[X] Close
 

தென் ஆப்பிரிக்க தொடர் ஓர் அலசல்: உலகக் கோப்பைக்கான ‘பிளான் ஏ ரெடி’: வெற்றிக்கொடி நாட்டிய கோலி படை


south-africa-series-plan-a-ready-for-the-world-cup-successful-goal-force

  • Team
  • Posted: 27 Feb, 2018 05:52 am
  • அ+ அ-

விராட் கோலியின் அனல்பறக்கும் பேட்டிங், ஜஸ்பிரித் பும்ராவின் மிரட்டல் பந்துவீச்சு, சுழல்பந்துவீச்சில் மாயஜாலம் நிகழ்த்திய சாஹல், யாதவ் ஆகியவை இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணத்தை வெற்றிகரமாக அமைத்துக்கொடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக தொடரை இந்திய அணி வென்றுள்ளது

2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக்கோப்பைப் போட்டிக்கான இந்தியஅணியின் பிளான் ஏ ஏறக்குறைய வெற்றிகரமாக அமைந்துவிட்டதாகவே கூறலாம்.

துணைக்கண்டத்தில் மட்டும் சாதித்து வந்த இந்திய அணி நீண்ட காலத்துக்குப்பின் மிகவும் உயிர்ப்பான வெற்றிகளை ரெயின்போ நாட்டு மண்ணில் பெற்றுள்ளது.

7 வாரங்கள் தங்கி இருந்த இந்திய அணி, 3 விதமான போட்டித் தொடர்களில் 2 கோப்பைகளைக் கைப்பற்றி அனைவரின் பாராட்டையும் கோலி தலைமையிலான இளம்படை பெற்றுள்ளது.

டெஸ்ட் தொடரில் கடும் நெருக்கடிகளை தென் ஆப்பிரி்க்காவுக்கு அதன் சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் கொடுத்தார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆதலால், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது என்று கூறுவதைவிட, தொட்டுவிடும் தொலைவில் வெற்றி நழுவவிட்டோம் என்றுதான் கூற வேண்டும்.

இந்த 3 டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் 60 விக்கெட்டுகளில் 47 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியதில் இருந்தே நம் வீரர்கள் கொடுத்த நெருக்கடி, அழுத்தத்தின் அளவீடு தெரிந்திருக்கும்.

முகம்மது ஷமி( 3 போட்டி 15 விக்கெட்டுகள்), ஜஸ்பிரித் பும்ரா(3போட்டி 14 விக்), புவனேஷ்குமார் (2 போட்டி 10விக்), இசாந்த் சர்மா(2 போட்டி 8 விக்) என மொத்தம் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்திருந்தபோதிலும், ஜஸ்பிரித் பும்ரா என்ற சிறந்த பந்துவீச்சாளரை இந்த டெஸ்ட் போட்டிகள் அடையாளம் காண வைத்துள்ளன.

டெஸ்ட் தொடர் முடிந்தபின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், “ 11 பேர் கொண்ட அணிக்கு பும்ரா மிகத்தகுதியானவர். இவரின் பந்துவீச்சு எதிரணிக்கு சிம்மசொப்னமாக இருந்தது. உயர்தரமான பந்துவீச்சாளர் போல் பும்ராவின் செயல்பாடு இருந்தது. 40 போட்டிகள் வரை விளையாடியிருந்தாலும் அனுபவ வீரர் போல் பந்துவீசினார்” எனத் தெரிவித்தார்.

இதுதவிர கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் ஒருநாள், டெஸ்ட் தொடரில் முத்தாய்ப்பாக அமைந்துவிட்டது. 3 டெஸ்ட் போட்டிகளில் 286 ரன்கள் குவித்தார். அதேபோல 8 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 558 ரன்கள் குவித்து இந்திய அணி 5-1 என்ற தொடரைக் கைப்பற்ற கோலியின் அதிரடியான பேட்டிங் முக்கியக் காரணமாகும்.

ஒருநாள் தொடரில் இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணி 33 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒவ்வொரு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க வீரர்களை திணறடித்தனர். இதுதவிர புவனேஷ்குமார், பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பந்துவீச்சும் நெருக்கடி தரும் விதத்தில் அமைந்து இருந்தது.

மகேந்திர சிங் தோனியைப் பொறுத்தவரை 2019ம் ஆண்டு உலகக்கோப்பை வரை அவரால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. இந்த தொடர் முழுவதும் அவரின் பேட்டிங் குறிப்பிட்டு சொல்லும்படியாக அமையவில்லை.

ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் முதல் 3 இடங்களில் நிறைவாக இருந்தது. அதேபோல 4, 5-ம் இடங்களிலும் ரகானே, ஸ்ரேயாஸ் அய்யர், கேதார் ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் இருந்து வருகின்றனர். இதில் கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடிய அனுபவத்தை ரகானே பெற்றவர் என்பது அவருக்கு கூடுதல் பலமாகும்.

அதேபோல டி20 தொடரில் வாய்ப்பு பெற்ற மணீஷ் பாண்டே, அனுபவ வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்களின் பணியை நிறைவாகவே செய்தனர். அதிலும் சுரேஷ் ரெய்னா கடைசி டி20 போட்டியில் தனது அதிரடி பேட்டிங் மூலம் ஆட்டநாயகன்விருது பெற்று மீண்டும் பார்முக்கு திரும்பி இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பைப் போட்டிக்கான பிளான் ஏ வில் இந்திய அணி வெற்றிகரமாக கடந்துவிட்டது.

அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணியில் டீவில்லியர்ஸ், டூப்பிளசிஸ், டீகாக், ஸ்டெயின் ஆகிய வலுவான வீரர்கள் இல்லாமல் வலு குறைந்த அணியுடன் இந்திய அணி போட்டியிட்டதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் பி அணியுடன் விளையாடிதான் இந்த கோப்பையை வென்றார்கள் என்றும் ரசிகர்களில் ஒருபிரிவினர் கருத்துக் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து இரு டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனான ரகானேவுக்கு வாய்ப்பு தரப்படாமல் அவரை 3-வது டெஸ்டில் களமிறக்கியது விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், 2-வது டெஸ்ட் போட்டியில் அனுபவ பந்துவீச்சாளர் புவனேஷ்குமாரை உட்காரவைத்ததும் கோலியின் கேப்டன் திறமையை கேள்விக்குறியாக்க வைத்துள்ளது.

அதேசமயம், டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்படாத ரோகித் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து, நடப்பு பார்ம்தான் தேர்வைத் தீர்மானிக்கிறது என்றார் கோலி. ஆனால், அதற்கு முந்தைய தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் யாதவ், ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கப்படாமல், தென் ஆப்பிரிக்காவில் வேடிக்கை பார்க்க வைத்தது எந்த விதத்தில் நியாயம் என்று ரசிகர்கள் தரப்பில் கேள்வியாக முன்வைக்கப்படுகிறது.

இந்த குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் பெற்ற வெற்றியின் மூலம், டெஸ்ட் தொடரை மீண்டும் இழந்தது பின்னுக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

 
 
Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close