[X] Close

உலக சாதனையை நோக்கி தோனி; 16 ஆண்டு வரலாற்றை மாற்றக் காத்திருக்கும் ரோஹித் சர்மா


16

  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 13:07 pm
  • அ+ அ-

மான்செஸ்டரில் இன்று நடக்கும் உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தின் இந்தியாவின் தோனி, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் புதிய உலக சாதனைகளைப் படைக்கக் காத்திருக்கிறார்கள்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஓல்ட்டிராபோர்ட் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து நியூஸிலாந்து அணி களமிறங்குகிறது. வியாழக்கிழமை நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி மோதுகிறது.

இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். ஏற்கெனவே 5 சதங்கள் அடித்து சங்கக்கராவின் சாதனையை முறியடித்து தற்போது 647 ரன்களை 8 போட்டிகளில் அடித்துள்ளார்.

இதுவரை உலகக்கோப்பை தொடரில் தனி ஒருவீரரின் அதிகபட்ச ஸ்கோர் எனும் சாதனையை சச்சின் வைத்துள்ளார். 2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் சச்சின் 673 ரன்கள் சேர்த்ததை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.

Rohit-Sharma.jpg 

தற்போது 647 ரன்களுடன் இருக்கும் ரோஹித் சர்மா சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 27 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. 27 ரன்களை ரோஹித் சர்மா எட்டிவிட்டால் சச்சின் 16 ஆண்டுகால  சாதனையை முறியடித்து, உலகக் கோப்பை போட்டியில் அதிகமான ரன்களைக் குவித்த வீரர் எனும் உலக சாதனையைப் படைப்பார்.

அதேசமயம், 53 ரன்களை ரோஹித் சர்மா சேர்த்தால், உலகக்கோப்பை போட்டியில் 700 ரன்களை எட்டிய முதல் வீரர் எனும் உலக சாதனையையும்  படைப்பார். நியூஸிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்துவிட்டால், இதுவரை எந்த வீரரும் செய்யாத ஒரு உலகக்கோப்பை போட்டியில் அதிகமான சதங்கள் அதாவது 6 சதங்கள் அடித்த முதல் வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெறுவார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனியும் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார். தோனிக்கு இது 350-வது ஒருநாள் போட்டியாகும்.

இதற்கு முன் 350 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே விளையாடியுள்ளார். தற்போது 349 போட்டிகளில் இருக்கும் தோனி, இன்றைய ஆட்டத்தில் விளையாடினால் அது 350 போட்டியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் 350 போட்டி அதற்கு மேல் விளையாடிய 10-வது வீரர் எனும் பெருமையை தோனி  பெறுவார்.

இதற்கு முன் சச்சின் (463), ஜெயவர்தனா(448), ஜெயசூர்யா(445), சங்கக்கரா (404), அப்ரிடி (398), இன்சமம் உல் ஹக் (378), ரிக்கி பாண்டிங் (375), வாசிம் அக்ரம் (356), முத்தையா முரளிதரன் (350) ஆகியோர் விளையாடியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் 350 போட்டிகளில் பங்கேற்கும் முதல்  விக்கெட் கீப்பர் எனும் பெருமையையும் தோனி பெற உள்ளார். இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கரா 360 ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராகப் பணியாற்றி இருந்தாலும், அதில் 44 போட்டிகள் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக களமிறங்கியுள்ளார். ஆதலால், முழுநேரமாக 350 போட்டிகளில் விக்கெட் கீப்பராக சங்கக்கரா பணியாற்றியுள்ளார் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

dhon.jpg 

ஆனால், தோனி முழுநேரமாக விக்கெட் கீப்பராக 350 போட்டிகளுக்கும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால், இன்று தோனி 350 போட்டிகளில் விக்கெட் கீப்பராக பணியாற்றிய முதல் வீரர் எனும் புதிய வரலாற்றை படைக்க உள்ளார்.

தோனி விளையாடியுள்ள 349 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளுக்கு கேப்டனாகப் பணியாற்றியுள்ளார். உலகில் 200 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த மூன்றாவது விக்கெட் கீப்பர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close