[X] Close

4-ம் இடத்துக்கு என்ன திட்டம் இருக்கு?- கோலி, ரவிசாஸ்திரி கூட்டணியை வறுத்தெடுத்து யுவராஜ் சிங்


4

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 12:28 pm
  • அ+ அ-

இந்திய அணியில் 4-ம் இடத்துக்கு எந்த வீரரை களமிறக்குவது என்ற திட்டம் உலகக்கோப்பை வரை இல்லை. யாரையும் 4-ம் இடத்துக்கு என உருவாக்கவும் இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கடுமையாகச் சாடியுள்ளார்.

குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 4-ம் இடத்தில் களமிறங்கும் வீரர்கள் குறித்து பல்வேறு சோதனை முயற்சிகளை கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தும் கடைசியில் எந்த வீரரையும் கண்டுபிடிக்கவில்லை என்று மறைமுகமாக யுவராஜ் சிங் விளாசியுள்ளார்.

யுவராஜ் சிங் அணியில் விளையாடிய காலத்தில் 4-ம் வலுவாக இருந்தது. யுவராஜ் சிங், முகமது கைப், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா வலுவான வரிசை இருந்தது. குறிப்பாக யுவராஜ் சிங் 4-வது வரிசையில் நின்று விளையாடி 2011 உலகக்கோப்பை, 2007 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றில் இந்தியா வெல்ல காரணமாக இருந்தார்.

ஆனால், யுவராஜ் சிங் அணியில் இருந்து கழற்றிவிட்டபின், நல்ல வீரரை அடையாளம் காண இந்திய அணி நிர்வாகத்தால் முடியவில்லை. அதனால் ஏற்பட்ட குறைபாடுதான் உலகக் கோப்பை தோல்விக்கு முக்கியமாக இருந்தது.

இதுகுறித்து யுவராஜ் சிங் ஒரு ஆங்கிலநாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

உலகக்கோப்பை வருவதை மனதில் வைத்து சில வீரர்களை 4-வது இடத்துக்கு என்று தயார்படுத்தி இருக்க வேண்டும். 4-ம் இடத்தில் விளையாடும் வீரர் சிலநேரங்களில் தோல்வி அடைந்தால், அவரிடம் நீங்கள் தான் 4-ம் இடத்தில் உலகக்கோப்பையில் விளையாடப் போகிறீர்கள் கவனமாக விளையாடுங்கள் என்று கூறியிருக்க வேண்டும்.

கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பையைப் போல, உலகக்கோப்பை போட்டிக்கு முன் நியூஸிலாந்துடன் விளையாடியதில் அனைத்து வீரர்களும் தோல்வி அடைந்தனர். அதேபோன்ற அணிதான் இப்போது உலகக்கோப்பையிலும் விளையாடி இருக்கிறது.

Ambati Rayudu.jpg 

அம்பதி ராயுடு திடீரென ஓய்வு அறிவித்த செயலை பார்க்கவும், கேட்கவும் எனக்கு வேதனையாக இருக்கிறது. உலகக்கோப்பையில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக திடீரென ஓய்வு அறிவிப்பது சரியல்ல.

உலகக்கோப்பைக்கான அணியில் ராயுடு இருந்தார். நியூசிலாந்து சென்ற இந்தியஅணியில் இடம் பெற்ற ராயுடு நன்றாகத்தானே விளையாடினார். ஒவ்வொரு வீரரும் சில நேரங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இயல்புதான். அதுபோலத்தான் ராயுடுவுக்கும் சிலஇன்னிங்ஸ்கள் மோசமாக இருந்தன.

ஆனால், அதற்குள் ராயுடுவை உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். ஒரு அணியில் 4-ம் இடம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரியுமா. நீங்கள் 4-வது இடத்தில் ஒருவீரரை விளையாடச் செய்யும் போது, அவருக்கு ஆதரவாகச் செயல்படுவது அவசியம். சரியாக விளையாடவில்லை என்று சில போட்டிகளை வைத்து ஒரு வீரரை கைகழுவி விடமுடியாது.

ராயுடுவுக்கு அடுத்தாற்போல் 4-ம் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை இறங்கி கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் சோதித்தார்கள். அதிலும் தோல்வி, ரிஷப் பந்தை இறக்கிவிட்டு பார்த்தார்கள். அவரும் விளையாடினார். ஆனால், அவரை உலகக்கோப்பைப் போட்டிக்கு தேர்வு செய்யவில்லை. உண்மையில் இந்திய அணி நிர்வாகம் 4-ம் இடம் குறித்து என்னதான் திட்டம் வைத்திருந்தார்கள்.

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஆட்டமிழந்துவிட்டால், இந்திய அணியை எளிதாக சாய்த்துவிடலாம் என்று அனைத்து அணிகளும எளிதாக அறிந்து வைத்திருந்தார்கள். நமக்கு இனி வரும் காலங்களில் 4-ம் இடத்துக்கு வலுவான வீரர் ஒருவர் தேவை. ஆனால், 4-ம் இடம் குறித்து என்ன மாதிரியான திட்டத்தை நிர்வாகம் வைத்திருக்கிறது என எனக்குத் தெரியவில்லை.

இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்தார்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close