[X] Close

ஐசிசி ஒருநாள் தரவரிசை: நெருங்கமுடியாத இடத்தில் கோலி, பும்ரா: ரோஹித் , தவண் உயர்வு


icc-rankings

  • kamadenu
  • Posted: 13 Nov, 2018 17:07 pm
  • அ+ அ-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சில் இந்திய வீரர் பும்ரா நெருங்கமுடியாத இடத்தில் இருக்கிறார்கள்.

அதேசமயம், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் , பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் ஆகியோர் தரவரிசையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர்

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் ஐசிசி ஒருநாள்போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முக்கிய வீரர்கள் சிலர் பந்துவீச்சு, பேட்டிங்கில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றப் பெற்றுள்ளனர்.

அதேசமயம், நியூசிலாந்து, பாகிஸ்தானுக்கு இடையே நடந்த ஒருநாள் தொடர், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே நடந்த ஒருநாள் தொடர் முடிவையடுத்து, தரவரிசையில் வெளிநாட்டு அணிகளின் வீரர்களும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து அசைக்க முடியாமல் முதலிடத்தில் இருந்து வருகிறார். 2-வதுஇடத்தில் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 871 புள்ளிகளுடன் உள்ளார். 767 புள்ளிகளுடன் ஷிகர் தவண் 7-வது இடத்தில் உள்ளார். மற்றவகையில் முதல் 10 இடங்களில் இந்த 3 இந்திய வீரர்களைத் தவிர யாரும் இல்லை.

பந்துவீச்சாளர்கள் வரிசையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 841 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறார். ஆப்கானிஸ்தான் ரஷித் கான் 788 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும், 3-ம் இடத்தில் இந்திய வீரர் குல்தீப்யாதவ் 723 புள்ளிகளுடன் உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால், தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா 702 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் யஜூவேந்திர சாஹல் 683 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

6-வது இடத்தில் இருந்து 10-வது இடம் வரை முறையே, இங்கிலாந்து வீரர் அதில் ராஷித், நியூசிலாந்து வீரர் டிரன்ட் போல்ட், ஆப்கன் வீரர் முஜிப் ஜத்ரன், ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட், வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் தனது வாழ்வில் சிறந்த தரவரிசையாக 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதம்அடித்து சிறப்பாக விளையாடியதால், நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் 808 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 5-வது இடத்திலும் உள்ளனர். 6-ம் இடத்தில் இருந்து 10-ம் இடம் வரை முறையே ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ் இந்திய வீரர் ஷிகர் தவண், நியூசிலாந்துவீரர் கானே வில்லியம்ஸன், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் உள்ளனர்.

இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதம் அடித்து அசத்திய தென் ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ் 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பெற்றுள்ளார். இவரின் உயர்வால் வில்லியம்ஸன், டீ காக் சரிந்துள்ளனர்.

பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் 6 இடங்கள் முன்னேறி 11-வது இடத்துக்கு உயர்ந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தரவரிசை இடத்தைப் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் சதம் அடித்ததையடுத்து, 11 இடங்கள் உயர்ந்து, 31-வது இடத்தைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் மோசமான பேட்டிங்கை ஒருநாள் தொடரில் வெளிப்படுத்தியதால், 2 இடங்கள் சரிந்து 17-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அணிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 121 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து அணி 112 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா(111) 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

6-ம் இடத்தில் இருந்து 10-ம் இடம்வரை முறையே ஆஸ்திரேலியா(100), வங்கதேசம்(93), இலங்கை(79), மேற்கிந்தியத்தீவுகள்(72), ஆப்கானிஸ்தான்(67) அணிகள் உள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close