமாம், ஒரு.வாரமான்னு சொல்றீங்க . நிறைய டைம் வேஸ்ட் செய்ய முடியாது பாருங்க....அதான் சைமல்டேனியஸ்ஸா... லிவர் ஸ்கான், யூட்ரஸ் ஸ்கான், விடமின் டெஸ்ட், ப்ளட் டெஸ்ட்ன்னு எழுதிக்கொடுத்திருக்கிறேன். மொத்தம் பத்தாயிரம்.கார்ட்டுலே கூட பே பண்ணலாம். இப்ப

செஞ்சுடுங்க.... நெக்ஸ்ட்.. ." தன் பிழைப்பைத்தொடர்ந்தார்.

மெதுவாகக் கோமதி கணவரின் கைகளைப்பிடித்து அழுத்தினாள்.

" எனக்கென்னவோ இது இப்பத்தேவை இல்லைன்னு படறது. வாங்க... நாளைக்கு வருவதாகச்சொல்லிப் போய்விடலாம்."

" போடி பயித்தியம்....எங்கே போனாலும் இப்படித்தான். உடம்புக்கு வரக்கூடாது. வந்துவிட்டால்......" பேச்சை முடிக்காமல் நிறுத்தினார்.

டெஸ்ட் ரிசல்டோடு மறுபடியும் உள்ளே அனுப்பப்பட்டனர்.மிகவும் சுகமாக காதைக்குடைந்து கொண்டிருந்தார் டாக்டர்.ஒவ்வொன்றாக ரிப்போர்ட் ஒவ்வொன்றையும் உச் கொட்டிக்கொண்டே தள்ளினார்.

" எல்லாம் சரியா இருக்கே... ஏம்மா.... கரெக்டா சொல்லுங்க. எப்போது அரிப்பு இல்ல எரிச்சல் வருதுன்னீங்க...."

" டாக்டர், படுத்துக்கப்போகும்போது சரியாகத்தான் இருக்கு. பத்து மணிக்கு தூங்கப் போயிடுவேன்.நடுவிலே ஒரு பன்னிரண்டு மணிக்கு ரெஸ்ட்ரூம் போயிட்டு வருவேன். அரிப்பு அப்புறமாகத்தான் டாக்டர் வருது.... _அதுவும் கை கால்களில்தான் அதிகமாக "

" ஐ காட் இட்....அம்மா உங்க யூரினரி ட்ராக்ட்லேதான் இன்ஃபெக்ஷன். நாளை காலைலே வெறும் வயத்திலே வந்துடுங்க....வேற சில டெஸ்ட் எடுத்துடலாம்.. .கொஞ்சம் சீரியசா இருக்குமோன்னு சந்தேகம்...எனிவே... காட் இஸ் க்ரேட்.. சார் ,நீங்க ஒரு பத்தாயிரத்திற்கு ரெடி பண்ணிக்குங்க... "

கோமதிக்கு சடாரென்று உடம்பு வலுவிழந்ததுபோல் தோன்றியது. ஏதாவது டாக்டர் சொல்வதுபோல் சீரியசா

இருக்குமோ...தள்ளாட்டத்தோடு வீடு வந்து சேர்ந்து படுக்கையில் விழுந்தாள்.

" ஏம்மா....ஒடம்பு முடீலியா...நல்லாத்தானே இருந்த, சரி ரெஸ்ட் எடு... ஆமா...நானும் ஒரு வாரமா சொல்லனும்னு நினைச்சு மறந்துடறேன்..இந்த அட்டாசிடு கக்கூச் கதவு ஒரு வாரமா நான் காலையிலே பெருக்கோசொல்ல திறந்து கிடக்கு... கை கால புடுங்கி எடுக்குது. வூடு முழுக்க கொசு நெட் போட்டே...கக்கூசுக்கு போட்டியா....பாரு எப்படி கொசு உள்ளாற வந்திருக்கு பார்.. இனிமேலோ மூடி வெய்..."

குப்பையை பக்கெட்டில் அள்ளியபடியே துடப்பத்தை ஆட்டியபடி சென்றவளுக்கு பின்னால் அதிர்ச்சியில் வாயைப்பிளந்து அமர்ந்திருந்த கோமதி கண்களில் படத்தான் இல்லை.

-லதா ரகுநாதன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close