[X] Close

'கலீல் அகமது மற்றொரு ஜாகீர்கான்': முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கர்சன் காவ்ரி புகழாரம்


kaleel-ahmed-compared-with-zaheerkhan

  • kamadenu
  • Posted: 14 Nov, 2018 17:06 pm
  • அ+ அ-

இந்திய அணியின் புதிய கண்டுபிடிப்பாக வந்திருக்கும் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது, மற்றொரு ஜாகீர்கான் என்று இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்துவீச்சாளர் கர்சன் காவ்ரி புகழாரம் சூட்டியுள்ளார்.

வேகம், துல்லியம், லெத்தில் வீசுவது, ஸ்விங் செய்வது ஆகிய திறமைகளுடன் இந்திய அணிக்குள் வந்திருக்கும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது. கடந்த 2012-ம்ஆண்டு ஜாகீர்கான் ஓய்வுக்குப்பின் வந்த உனட் கட், பரீந்தர் சரண் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களாக இல்லை.

ஆனால், ஆசியக் கோப்பைப் போட்டியிலும், மேற்கிந்தியத்தீவுகள் தொடரிலும் இடம் பெற்ற கலீல் அகமது தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களும் கலீல் அகமதுவின் திறமையை உற்றுநோக்கத் தொடங்கி, பல்வேறு ஆலோசனை களை வழங்கி வருகின்றனர். சமீபத்தில் சோயிப் அக்தர் தொலைப்பேசியில் பேசி, கலீல் அகமது பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஆசியக் கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அறிமுகமான ராஜஸ்தானைச் சேர்ந்த கலீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேற்கிந்தியத்தீவுகள், ஆசியக் கோப்பை ஆகியவற்றில் சேர்த்து 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும் கலீல் அகமது வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், கலீல் அகமதுவின் வருகை இந்திய அணிக்கு மீண்டும் ஜாகீர்கானை அழைத்து வந்திருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கர்சன் கார்வி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து கர்சன் காவ்ரி இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

கலீல் அகமதுவின் வருகை இந்திய அணிக்குப் பிரகாசமான சூழலை ஏற்படுத்தும். வேகப்பந்துவீச்சில் கட்டுப்பாட்டுடன் , லைன்-லென்த்தில் பந்துவீசி, துல்லியத்தன்மையுடன் வீசுகிறார். கலீல் அகமதுவால் பந்தை வேகமாக வீசவும் முடியும், அதேசமயம் பந்தை நன்றாக ஸ்விங் செய்யவும் முடியும். ஏனென்றால், அனைத்து நேரத்திலும் வேகம் என்பது முக்கியமல்ல, ஸ்விங் செய்வதுதான் அவசியம்.

கலீல் அகமது வேகப்பந்துவீச்சில் இன்-ஸ்விங்கையும், அவுட் ஸ்விங்கையும் எளிதாக வீசும் திறமை உள்ளவராக நான் பார்க்கிறேன். மேலும், சூழலுக்கு ஏற்ப பவுன்ஸர் வீசி, நல்ல வேகத்துடன் வீசும் திறமை கொண்டவர். ஜாகீர்கான் ஓய்வுக்குப் பின் இந்திய அணிக்குக் கிடைத்துள்ள மற்றொரு ஜாகீர்கான் கலீல் அகமது என்பதால், அவரைக் காயம் அடையவிடாமல் பார்க்க வேண்டும்.

ஆஸ்திரேலியா செல்லும் கலீல் அகமது, டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், டி20 போட்டியில் மட்டும் தேர்வு செய்திருக்கிறார்கள். டி20 போட்டி, டெஸ்ட் போட்டியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஏனென்றால், டி20 போட்டியில் பந்துவீச்சாளர்கள் எளிதாக செட்டில்ஆக முடியாது. ஆனால், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர் தங்கள் பந்துவீச்சு மூலம் செட்டில் ஆகிவிட முடியும்

டி20 போட்டியில் 4 ஓவர்கள் வீசுவதன் மூலம் எந்தப் பந்துவீச்சாளரும் தன்னை எந்த இடத்திலும் அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. செட்டில் ஆவதும் கடினமானதாகும். ஆதலால், கலீல் அகமதுவை டி20 போட்டியோடு, டெஸ்ட் போட்டியிலும் விளையாட வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். கலீல் அகமதுவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கொடுத்து அதில் சிறப்பாகச் செயல்பட்டால் டெஸ்ட் போட்டிக்கு வாய்ப்பு வழங்கலாம்.

இவ்வாறு காவ்ரி தெரிவித்தார்.

கர்சான் காவ்ரி ஒரு சிறுகுறிப்பு:

இந்திய அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்துவீச்சாளரான காவ்ரி இந்திய அணியில் இடம் பெற்று 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சிறப்பம்சம் என்னவெனில் இவர் புதிய பந்தில் இடது கை வேகம் வீசிவிட்டு, பந்து பழசானதும் இடது கை ஸ்பின்னும் வீசுவார் அப்படி ஒரு போட்டியில் இவர் 5 விக்கெட்டுகளையும் ஸ்பின்னில் கைப்பற்றினார். கர்சன் காவ்ரி என்றாலே ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுனில் கவாஸ்கர் தலைமையில் சென்ற தொடர்தான் நினைவுக்கு வரும். மறக்க முடியாத பவுலிங் ஒன்றை நிகழ்த்தினார் கர்சான் காவ்ரி.

1981ம் ஆண்டு சென்ற போது மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு வெறும் 142 ரன்கள்தான். ஆஸி. கேப்டன் கிரெக் சாப்பல் இரட்டைச் சதங்களுடன் பிரமாத பார்மில் இருந்தார், 142 ரன்கள் இலக்கு என்பது அவருக்கு இடது கையில் ஆடும் இலக்கு என்றெல்லாம் கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டது, கபில்தேவ் காயம் காரணமாக அன்றைய தினம் ஆட முடியவில்லை. மறுநாளும் அவர் ஆடுவாரா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. அப்போது ஜான் டைஸன் என்ற தொடக்க வீரரை வீழ்த்திய கர்சான் காவ்ரி, அடுத்து கிரெக் சாப்பலைப் பார்த்தவுடன் நடுங்கி விடுவார் என்றுதான் அனைவரும் நினைத்தனர், ஆனால் கர்சான் காவ்ரி ஒரு பந்தை லெக் ஸ்டம்புக்கு நேராக வீச கொஞ்சம் ஓவர்காக ஷஃபிள் செய்த கிரெக் சாப்பல் லெக் ஸ்டம்பை இழந்தார், டக் அவுட். 24/3 என்ற நிலையில் அன்றைய ஆட்டம் முடிய, மறுநாள் கபில்தேவை வலிநிவாரணி ஊசி மருந்து போட்டு களமிறக்க ஆஸ்திரேலியா 81 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி அடைந்ததோடு இந்தியா தொடரை 1-1 என்று சமன் செய்த அதிசயமும் நிகழ்ந்தது, கபில்தேவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கர்சான் காவ்ரியின் அந்த கிரெக் சாப்பல் விக்கெட்டை மறக்க முடியாது, அதே போல் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் கடைசியில் பேட்டிங்கில் இறங்கி 86 ரன்களை அதிரடி முறையில் எடுத்ததையும் மறக்க முடியாது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close