[X] Close

130கிமீ வேகத்தில் வீசினால் மட்டையை சுழற்றுவார்.. எங்களிடம் எடுபடவில்லை: ஆஸி. உ.கோப்பை எதிர்பார்ப்பு வீரர் கிறிஸ் லின் பற்றி டுபிளெசிஸ்


du-plesis-about-chris-lin

  • kamadenu
  • Posted: 13 Nov, 2018 11:11 am
  • அ+ அ-

கடந்த 13 ஒருநாள் போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் உலகக்கோப்பைக் கனவுகளில் அதிரடி வீரர் கிறிஸ் லின் ஒரு முக்கியப் பங்கு என்று ஆஸ்திரேலிய வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் கிறிஸ் லின் பலவீனம் பற்றி தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ்  தெளிவுபடுத்தியுள்ளார்.

கிறிஸ் லின் என்ற ஆஸ்திரேலிய அதிரடி வீரர் இதுவரை 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்தான் ஆடியுள்ளார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் சில முக்கிய இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். டி20 தாதா, ஆனால் ஒருநாள்போட்டிகளில் அவர் இன்னும் நிரூபிக்கவில்லை. ஏனெனில் சமீபமாக நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கிறிஸ் லின் எடுத்த ரன் எண்ணிக்கை, 15, 44, 0.

இதில் 44 ரன்கள் எடுத்த அடிலெய்ட் இன்னிங்சில் மிடில் ஆர்டரில் இறங்கி பெரிய ஷாட்களை ஆடினார், கேகிஸோ ரபாடாவை 4 பந்துகளில் 18 ரன்கள் விளாசினார். ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் ரபாடா ஷார்ட் பிட்ச் பந்தில் அவரை வீழ்த்தினார் பந்து கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனது.

ஸ்பின் பந்து வீச்சுதான் கிறிஸ் லின்னுக்கு பலவீனம் என்பது அறியப்பட்டது, ஆனால் இந்த 3 இன்னிங்ஸ்களிலும் வேகப்பந்தில் வெளியேறினார் கிறிஸ் லின்.

ஆனால் இவர் பேட்டிங் ஆர்டரையும் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்தார்கள் என்பதையும் கூற வேண்டும்.

ஹோபார்ட்டில் கடைசி ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக முன்னேற்றப்பட்டார், ஆனால் முதல் பந்திலேயே டேல் ஸ்டெய்ன் வேகத்துக்கு எட்ஜ் ஆகி கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.

இந்நிலையில் உலகக்கோப்பையில் கிறிஸ் லின் முக்கியப் பங்கு வகிப்பார் என்று கேப்டன் ஏரோ பிஞ்ச் தெரிவித்திருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் ஆஸி. ஊடகம் ஒன்றில் வேறு விதமாகக் கூறுகிறார்:

அவர் ஒரு அதிரடி வீரர், எப்போதும் பவுலிங் அணிக்கு அவர் கேட்ச் வாய்ப்புகளை தொடக்கத்தில் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

வேகப்பந்து வீச்சு அவரை பின்னுக்குத் தள்ளும், தென் ஆப்பிரிக்க அணியில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் அவரால் ஆட முடியவில்லை.

அதாவது மணிக்கு 130 கிமீ வேகம் என்ற குறைந்த வேகத்தில் வீசும்போது அவர் சவுகரியமாக ஆடுவது போல் தெரிகிறார், மட்டையை சுழற்றுகிறார்,

ஆனால் கொஞ்சம் வேகம் அதிகமாக இருந்தால் அவரால் தன் கையை சுதந்திரமாக சுழற்ற முடியவில்லை.

இவ்வாறு கூறிய டுபிளெசிஸ் வார்த்தைகளை உலகக்கோப்பையில் முறியடிப்பாரா கிறிஸ் லின் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close