[X] Close

முதல் முறையாக பட்டம் வெல்வது யார்?; இங்கிலாந்து - நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை புகழ் வாய்ந்த லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பிற்பகலில் ஆட்டம் நடைபெறுகிறது


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 08:26 am
  • அ+ அ-

உலகக் கோப்பை  கிரிக்கெட் தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அரை இறுதியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. அதேவேளையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி தனது அரை இறுதியில், கோப்பை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்திருந்தது.

கிரிக்கெட்டின் தாயகத்தை தன்னகத்தே கொண்ட இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 4-வது முறையாகும். அந்த அணி கடந்த 1979, 1987 மற்றும் 1992-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை சென்ற போதிலும் கோப்பையை வசப்படுத்த முடியாமல் போனது.

அதேவேளையில் நியூஸிலாந்து அணி 2-வதுமுறையாக இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளது. அந்த அணி 2015-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு பட்டம் வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டிருந்தது.

27 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குமுன்னேறியுள்ள இங்கிலாந்து அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. இதற்காகவே அந்த அணி கடந்த 4 வருடங்களாகவே பட்டை தீட்டப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் லீக்சுற்றுடன் வெளியேறிய உடனே அடுத்த உலகக்கோப்பைக்கான ஆயத்தபணிகளை இங்கிலாந்து அணி மேற்கொண்டது.

அப்போது அந்த அணி கையில்எடுத்த விஷயங்கள் அச்சமில்லாத வகையிலான அதிரடி ஆட்டம், தாக்குதல் பந்து வீச்சு ஆகியவைதான். உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கான வேட்டையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நியூஸிலாந்து அணிக்கு எதிராக 2015-ம் ஆண்டு (உலகக் கோப்பை முடிந்த பிறகு) நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என கைப்பற்றியது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி ரன் வேட்டையாடியிருந்தது.

அதில் இருந்துதான் பேட்டிங்கில் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து வருகிறது இயன் மோர்கன் படை. ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோ ரூட், இயன் மோர்கன், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் எந்த அணிக்கு எதிராகவும் ரன் வேட்டையாடும் திறனை கொண்டுள்ளனர். தற்போதைய தொடரில் ஜேசன் ராய் 426, ஜானி பேர்ஸ்டோ 496, ஜோ ரூட் 549, மோர்கன் 362, பென் ஸ்டோக்ஸ் 381 ரன்கள் விளாசியுள்ளனர்.

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஜோடி தங்களது அதிரடியால் சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்து வருகிறது. அதேவேளையில் ஜோ ரூட் நிலைத்து நின்று விளையாடுவது மிடில் ஆர்டர் வரிசைக்கு பேருதவியாக உள்ளது. மோர்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சூழ்நிலைக்கு தகுந்தபடி மட்டையை விளாசுகின்றனர்.

ஜாஸ் பட்லரிடம் (253) இருந்து மட்டுமே பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. எனினும் அபாயகரமான பேட்ஸ்மேனான அவர், எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர். பேட்டிங்கில் இந்த அரை டஜன் வீரர்களும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (19 விக்கெட்கள்), மார்க்வுட் (17), கிறிஸ் வோக்ஸ் (13), ஆதில் ரஷித் (11),லியாம் பிளங்கெட் (8) ஆகியோர் கூட்டாக மேம்பட்ட செயல்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவர்களின் தனித்துவமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசும் சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட அதை பாதகமாக கருதியதில்லை. அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கை ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ்வோக்ஸ் ஜோடி 14 ரன்களுக்குள் மட்டுப்படுத்தி மிரட்டியிருந்தனர். இவர்கள் இன்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து பேட்டிங் வரிசைக்கும் தொல்லைகள் கொடுக்கக்கூடும்.

  நியூஸிலாந்து அணி கடந்த உலகக் கோப்பையில் பிரண்டன் மெக்கலம் தலைமையில் அதிரடி ஆட்டத்தை பிரதானமாக கொண்டு விளையாடியது. அதன் பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் வில்லியம்சன் தலைமையில் சூழ்நிலையை தகவமைத்துக் கொண்டு விளையாடுவதில் கைதேர்ந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதமாக இல்லாத சூழ்நிலையில் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் மந்தமாக விளையாடிய போதிலும் இன்னிங்ஸை அற்புதமாக கட்டமைத்தனர்.

