[X] Close

அரை இறுதியில் இன்று இந்தியா - நியூஸிலாந்து பலப்பரீட்சை


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 08:55 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகலில் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டுடிராஃபோர்டு மைதானத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டங்களில் 7 வெற்றிகளை பெற்றது. இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டுமே விரட்டலின் போது தோல்வி கண்டிருந்தது. 2-வது அணியாக அரை இறுதியில் கால்பதித்திருந்த விராட் கேலி படை, 15 புள்ளிகளுடன் லீக் சுற்றில் முதல் இடம் பிடித்திருந்தது.

அதேவேளையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி முதல் 6 ஆட்டங்களில் வீழ்த்த முடியாத அணியாக திகழ்ந்த நிலையில் கடைசியாக பங்கேற்ற 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்விகளை சந்தித்தது. இதனால் நிகர ரன் விகித அடிப்படையில் கடைசி அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து.

இந்திய அணி வலுவான டாப் ஆர்டர் பேட்டிங்கால் வெற்றிகரமாக வலம் வருகிறது. அதீத பார்மில் உள்ள தொடக்க வீரரான ரோஹித் சர்மா 5 சதங்களுடன் 647 ரன்கள் வேட்டையாடி உள்ளார். விராட் கோலி 5 அரை சதங்களுடன் 442 ரன்களும், கே.எல்.ராகுல் ஒரு சதம், 2 அரை சதங்களுடன் 360 ரன்களும் சேர்த்துள்ளனர். இவர்கள் கூட்டாக சேர்த்த ரன்கள் மட்டும் 1,347.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்த ஆட்டத்தில் கூட ரோஹித் சர்மாவும், விராட்கோலியும் சீராக ரன்களு்ம் குவித்திருந்தனர். இந்திய அணியை பொறுத்தவரையில் மிடில் ஆர்டர் பேட்டிங் சற்று பலவீனமாகவே உள்ளது. டாப் ஆர்டர் பேட்டிங் வரிசைக்குப் பிறகு அதிக ரன்கள் சேர்த்துள்ளவர்களில் தோனி முன்னணியில் உள்ளார்.

அவரது மந்தமான பேட்டிங் சில ஆட்டங்களில் கடும் விமசர்சனத்துள்ளான போதிலும் இதுவரை அவர் 93.30 ஸ்டிரைக் ரேட்டுடன் 239 ரன்கள் சேர்த்துள்ளார். அதேவேளையில் ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோரிடம் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த திறன் வெளிப்படவில்லை. இதில் கேதார் ஜாதவ், வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டார்.

newss.JPG 

3 ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைத்த ரிஷப் பந்த் 84 ரன்கள் எடுத்துள்ளார். 4-வது இடத்தில் களமிறங்குவதால் ரிஷப் பந்த் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தேக்கம் அடைகிறார். கேதார் ஜாதவுக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான திறன்கள் வெளிப்படவில்லை. இதனால் மீண்டும் கேதார் ஜாதவையே களமிறக்குவது குறித்து அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும்.

நியூஸிலாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் தொடக்க ஜோடி கடும் சரிவை சந்தித்து வருகிறது. மார்ட்டின் கப்தில் 166, காலின் மன்றோ 125 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளனர். 3-வது வீரராக களமிறங்கி வரும் வில்லியம்சன் மட்டுமே தனிநபராக போராடி வருகிறார். இந்தத் தொடரில் அவர், 481 ரன்கள் குவித்துள்ளார்.

அவரை தவிர்த்து ராஸ் டெய்லர் 261 ரன்கள் சேர்த்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டாம் லேதம் மற்றும் ஆல்ரவுண்டர்களான காலின் டி கிராண்ட் ஹோம், ஜேம்ஸ் நீஷாம் ஆகியோரிடம் இருந்து தொடர்ச்சியான செயல்திறன் வெளிப்படவில்லை.

நியூஸிலாந்து அணி பேட்டிங்கில் சற்று பலமிழந்து காணப்பட்டா லும் பந்து வீச்சில் அபார செயல்திறனை வெளிப் படுத்தி வருகிறது. 17 விக்கெட்கள் வேட்டையாடி உள்ள லூக்கி பெர்குசன், 15 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள டிரென்ட் போல்ட், 10 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள மேட் ஹென்றி ஆகியோர் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு தொல்லைதரக்கூடும்.

ஜேம்ஸ் நீஷாம் (11), காலின் டி கிராண்ட் ஹோம் (5) ஆகியோரும் பந்து வீச்சில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். பர்மிங்காமில் நிலவும் குளிர்ந்த கால நிலையில் ஸ்விங், சீரான வேகம், பவுன்ஸ் ஆகியவற்றை சரளமாக கையாள முடியும் என்பதால் டிரென்ட் போல்ட் பந்து வீச்சை தொடக்க ஓவர்களில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் கவனமுடன் விளையாடுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

அதேவேளையில் தோனி, சீரான வேகத்துக்கு எதிராக மட்டையை சுழற்றும் திறன் கொண்டவர் என்பதால் அவரிடம் இருந்து பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படக்கூடும் என கருதப்படுகிறது. இடது கை சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சாண்ட்னரை ஐபிஎல் போட்டிகளின் போது சிஎஸ்கே அணியின் வலை பயிற்சியில் அதிகம் சந்தித்துள்ளதால் அவரை, தோனி லாவகமாக எதிர்கொள்ளக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா (17 விக்கெட்கள்), மொகமது ஷமி (14) ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். பர்மிங்காமில் குளிர்ந்த வானிலை நிலவுவதால் இன்றைய ஆட்டத்தை இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் அணுகக்கூடும். இந்த நிலை உருவானால் ரிஸ்ட் ஸ்பின்னர்களில் யுவேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ் நீக்கப்படக்கூடும்.

இந்தியாவும் அரை இறுதியும்...

இந்திய அணி இதற்கு முன்னர் 6 முறை அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. இதில் 1983, 2011-ம் ஆண்டுகளில் பட்டம் வென்ற இந்திய அணி, 2003-ல் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது. 1987, 2015, 1996-ம் ஆண்டுகளில் அரை இறுதியில் வீழ்ந்திருந்தது.

மழை வருமா?

மான்செஸ்டர் நகரில் இன்று மேகமூட்டம் அதிகளவில் இருக்கும் என்றும் லேசான மழை பொழிவும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டாஸ் சாதகம்..

இந்தத் தொடரில் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் முதலில் பேட் செய்த அணிகள் 5 முறை வெற்றி கண்டுள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கையே தேர்வு செய்யக்கூடும்.

new.JPG

மிரட்டுவாரா போல்ட்?

2015-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 22 விக்கெட்களை வேட்டையாடியிருந்த நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட் இம்முறை இதுவரை 15 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை 179 ரன்களுக்குள் சுருட்டியதில் டிரென்ட் போல்ட் (4/33) முக்கிய பங்கு வகித்திருந்தார். மேலும் இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 18 ஒருநாள் போட்டிகளில் டிரென்ட் போல்ட் 173.4 ஓவர்களை வீசி 36 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரது ரன் சிக்கன விகிதம் 4.61. இந்த ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக 5 ஆட்டங்களில் விளையாடி 3.92 ரன் சிக்கன விகிதத்துடன் 12 விக்கெட்களை சாய்த்துள்ளார். குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்துள்ளார். தன்வாழ்நாளில் ரோஹித் சர்மா 4 முறை டிரென்ட் போல்ட்டிடம் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close