[X] Close
 

நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் விராட் கோலி: இங்கிலாந்தில் தன் முதல் அரைசதம் அடிப்பாரா?


kohli-england-record

  • kamadenu
  • Posted: 10 Mar, 2018 19:03 pm
  • அ+ அ-

டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் அனைத்து அணிகளுக்கும் எதிராக அந்தந்த நாடுகளில் மிகச்சிறப்பாக ஆடி தன்னை நிரூபித்து வரும் விராட் கோலி இதுவரை இங்கிலாந்தில் தன் பேட்டிங்கை நிரூபிக்காதது சில நிபுணர்கள் மத்தியில் அவரை இன்னும் உலக அளவில் சிறந்த பேட்ஸ்மெனாக அங்கீகரிப்பதில் தடையை ஏற்படுத்தியுள்ளது.

மைக்கேல் ஹோல்டிங் செஞ்சூரியனில் கோலியின் 153 ரன்களை எடுத்த போது கிட்டத்தட்ட இந்திய ரக பிட்ச்தான் இருந்தாலும் தரமான வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அன்னிய மண்ணில் அபாரமான இன்னிங்ஸ் என்று வர்ணித்த கையோடு, இன்னும் இவரை நான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மென்கள் வரிசையில் சேர்க்கமாட்டேன், அதற்கு அவர் இங்கிலாந்தில் அவரது பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டியது அவசியம் என்றார்.

சமீபத்தில் கபில்தேவும் ‘உலகின் கடினமான இடமாகிய இங்கிலாந்தில் கோலி தன்னை நிரூபித்தால்தான் உலகின் தலைசிறந்த வீரர்கள் அடங்கிய ஆலன் பார்டர், விவ் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர் ஆகியோர் பட்டியலில் இடம்பெறுவார் என்ற தொனியில் கூறியதோடு, அவர் இதற்காக இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஒரு சீசனில் ஆடினாலும் தவறொன்றுமில்லை என்று கூறியிருந்தார்.

இப்படியாக பல முன்னாள் வீரர்களும் கோலியையும் ஸ்மித்தையும் ஒப்பிட்டு இங்கிலாந்தில் கோலி ரன்களைக் குவித்தால்தான் அவரை உலக தலைசிறந்த பேட்ஸ்மென்கள் பட்டியலில் சேர்க்க முடியும் என்று கூறிவருகின்றனர், இதனால் விராட் கோலிக்கு இங்கிலாந்து செல்லும் முன் பெரிய அழுத்தம் ஏற்றப்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய சவால்களை விரும்பக்கூடியவரே விராட் கோலி.

ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி வெளியே செல்லும் பந்துகளுக்கான அவரது பலவீனத்தை கடந்த தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடுமையாகப் பயன்படுத்தி அவரது விக்கெட்டைச் சாய்த்துக் கொண்டிருந்தார், இதனால் விராட் கோலிக்கு ஆண்டர்சனின் செல்லப்பிள்ளை என்ற கேலிப்பெயர் கூட ஏற்பட்டது. 

நடப்பு தென் ஆப்பிரிக்க தொடரிலும் அவர் ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்துக்கு ஆட்டமிழந்ததோடு அதே லெந்த்தில் பிட்ச் ஆகி உள்ளே வரும் இன்ஸ்விங்கருக்கு தன் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் மிட்விக்கெட்டில் பிளிக் ஆடும் துணைக்கண்ட பிட்ச் அணுகுமுறையில் ஆட்டமிழந்ததும் நடந்தது.

ஆனாலும் அவர் தன் ஈகோவில் சமரசம் செய்து கொள்ளாமல் ‘நான் முன்காலை முன் கூட்டியே குறுக்காக நீட்டி மட்டையைக் கொண்டு செல்வேன், கவர் ட்ரைவ்தான் என் பலம் அதை எந்தப் பந்து வீச்சானலும் எந்த பிட்ச் ஆனாலும் ஆடுவேன்’ என்று கூறுவது போல் செஞ்சூரியனில் 158 ரன்களை எடுத்தார். எப்படி ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் பிரமாதமான பந்து வீச்சுக்கு எதிராக முழுதும் பின்னங்காலில் சென்று, ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து வந்துதான் ஆடுவேன், ஓவர்பிட்ச் பந்தாக இருந்தாலும் இதுதான் அணுகுமுறை என்று ஆடி சதமும் எடுத்தாரோ அதற்கு நேர்மாறாக விராட் கோலி, முன் காலில் வந்து பந்துக்கு அருகே மட்டையைக் கொண்டு சென்று ஆடவே முயல்வேன், ஆட்டமிழந்தால் கவலையில்லை என்று ஆடினார். ஆகவே இரண்டும் உத்தியில் எதிரெதிராக இருந்தாலும் மனநிலை அளவில் ஒன்றுதான்.

இந்நிலையில் கோலி இங்கிலாந்தில் இதே அணுகுமுறையை கடைபிடித்தால் கூடுதல் ஸ்விங் ஆகும் நிலைமைகளில் தாக்குப் பிடிப்பாரா என்பது பலருக்கும் கேள்வியாக எழுந்துள்ளது, அவருக்கும் இது சவாலாகவே விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டர்சன் ஒருமுறை விராட் கோலியின் இப்போதைய ஆட்டம் பற்றி கூறும்போது, “சாதகமான சூழ்நிலையில்தானே ஆடிவருகிறார்” என்று நக்கலாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கோலியின் டெஸ்ட் போட்டி விவரம்:

இந்தியாவில்: 32 டெஸ்ட் போட்டிகளில் 2,921 ரன்கள், சராசரி 63.50, சதங்கள் 10, அரைசதங்கள் 10, அதிகபட்ச ஸ்கோர் 243.

ஆஸ்திரேலியாவில்: 8 டெஸ்ட் போட்டிகளில் 992 ரன்கள், சராசரி 62, சதங்கள் 5, அரைசதங்கள் 2, அதிகபட்ச ஸ்கோர் 169

தென் ஆப்பிரிக்காவில்: 5 டெஸ்ட்களில் 558 ரன்கள், சராசரி 55.80, சதங்கள் 2, அரைசதங்கள் 2, அதிகபட்ச ஸ்கோர் 153

இலங்கையில்: 6 டெஸ்ட் போட்டிகளில் 394 ரன்கள், சராசரி 43.77, சதங்கள் 2, அரைசதம் 1 அதிகபட்ச ஸ்கோர் 103 நாட் அவுட்.

மே.இ.தீவுகளில்: 7 போட்டிகளில் 327 ரன்கள், சராசரி 36.37, ஒரு சதம், அரைசதம் இல்லை, அதிகபட்ச ஸ்கோர் 200 

நியூஸிலாந்தில்: 2 டெஸ்ட் போட்டிகளில் 214 ரன்கள், சராசரி 71.33, சதம் 1, அரைசதம் 1, அதிகபட்ச ஸ்கோர் 105,.

இங்கிலாந்தில்: 5 போட்டிகளில் 134 ரன்கள், சராசரி 13.40, சதம் இல்லை, அரைசதம் இல்லை, அதிகபட்ச ஸ்கோர் 39

வங்கதேசத்தில்: ஒரு டெஸ்ட் போட்டியில் 14 ரன்கள்.

- ஆர்.முத்துகுமார்
Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close