[X] Close

எட்டாக்கனியானது அரை இறுதி வாய்ப்பு; சாத்தியமில்லாத வெற்றியை பெறுமா பாகிஸ்தான் அணி?- வங்கதேசத்துடன் இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 08:09 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் உள்ள லார்ட்ஸ்மைதானத்தில் இன்று நடை பெறும்ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் மோதுகின்றன.

அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைந்துவிட்ட நிலையில் சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்றையஆட்டத்தை சந்திக்கிறது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என 9 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

1992-ம் ஆண்டு சாம்பியன் பட்டம்வென்ற அணியை போன்றே மீள் எழுச்சி கண்டிருந்த பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பானது இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்த போதே ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. மேலும் நேற்று முன்தினம் நியூஸிலாந்து அணி இங்கிலாந்திடம் சரண்டர் ஆனதும் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

 நாக் அவுட் சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறுவதற்கான கணித கணக்கீடு சாத்தியமற்றதாக உள்ளது. ஏனெனில் பாகிஸ்தானின் நெட் ரன் ரேட் -0.792 ஆக உள்ளது.

அதேவேளையில் 11 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் நியூஸிலாந்து அணியின் நெட் ரன் ரேட்+0.175 ஆக உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 400 ரன்களை குவித்து, வங்கதேச அணியை 84 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும்.

இதன்படி பாகிஸ்தான் அணி 316 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை பாகிஸ்தான் அணி 350 ரன்கள் சேர்த்தால் வங்கதேச அணியை 311 ரன்கள்வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றுதான்.

எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் பாகிஸ்தான் அணி டாஸில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். மாறாக பாகிஸ்தான் அணி பீல்டிங் செய்ய எதிரணியால் அழைக்கப்பட்டால் முதல் பந்துவீசப்படுவதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் அணியின்அரை இறுதி கனவு கலைந்துவிடும். பரம வைரியான இந்தியாவிடம் தோற்ற பிறகு பாகிஸ்தான் அணி உத்வேகத்துடன் விளையாடியது. தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. இந்த ஆட்டங்களில் பாபர் அஸாம்,ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தினர். அதேவேளையில் பந்து வீச்சில் இளம் வீரரான ஷாஹீன் ஷா அப்ரீடி சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

 வங்கதேச அணியானது ஏற்கெனவே அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. எனினும் அந்த அணி வெற்றியுடன் தாயகம் திரும்புவதில் முனைப்பு காட்டக்கூடும்.

தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த வங்கதேச அணி தோல்வியடைந்த ஆட்டங்களில் கூட கடுமையாக போராடியிருந்தது.

அந்த அணியானது ஆல்ரவுண்டரான ஷகிப் அல்ஹசனின் திறனை வெகுவாக சார்ந்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் 500 ரன்களை குவித்து 10 விக்கெட்களையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள ஷகிப் அல் ஹசன், மீண்டும் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்.

 இந்த உலகக் கோப்பையில் சர்வசாதாரணமாக 300 ரன்களுக்கு மேல் வங்கதேச அணிகுவித்துள்ளது. அந்த அணியின்வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பலவீனமான பந்து வீச்சுதான். அதிலும் முக்கியமாக கேப்டன் மோர்டசாவிடம் இருந்து எந்த ஒரு கட்டத்திலும் உயர்மட்ட பந்து வீச்சு திறன் வெளிப்படவில்லை. முஸ்டாபிஸூர் ரஹ்மானின் பந்து வீச்சு மட்டுமே ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close