[X] Close

கவனம்...பும்ராவின் பந்துவீச்சு விளையாடமுடியாத அளவில் இருக்கிறது: நியூஸி. அணியை எச்சரித்த வெட்டோரி


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 13:40 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரத் பும்ராவின் பந்துவீச்சு விளையாட முடியாத அளவில் இப்போது இருக்கிறது. கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நியூஸிலாந்து அணியை முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி எச்சரித்துள்ளார்.

மான்செஸ்டரில் நாளை நடக்கும் உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் நிலையில் இந்த அறிவுரையை வெட்டோரி வழங்கியுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது 8 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரின் எக்னாமி மற்ற பந்துவீச்சாளரைக் காட்டிலும் மிகக் குறைவாக 4 ரன்கள் அளவில்தான் இருக்கிறது. அனைத்து அணிகளுக்கும் பும்ராவின் பந்துவீச்சு சிம்ம சொப்பனமாக இருந்துவருவதை மறுக்கலாகாது. இந்தியாவின் வெற்றிக்கான துருப்புச்சீட்டாக பும்ரா இருந்து வருகிறார்.

பும்ராவின் பந்துவீச்சு குறித்து நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி ஐசிசி இணையதளத்தில் கட்டுரை எழுதியுள்ளார்.

daniel-vettori_.jpg

அவர் அதில் கூறியிருப்பதாவது:

''இந்தியாவும், இங்கிலாந்து அணியும் எட்ஜ்பாஸ்டனில் மோதிய ஆக்ரோஷத்தை நியூஸிலாந்து அணியினர் பார்த்திருப்பார்கள். இந்திய அணி இப்போது இருக்கும் நிலையில், மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக நியூஸிலாந்து அணி நிர்ணயிப்பதுதான் பாதுகாப்பானது.

அதிலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு இப்போது வீரர்களால் விளையாட முடியாத அளவுக்கு இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். இங்கிலாந்து அணிக்கு எதிராக வழக்கத்துக்கு மாறான எக்கானமியுடன் பும்ரா பந்துவீசினார். ஒவ்வொரு வீரரையும் குறிவைத்தார். ஆதலால், நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் பும்ரா பந்துவீச்சை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

அதேபோல சுழற்பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மன்கள் ஹர்திக் பாண்டியா, ரிஷப்பந்த் கையாளும் விதம் அபாயகரமாக இருக்கிறது. இருவரும் சுழற்பந்துவீச்சை வெளுத்துக் கட்டுகிறார்கள். டெத் ஓவர்களில் ஷமியின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது. ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு பணியை சிறப்பாகச் செய்கிறார்கள்.

இந்திய அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி ஆக்ரோஷமான பந்துவீச்சையும், ஆவேசமான பேட்டிங்கையும் வெளிப்படுத்தினால் முடியும். அதாவது மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக வைக்கவேண்டும். பந்துவீசினால், தொடக்கத்திலேயே டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி தர வேண்டும்.

தொடக்கத்தில் இந்திய அணியினர் மெதுவாகத்தான் விளையாடுகிறார்கள் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், தொடக்கத்தில் நிதானமாக ஆடிய அதன்பின் கட்டுப்படுத்த முடியாத வேகத்துக்கு இந்திய பேட்ஸ்மேன்களின் வேகம் இருக்கிறது. அதிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்தாவிட்டால் நியூஸிலாந்து அணி பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும்.

டிரன்ட் போல்ட் இந்திய அணியைப் பற்றி நன்கு அறிந்தவர். பல முறை இந்திய அணிக்கு எதிராக போல்ட்  விளையாடியுள்ளார். குறிப்பாக ஐபிஎல் போட்டியில் விளையாடிய போல்ட், கேன் வில்லியம்ஸன் ஆகியோருக்கு இந்திய பேட்ஸ்மேன்களின் பலவீனம், பலம் தெரியும். அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு, வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

முடிந்தவரை ஆக்ரோஷமாகப் பந்துவீசுங்கள், விரைவாக தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்துங்கள். போல்ட் தொடக்கத்திலேயே தனது ஸ்விங், நக்குல் பால், யார்க்கர் பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்த வேண்டும். இல்லாவிட்டால் சிரமம்தான்''.

இவ்வாறு வெட்டோரி தெரிவித்துள்ளார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close