[X] Close

இந்த ஐசிசி இப்படி செய்து விட்டதே.. நிகர ரன் விகித முறை ஏன்? - பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் புலம்பல்


  • kamadenu
  • Posted: 06 Jul, 2019 15:35 pm
  • அ+ அ-

பாகிஸ்தான் நேற்று தன் கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 11 புள்ளிகள் பெற்றது, நியூஸிலாந்துடன் இது புள்ளிகள் அளவில் சமம் ஆனாலும் நிகர ரன் விகிதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் -0.43 என்று 5ம் இடத்தில் முடிந்தது, மாறாக நியூஸிலாந்து 11 புள்ளிகளுடன் 0.175 என்ற நிகர ரன் விகிதத்தில் 4ம் இடத்தில் முடிந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

 

இந்நிலையில் பாகிஸ்தான் பயிற்சியாளர் நிகர ரன் விகித அடிப்படையில் நாக்-அவுட் சுற்று தகுதியை நிர்ணயிப்பதை விட லீக் சுற்றில் இருதரப்பு போட்டி முடிவின் அடிப்படையில் தகுதியை தீர்மானிக்க வேண்டும் என்று புலம்பியுள்ளார். ஆனால் லீக் சுற்றில் நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தால் இந்தக் கேள்வியே வரப்போவதில்லை என்பது அவருக்குத் தெரியவில்லை.

 

“ஐசிசி நிகர ரன் விகிதத்தை தகுதிக்கான அளவுகோலாக எடுத்துக் கொள்ளாமல் லீக் சுற்றில் இருதரப்பு போட்டி வெற்றி முடிவை கணக்கில் எடுத்துக் கொண்டால் நல்லது என்று நான் உணர்கிறேன். அப்படி செய்திருந்தால் நாங்கள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருப்போம். மிகவும் ஏமாற்றமாக உள்ளது, மே.இ.தீவுகளுக்கு எதிராக முதல் போட்டியில் பெற்ற தோல்வியைத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

 

ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் வாய்ப்பையும் நழுவ விட்டோம், இந்த இரண்டு துர்சொப்பனங்கள் என்னை பீடிப்பதென்னவோ உறுதி. ஒரு மோசமான ஆட்டத்திற்குப் பிறகே மீண்டெழ போராட வேண்டியுள்ளது என்பதை இந்த ஐசிசி சிஸ்டம் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

ஓய்வறை மிகவும் ஏமாற்றமாக காட்சியளிக்கிறது, வெற்றிக்குப் பிறகு  பரஸ்பர வாழ்த்துக்கள் எதுவும் இல்லை ஏனெனில் அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை என்பதால். எனினும் தகுதி பெற்ற 4 சிறந்த அணிகளுக்கு வாழ்த்துக்கள். எங்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இங்கிலாந்து, நியூஸிலாந்தை நாங்கள் வீழ்த்தினோம் என்பதே. இது நாங்கள் மற்ற அணிகளை விர மிகவும் தூரத்தில் இல்லை என்பதைக் காட்டுகிறது” இவ்வாறு ஏமாற்றத்தில் புலம்பியுள்ளார் மிக்கி ஆர்தர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close