[X] Close

இந்தியா-நியூஸி அரையிறுதி ஆட்டம் நடக்கும் ஓல்டுடிராபோர்ட் மைதானத்தின் மீது விமானம் பறக்க தடை


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 14:11 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

இந்தியா, நியூஸிலாந்து அரையிறுதி ஆட்டம் நடக்கும் மான்செஸ்டர், ஓல்டுடிராபோர்ட் மைதானத்தின் மேல் எந்த விமானமும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹெடிங்லியில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர் கட்டிக்கொண்டு விமானம் பறந்தது. அந்த விமானத்தில் கட்டப்பட்டிருந்த பேனரில் இந்தியா கும்பல் வன்முறையை தடுக்க வேண்டும், காஷ்மீருக்கு நீதி வேண்டும் என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.

இந்த விமானம் பறந்ததற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ), இதுபோன்ற பாதுகாப்பு விதிமுறைகள் நடக்க அனுமதிக்கக்கூடாது என்று ஐசிசிக்கு வலியுறுத்தி கடிதம் எழுதியது.

இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன், ஐசிசி நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். இந்த பேச்சுக்குப்பின், மான்செஸ்டர் நகர அதிகாரிகளுடன், இங்கிலாந்து வாரியம் ஆலோசனை நடத்தியது. அதில் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கும் போது ஓல்டுடிராபோர்ட் மைதானத்தில் மேல்எந்தவிமானமும் பறக்க தடைவிதிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதை பிசிசிஐ அமைப்பிடமும் இங்கிலாந்து வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், " இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும், ஐசிசி அமைப்பிடமும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், வீரர்களின் பாதுகாப்பில் மெத்தனம் காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தினோம். இதையடுத்து, இந்தியா, நியூஸிலாந்து ஆட்டம் நடக்கும் ஓல்டுடிராபோர்ட் மைதானத்தின் மீது எந்த விமானமும் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து வாரியம், தலைமைநிர்வாக அதிகாரி ராகுல் ஜோரியிடம் தெரிவித்துள்ளது " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஒரு நாட்டுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பேனரை சமந்து விமானம் ஒன்று உலகக்கோப்பைப் போட்டியில் பறப்பது 2-வது முறையாகும். இதற்கு முன் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் நடந்தபோது, பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பேனரைக் கட்டிக்கொண்டு விமானம் பறந்தது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ, ஐசிசி ஆகிய அமைப்புகள் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தும், ஐசிசி நடத்தும் போட்டியில் இதுபோன்ற அரசியலுக்கு தொடர்பில்லை என்று கூறயபின்பும் இங்கிலாந்து போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close