[X] Close

அரை இறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் அணி எது?


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 08:05 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறிய நிலையில் தற்போது 3-வது அணியாக இங்கிலாந்து இணைந்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிராக அந்த அணியின் வெற்றியால் அரை இறுதிக்கு முன்னேறும் பாகிஸ்தான் அணியின் கனவு கலைய உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சாத்தியம் இல்லாத வெற்றியை பெற வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்துடன் பாகிஸ்தான் அணி தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் (-0.792) குறைந்த அளவிலான ரன் ரேட்டை பெற்றிருப்பதே அந்த அணி வெளியேறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் அணி வெளியேறும் நிலையில் 11 புள்ளிகளுடன் 0.175 ரன் ரேட்டை கொண்டுள்ள நியூஸிலாந்து கடைசி அணியாக அரை இறுதியில் நுழையும்.

புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா (14), இந்தியா (13) ஆகிய அணிகளுக்கு இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ளது. இந்திய அணி நாளை பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. அதேவேளையில் மாலையில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இந்த இரு ஆட்டங்களின் முடிவை பொறுத்தே அரை இறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என்பது தெரியவரும். இந்திய அணி, இலங்கையை வீழ்த்தும் பட்சத்தில் 15 புள்ளிகளுடன் லீக் ஆட்டத்தை நிறைவு செய்யும். ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தால் 2-வது இடத்துக்கு தள்ளப்படும். இந்த நிலை ஏற்பட்டால் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும். அந்த வகையில் அரை இறுதியில் இந்திய அணி, புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தை பிடிக்க உள்ள நியூஸிலாந்தை சந்திக்க நேரிடும்.

இந்த நிலை உருவானால் ஆஸ்திரேலிய அணி தனது அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதும் சூழ்நிலை உருவாகும். ஒருவேளை ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் 16 புள்ளிகளுடன் முதலிடத்திலேயே இருக்கும். இந்த நிலை ஏற்பட்டால் ஆஸ்திரேலிய அணி அரை இறுதியில் நியூஸிலாந்துடன் மோதக்கூடும். இந்தியா தனது அரை இறுதியில் இங்கிலாந்தை சந்திக்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close