[X] Close

அம்பதி ராயுடுவுக்கு எதிராகச் சென்றது எது?


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 15:44 pm
  • அ+ அ-

-Muthukumar R_50162

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவே கடந்த ஓராண்டு அல்லது 6 மாத காலமாக இந்திய பேட்டிங் வரிசையின் 4ம் இடம் பற்றிய கேள்வி பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. அப்போது கேப்டன் விராட் கோலி, 4ம் இடத்துக்கான கவலை தீர்ந்தது. ராயுடு அந்த நிலைக்குப் பொருத்தமானவர் என்று கூறினார்.

 

இதனால் உலகக்கோப்பையில் தான் ஆடப்போகிறோம் என்று எல்லா இந்திய வீரர்கள் போலவும் அவரும் கனவில் இருந்தார், ஆனால் திடீரென முப்பரிமாண ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், ராயுடுவை விட ‘பெட்டர்’ என்று அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்தார். 

 

இதற்கு கிண்டலாக ராயுடுவும், தான் உலகக்கோப்பைப் போட்டிகளைப் பார்க்க புதிதாக 3டி கண்ணாடிகளை வாங்கியுள்ளேன் என்றார், இது மிகவும் அசிங்கமான ஒரு பரிமாணத்துக்குச் செல்லும் போது ராயுடுவை உலகக்கோப்பை இந்திய அணியின் ரிசர்வ் வீரர்களில் ஒருவராகத் தேர்வு செய்து சமாதானம் செய்தனர்.

 

ஆனால் பலரும் புள்ளிவிவரங்களின் படி ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்குவதுதான் நியாயம் என்று கூறினர். அதில் உண்மையும் உள்ளது. கடந்த செப்டம்பரில் ஆசியக் கோப்பைக்கு இந்திய அணிக்கு ராயுடு திரும்பியதிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய இந்திய உள்நாட்டுத் தொடர் வரை இந்திய அணி விளையாடிய 24 போட்டிகளில் ராயுடு 21 போட்டிகளில் ஆடினார். இதில் சதம், மற்றும் அரைசதங்களை எடுத்திருந்தார்.

 

நியூஸிலாந்து  ஒருநாள் தொடரில் ராயுடு 5 இன்னிங்ஸ்களில் 190 ரன்களை எடுத்திருந்தார். இவரே அதிகபட்ச ஸ்கோர். சராசரி 63 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட்டும் 80க்கும் மேல் வைத்திருந்தார்.  மேலும் ராயுடு மீண்டும் அணிக்கு வந்ததிலிருந்து 14 முறை 4ம் நிலையில் இறங்கினார். இதில் 464 ரன்களை அவர் எடுத்திருந்தார் 40க்கும் மேல் சராசரி. மேற்பார்வைக்கு 4ம் நிலைக்கு இவர் சரியான வீரர் என்றுதான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. விராட்கோலியும் இதனால்தான் கூறியிருந்தார்.

 

சரி பின்பு எங்குதான் தவறு நிகழ்ந்தது? மீண்டும் இந்திய அணிக்கு ராயுடு திரும்பி ஆடிய 20 இன்னிங்ஸ்களில், அதாவது 2018-லிருந்து 25 ரன்களுக்கும் குறைவாக 9 முறை ஆட்டமிழந்திருந்தார். இந்தக் காலக்கட்டத்தில் நியூஸிலாந்தில் கடுமையான ஸ்விங் பந்து வீச்சு ஆடுகளத்துக்கு எதிராக 90 ரன்களை அதிகபட்சமாக எடுத்தது இதே காலக்கட்டத்தில்தான், ஆனால் துணைக்கண்டத்துக்கு வெளியே ராயுடு எடுத்த அரைசதம் இதுவே.

 

பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் சில போட்டிகளில் ராயுடு நீக்கப்பட்டார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தாங்கள் வெற்றி பெறுவதற்காக ஸ்லோ பிட்ச்களாக அமைத்ததும் ராயுடு பேட்டிங்குக்கு ஒரு கட்டத்தில் கைகொடுக்கவில்லை.

 

மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பெரும் தவறைச் செய்தார் ராயுடு, உள்நாட்டு கிரிக்கெட் தான் சர்வதேச கிரிக்கெட்டுக்கான அணித்தேர்வு அளவு கோலாக இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

 

ஆகவே துணைக்கண்ட பிட்ச்களில் அவரது பார்மை வைத்து இங்கிலாந்தில் வாய்ப்பு கொடுப்பது பற்றிய சந்தேகம், இன்னொன்று வெறும் பேட்டிங் மட்டுமே செய்யும் ஒற்றைப் பரிமாண வீரராக இருந்தது, உள்நாட்டுக் கிரிக்கெட்டைத் துறந்தது விஜய்சங்கரை சர்வதேச தரத்திற்கு முழுதும் தயாராகி விட்ட ஓர் முழுமையான ஆல்ரவுண்டர் என்று இந்திய அணி நிர்வாகம் நம்பியது ஆகியவை ராயுடுவுக்கு எதிராகப் போனது.

 

ராயுடுவும் தன் பேட்டிங்கில் பலபரிமாணங்களைக் காட்டக் கூடியவராக இல்லை என்பதும் ஒரு விஷயம். 

 

அம்பதி ராயுடு தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பல திருப்பங்களைச் சந்தித்தவர் இங்கிலாந்தில் 2002-ல் அண்டர்-19 தொடரில் தொடக்கத்தில் இறங்கி 177 ரன்களை விளாசி இங்கிலாந்தை க்ளீன் ஸ்வீப் செய்ததில் முக்கியப் பங்காற்றினார். அதன் பிறகான ரஞ்சி சீசனில் 225 பந்துகளில் ஹைதராபாத்திற்காக இரட்டைச் சதம் அடித்து அடுத்த இந்திய நட்சத்திர வீரர் இவர்தான் என்று பலராலும் விதந்தோதப்பட்டார், ஆனால் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ராஜேஷ் யாதவ் உட்பட பல அதிகாரிகளின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டு ஆந்திராவுக்கு  ஆடச் சென்றார். நன்றாக இந்திய அணிக்கு வந்திருக்க வேண்டியவர் பல்வேறு உள்குத்து அரசியலினால் 2007-ல் தடைசெய்யப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீகில் சேர்ந்தார், ஆனால் 2009-ல் பிசிசிஐ இவர் உட்பட பல ஐசிஎல் வீரர்களை மன்னிப்பு வழங்கி ஏற்றுக் கொள்ள மீண்டும் இவரது கிரிக்கெட் கரியர் ஒளிவிடத் தொடங்கியது.  பிறகு ஐபிஎல் ஆட்டங்கள் மூலம் 2013-ல் ஜிம்பாபவே தொடர் மூலம் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினார். 2015 உலகக்கோப்பை அணியில் இருந்தார் ராயுடு ஆனால் விளையாட லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

ஆனாலும் ராயுடுவை 2019 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாதது இன்னமும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்றால் அதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close