[X] Close

ஹேப்பி பர்த்டே கங்குலி: 'இந்திய கிரிக்கெட்டின் தூண்'; சேவாக்கின் வித்தியாசமான '56 இன்ச்' வாழ்த்து


56

  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 15:05 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

கிரிக்கெட் ரசிகர்களால் 'தாதா', 'பெங்கால் டைகர்' என்று அழைக்கப்படுபவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரங் கங்குலியின் 47-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது

சவுரவ் கங்குலிக்கு அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், முகமது கைப், வி.வி.எஸ்.லட்சுமண், இசாந்த் சர்மா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. கடந்த 1990களில் இந்திய அணிக்கு அறிமுகமாகினார் சவுரவ் கங்குலி. தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கங்குலி கேப்டனாக இந்திய அணிக்கு நியமிக்கப்பட்டதில் இருந்துதான் அணித் தேர்வில் புதிய முறைகள் பின்பற்றப்பட்டன. இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக அளிக்கப்பட்டன. ஜாகீர்கான், யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல்வேறு வீரர்களுக்கு ஊக்கமாக இருந்து வழிகாட்டியவர் சவுரவ் கங்குலி. அவர்கள் மீது அதீதமான நம்பிக்கை வைத்திருந்தார். கங்குலிக்கு அடுத்தபடியாக வெற்றி கேப்டனாக வலம் வந்த தோனியும் கங்குலியின் கண்டுபிடிப்புதான்.

gg.jpg 

பேட்டிங்கில் ஆவேசத்தையும், களத்தில் ஆக்ரோஷத்தையும் இணைத்துச் செயலாற்றுவதுதான் கங்குலியின் பழக்கமாகும். கங்குலி மட்டும் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், நேரம் செல்லச் செல்ல பந்துகள் சிக்ஸருக்கும்,பவுண்டரிக்கு பறக்கும். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது. இதுவரை எந்த இந்தியக் கேப்டனும் இந்தச் சாதனையை முறியடிக்கவில்லை. 424 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி 18 ஆயிரத்து 576 ரன்கள் சேர்த்துள்ளார்.

இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் தொடரை வென்றது, ஆஸ்திரேலியாவின் தொடர் 16 டெஸ்ட் வெற்றிக்கு 2001-ல் முற்றுப்புள்ளி வைத்தது, 2-1 என்று தொடரை வென்றது, கங்குலி தலைமையில் இந்திய அணி 2-வதுமுறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்றது என பல சாதனைகளைச் சொல்லலாம்.

311 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கங்குலி 11,363 ரன்கள் குவித்துள்ளார். 113 டெஸ்ட் போட்டிகளில் 7,212 ரன்கள் சேர்த்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான கங்குலி, சச்சினுடன் சேர்ந்து தொடக்க ஜோடியாக களமிறங்கி மிரட்டி இருக்கிறார். இருவரும் சேர்ந்து 136 போட்டிகளில் 6,609 ரன்கள் சேர்த்துள்ளார்கள். 21 முறை 100 ரன்களுக்கு மேலாகவும், 23 முறை 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்கள்.

se.PNG 

ஷேவாக் ட்விட்டரில் கங்குலிக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்  "ஹேப்பி பர்த்டே 56 இன்ச் கேப்டன், தாதா. 56 இன்ச் மார்பு, 8-ம் தேதி,7-வது மாதம், 8*7=56, உலகக்கோப்பை சராசரி 56 ரன்கள் என அனைத்தும் 56 ஹேப்பி பர்த்டே தாதா, கடவுள் ஆசிர்வதிப்பாராக" எனத் தெரிவித்துள்ளார்.

விவிஎஸ் லட்சுமண் ட்விட்டரில் கூறுகையில் " சவுரவ் கங்குலிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க்கையில் மேன்மேலும்  வெற்றி பெற வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.

la.PNG 

முகமது கைப் விடுத்த வாழ்த்துச் செய்தியில், "இந்தியக் கிரிக்கெட்டின் தோற்றத்தை சிறப்பான முறையில் மாற்றிய வீரர், தலைசிறந்த கேப்டன், வீரர்களின் நம்பிக்கையைப் பெற்றவர், தாதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், " பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், கேப்டன், வர்ணனையாளர், ஒரு மனிதர் பல முகங்கள். பிறந்த நாள் வாழ்த்துகள் கங்குலி" எனத் தெரிவித்துள்ளது.

mohamad kaifjpg.jpg 

இசாந்த் சர்மா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், " ஹேப்பி பர்த்டே தாதா, இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய தூண் நீங்கள். அனைத்திலும் உங்களின் வழிகாட்டல் எனக்கிருக்கிறது நன்றி. உங்களுக்கென மறக்க முடியாத பல நினைவுகள் இருக்கினறன. கடவுள் ஆசிர்வதிப்பாராக" எனத் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close