[X] Close

கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் இன்று மோதல்; மிடில் ஆர்டர் பேட்டிங்குக்கு தீர்வு காணுமா இந்தியா?


  • kamadenu
  • Posted: 06 Jul, 2019 09:02 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று லீட்ஸ் நகரில் மோதுகிறது.

இந்திய அணி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் போதிலும் நடுவரிசை பேட்டிங்கவலைக்குரியதாக உள்ளது. மேலும் அரை இறுதிக்கு முன்னதாக சீனியர் வீரரான தோனி பார்முக்கு திரும்புவதும் அவசியமாக உள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்தியகிரிக்கெட் அணி 8 ஆட்டத்தில் 6 வெற்றி, ஒருதோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என 13 புள்ளிகளுடன் ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதிபெற்று விட்டது. புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை உறுதி செய்துள்ள இந்தியஅணி, இன்றைய ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தினால் முதலிடத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்ய வாய்ப்புள்ளது.

இது நிகழ வேண்டுமானால் 14 புள்ளிகளுடன் உள்ள ஆஸ்திரேலிய அணி இன்றுநடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைய வேண்டும். ஒருவேளை இந்திய அணி லீக் சுற்றில் முதல்இடத்தை பிடித்தால் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ளும். இது அபாயகரமான இங்கிலாந்து அணியுடன் மோதுவதைக் காட்டிலும் சற்று பாதுகாப்பானதாக இருக்கக்கூடும்.

புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து அணி 3-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவுசெய்தால் கட்டாயம் இங்கிலாந்து அணியுடன்தான் அரை இறுதியில் பலப்பரீட்சை நடத்த வேண்டும்.

 அரை இறுதி சுற்று நெருங்கியுள்ள நிலையில் இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்திய அணி நிர்வாகமானது பிளான் ஏ-வையே (வெற்றிகரமாக செயல்பட்டு வரும் டாப் ஆர்டர் பேட்டிங்) பெரிதும் நம்பியுள்ளது.

 துணை கேப்டனான ரோஹித் சர்மா 544 ரன்கள் வேட்டையாடி உள்ளதுடன் 4 சதங்கள் விளாசி உலகக் கோப்பை தொடரில் அதிக சதங்கள் விளாசியிருந்த சங்கக்கராவின் சாதனையை சமன் செய்து அதீத பார்மில் உள்ளார். விராட் கோலி 5 அரை சதங்களுடன் 408 ரன்கள் சேர்த்துள்ளார். இவர்கள் இருவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

அதேவேளையில் தோனி தனது பார்மை மீட்டெடுப்பதற்கு இன்றைய ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். இறுதிகட்ட ஓவர்களில் தனதுபேட்டிங் திறனை தோனி சோதித்துக் கொள்வதற்கு இலங்கையை விட வேறு ஒரு சிறந்த அணி கிடைக்காது. ஏனெனில் இறுதி கட்ட ஓவர்களில் மலிங்கா யார்க்கர்கள், வேகம் குறைந்த பந்துகளை வீசும் திறன் கொண்டவர்.

இது ஒருபுறம் இருக்க இந்தத் தொடரில்தோனி சுழற்பந்து வீச்சில் ரன்கள் சேர்க்ககடுமையாக திணறி வருகிறார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக 81 பந்துகளை சந்தித்துள்ளதோனி 47 ரன்களே சேர்த்துள்ளார். சுழற்பந்து வீச்சுக்கு எதிரான அவரது பலவீனம் நடு ஓவர்களில் அணியின் ரன்குவிப்பை பாதிப்பதாக உள்ளது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சு மூலம் தோனிக்கு அழுத்தம்

கொடுப்பதில் இலங்கை அணி கவனம்செலுத்தக்கூடும். இந்த வகையில் விளையாடும் லெவனில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான மிலிந்தா ஸ்ரீவர்தனாவுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். ஏற்கெனவே இந்தத் தொடரில் தனஞ்ஜெயா சிறப்பாக செயல்பட்டு ரன் வழங்குவதில் சிக்கனம் காட்டி வருகிறார்.

6 ஆட்டங்களில் 31 ஓவர்களை வீசியுள்ள அவர், 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளதுடன் 146 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். இதனால் தனஞ்ஜெயா டி சில்வாவுக்கு எதிராகநடு ஓவர்களில் தோனி அதிக பந்துகளை விளையாடி கணிசமான ரன்களை எடுத்தால், அது அவரது நம்பிக்கையை அதிகரிக்கும்.

இன்றைய ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும். ஏனெனில் தற்போது அணியில் புதிதாக இணைந்துள்ள மயங்க் அகர்வாலை தவிர மற்ற அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இலங்கை அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளதால் ஜடேஜாவுக்கு பதிலாக கேதார் ஜாதவை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவது குறித்தும் பரிசீலிக்கப்படக்கூடும்.

ஒருவேளை கேதார் ஜாதவ் இடம் பெற்றால் தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார். தோனி இந்தத் தொடரில் 5-வது வீரராக களமிறங்கி வருகிறார். அதைத் தாண்டிய வரிசையில் தோனியை களமிறக்குவதில் விராட்கோலி இதுவரை ஆர்வம் காட்டவில்லை. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் தோனி 4-வது வீரராக களமிறக்கப்பட்டால் அது சுவாஸ்ரயமாக இருக்கக்கூடும்.

ஏனெனில் பவர் ஹிட்டர்களான ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா ஆகியோர் போன்றவர்கள் கீழ் வரிசையில் தங்கள் இயல்பான ஆட்டத்தை சுதந்திரமாக விளையாட முடியும். விஜய் சங்கருக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதுதான். ஏனெனில் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் சீரான ஆட்டத்தை வழங்கி வருகிறார்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, மொகமது ஷமி ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா 14 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர். அரை இறுதி சுற்றை கணக்கில் கொண்டு இன்றைய ஆட்டத்தில் இவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஓய்வு வழங்கப்படக்கூடும்.

திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி ஏற்கெனவே அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவு அந்த அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பேட்டிங்கில் கடந்த சில ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி வரும் அவிஷ்கா பெர்ணாண்டோவிடம் இருந்து மேலும் சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

தோனியின் செயல்பாடு

ஆட்டம்

7

ரன்கள்

223

அதிகபட்சம்

56*

சராசரி

44.60

ஸ்டிரைக் ரேட்

93.30

பவுண்டரி

19

சிக்ஸர்

 4

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close