அவர்கள் அடித்த அரை சதங்கள்தான் அணியின் வெற்றியில் பிரதான பங்கு வகித்தது. இந்தத் தொடரில் டாப் ஆர்டர் பேட்டிங் கைகொடுக்காத நிலையில் 548 ரன்கள் குவித்துள்ள வில்லியம்சன், 335 ரன்கள் சேர்த்துள்ள ராஸ் டெய்லர் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்தில் இந்தத் தொடரில் இதுவரை 167 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

அவர், மீண்டும் பார்முக்கு திரும்பும் பட்சத்தில் அணியின் பேட்டிங் வலுப்பெறும். அவருடன் முப்பரிமாண திறன்கள் கொண்ட மிட்செல் சாண்ட்னர், காலின் டி கிராண்ட் ஹோம், ஜேம்ஸ் நீஷாம் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டாம் லேதம் ஆகியோரும் ஒருங்கிணைந்த செயல்திறனை வெளிப்படுத்தினால் இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுக்கலாம்.

துல்லியமான பந்து வீச்சு, விரைவான பீல்டிங் ஆகியவையும் நியூஸிலாந்து அணியின் பலமாக உள்ளது. இவற்றைக் கொண்டுதான் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை நிலைகுலையச் செய்திருந்தது நியூஸிலாந்து அணி. அதிலும் இறுதிக்கட்டத்தில் தோனியை, மார்ட்டின் கப்தில் ரன் அவுட் செய்த விதம் மிரளச் செய்தது.

பந்து வீச்சை பொறுத்தவரையில் இங்கிலாந்து அணிக்கு சமபலம் பொருந்திய நிலையிலேயே நியூஸிலாந்து அணி திகழ்கிறது. 18 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள லூக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட் (17), மேட் ஹென்றி (13), ஜேம்ஸ் நீஷாம் (12) ஆகியோர் தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாகி உள்ளனர்.

44 வருட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் இங்கிலாந்து, நியூஸி

லாந்து அணிகள் இதுவரை மகுடம் சூடியது இல்லை. தற்போது முதன் முறையாக பட்டம் வெல்வதற்கான வேட்டையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. எந்த அணி வெற்றி பெற்றாலும் அது வரலாற்று சாதனைதான்.

அணிகள் விவரம்

இங்கிலாந்து: இயன் மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஜேம்ஸ் வின்ஸ், மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித், லியாம் டாவ்சன், டாம் கரன், லியாம் பிளங்கெட், மார்க் வுட்.

நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர், காலின் மன்றோ, டாம் லேதம், டாம் பிளண்டெல், ஜிம்மி நீஷாம், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், மேட் ஹென்றி.

வானிலை

இறுதிப் போட்டி நடைபெறும் லண்டன் லார்ட்ஸ் மைதான பகுதிகளில் இன்று வானம் பிரகாசமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

யார் பலசாலி?

இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 84 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் நியூஸிலாந்து அணி 43 ஆட்டங்களிலும், இங்கிலாந்து அணி 41 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. அதேவேளையில் உலகக் கோப்பை தொடர்களில் நியூஸிலாந்து அணி 5 முறையும், இங்கிலாந்து அணி 4 முறையும் வெற்றியை பதிவு செய்துள்ளன.

லார்ட்ஸ் ஆடுகளம்

லண்டன் நகரில் வறண்ட வானிலை நிலவுவதால் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சற்று சாதகமாக இருக்கக்கூடும். அதேவேளையில் தொடக்க ஓவர்களில் ஆடுகளம் மந்தமாக செயல்படக்கூடும் என்பதால் வேகப் பந்து வீச்சாளர்கள் தங்களது ஆஃப் கட்டர்கள், லெக் கட்டர்களால் அச்சுறுத்தல் கொடுக்க வாய்ப்புள்ளது.

கைகூடுமா சாதகம்

கடந்த இரு உலகக் கோப்பை தொடரிலும் போட்டியை நடத்திய நாடுகளே சாம்பியன் பட்டம் வென்றன. 2011-ம் ஆண்டு இந்தியாவும், 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவும் தொடரை நடத்திய நிலையில் கோப்பையை தன்வசப்படுத்திக் கொண்டன. இந்த வரிசையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு சொந்த மைதான சாதகம் கைகூடுமா என்பது இன்று தெரியும்.

2-வது முறை

இம்முறை உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் 2-வது முறையாகமோதுகின்றன. லீக் சுற்றில் இரு அணிகளும் மோதியஆட்டத்தில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் கடந்த 27 வருடங்களாக தொடர்ந்து நியூஸிலாந்து அணியை வீழ்த்த முடியாத சோகத்துக்கு இங்கிலாந்து அணி முற்றுப்புள்ளி வைத்திருந்தது. மேலும் கடந்த உலகக் கோப்பையில் நியூஸிலாந்து அணியிடம் 123 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்ததற்கு பதிலடியும் கொடுத்தது இங்கிலாந்து அணி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close