[X] Close

சேவாக் செய்த நெகிழ்ச்சி உதவி: மீண்டும் ஃபார்முக்கு திரும்பி அர்மான் ஜாபர் முச்சதம் விளாசி அர்ப்பணிப்பு


sehwag-help-to-jaffer

அர்மான் ஜாபர், வீரேந்திர சேவாக் : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 17 Nov, 2018 15:26 pm
  • அ+ அ-

இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் செய்த நெகிழ்ச்சி உதவியால், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அர்மான் ஜாபர் காயத்தில் இருந்து மீண்டு 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சிகே நாயுடு கோப்பையில் முச்சதம் விளாசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரின் உறவினர் அர்மான் ஜாபர். 2010-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கைல்ஸ் ஷீல்ட் போட்டியில் அர்மான் ஜாபர் தனது 13 வயதில் 498 ரன்கள் விளாசி சாதனை புரிந்தார். அதற்கு முன் சர்பிராஸ் கான் 439 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. அதை அர்மான் ஜாபர் முறியடித்து அனைவராலும் பேசப்பட்டார்.

2015-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 3 முறை இரட்டைச் சதம் விளாசினார் அர்மான் ஜாபர். 2016-ம் ஆண்டு 19-வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

ஐபிஎல் போட்டியில் தடம்பதித்த அர்மான் ஜாபர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும் இடம் பெற்றார். இந்நிலையில், முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட அர்மான் ஜாபர் 15 மாதங்களாக கிரிக்கெட் போட்டி எதிலும் பங்கேற்காமல் இருந்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை அர்மான் ஜாபர் சந்தித்துள்ளார். அப்போது, அவரிடம் உடல்நிலை குறித்தும், என்ன செய்கிறாய் என்றும் சேவாக் விசாரித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட காயத்தையும், அதன் பின் கிரிக்கெட் பயிற்சி எடுக்க முடியாததையும் கூறி ஜாபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு போன் செய்த சேவாக், அர்மான் ஜாபர் குறித்து கூறி அவருக்கு மருத்து சிகிச்சையும், பயிற்சியும் கிடைக்க ஏற்பாடு செய்தார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஜாபர் சேர்ந்த பின், அவருக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்தும் சேவாக் கேட்டறிந்து தேவையான உதவிகளைச் செய்துள்ளார்.

இதனால் மீண்டும் உடல்நிலை சீரடைந்து, பேட்டிங் ஃபார்முக்கு வந்த அர்மான் ஜாபர் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சி.கே.நாயுடு கோப்பையில் சேவாக் போன்று அதிரடியாக ஆடி 367 பந்துகளில் (300 ரன்கள்) முச்சதம் விளாசியுள்ளார். இதில் 20 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும்.

சேவாக் தனக்குச் செய்த உதவிகுறித்து அர்மான் ஜாபர் கூறியதாவது:

''முழங்கால் காயத்தால் நான் கடந்த 15 மாதங்களாக விளையாடாமல் இருந்தேன். அப்போது, ஒரு ஹோட்டலில் தற்செயலாக சேவாக் அண்ணனைச் சந்தித்தேன். அப்போது என்னைப் பற்றி விசாரித்தார். அப்போது காயம் குறித்தும், மீண்டும் பயிற்சியைத் தொடங்குவது குறித்தும் தெரிவித்தேன். உடனடியாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு என் முன்னே செல்போனில் பேசினார். என்னைப் பற்றி தெரிவித்து, மும்பை கிரிக்கெட் அமைப்பின் இணைச் செயலாளர் ஷெட்டியிடம் பேசி எனக்காகப் பரிந்துரைக்க கூறினார். அதன்பேரில் நான் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்றேன்.

என் வாழ்க்கையில் வீரு பாய் (சேவாக்) செய்த உதவியை மறக்கமாட்டேன். வார்த்தைகள் இல்லை. நான் காயம் அடைந்த பின் என்னைப் பற்றி யாரும் சிந்திக்காதபோது, அவர் எனக்காக முயற்சி எடுத்து என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டுக் கொடுத்திருக்கிறார்.

தேசிய கிரிக்கட் அகாடமிக்கு நான் சென்று பயிற்சியில் இருந்தபோது என்னிடம் இருமுறை பேசிய சேவாக், தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடற்பயிற்சி நிபுணர் ஆஷிஸ் கவுசிக்கிடம் பேசி என்னைச் சிறப்புப் பயிற்சி அளிக்கச் செய்தார். நான் மீண்டும் கிரிக்கெட் தளத்துக்கு வந்து சி.கே. நாயுடு கோப்பையில் முச்சதம் அடித்தவுடன் என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல் நபரும் சேவாக்தான். தொடர்ந்து என்னுடன் தொடர்பில் இரு தேவையான உதவிகளைக் கேள் என்று ஊக்கம் அளித்துள்ளார். அவருக்கு என் முச்சதத்தையும், நன்றியையும் தவிர வேறு என்ன கொடுக்க முடியும்?''

இவ்வாறு அர்மான் ஜாபர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close