[X] Close

அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் அம்பதி ராயுடு திடீர் ஓய்வு


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 13:23 pm
  • அ+ அ-

உலகக் கோப்பைப் போட்டிக்கு தன்னை தேர்வு செய்யாததால் அதிருப்தியில் இருந்த இந்திய அணி வீரர் அம்பதி ராயுடு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக திடீரென இன்று அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய ஓய்வு குறித்த முடிவை பிசிசிஐ நிர்வாகத்துக்கு இ-மெயில் மூலம் தெரிவித்துவிட்டதாக செய்திகள் தெரிவித்தாலும், அது உறுதி செய்யப்படவில்லை.

உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவித்தபோது, நடுவரிசைக்கு தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என 3 வகையான பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்பதால், விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார் என்று தேர்வுக் குழுத்தலைவர் பிரசாத் தெரிவித்தார்.

அதேசமயம், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இந்திய அணியில் 4-வது இடத்துக்கு சரியான வீரர் அம்பதி ராயுடுதான் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்து வந்தார். இதனால், உலகக்கோப்பைக்கான அணியில் அம்பதி ராயுடுவுக்கு இடம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது ஆனால், விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதால் அம்பதி ராயுடு கடும் அதிருப்தியில் இருந்தார். மேலும் ரிசர்வ் வீரராக ராயுடுவை பிசிசிஐ வைத்திருந்தது

இதற்கிடையே சமீபத்தில் விஜய் சங்கரும் கணுக்கால் காயத்தால் உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார். இதனால் அவருக்கு பதிலாக ரிசர்வ் வீரராக இருக்கும் தன்னைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அணியில் சேர்க்கப்பட்டார். இதனால், இந்த முறையும் தனக்கு இருந்த வாய்ப்பு பறிபோய்விட்டதாக அம்பதி ராயுடு மிகவும் வேதனையுடன் இருந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக இன்று அம்பதி ராயுடு அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மின்அஞ்சலும், பிசிசிஐக்கு அனுப்பியுள்ளார் எனத் தெரிகிறது. ஏற்கனவே உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் இருந்து ராயுடு ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த 1985-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி அம்பதி திருப்பதி ராயுடு பிறந்தார். கிரிக்கெட்டில் நடுவரிசை வலதுகை பேட்ஸ்மேனாகவும், அரிதாக ஆப்ஸ்பின் பந்துவீச்சையும், விக்கெட்கீப்பும் செய்தார் ராயுடு.

பரோடா, ஐசிஎல், இந்தியா லென், இந்தியா ஏ போன்ற அணிகளிலும் இடம் பெற்று விளையாடிய அம்பதி ராயுடு, 97 முதல் தரப் போட்டிகளில் 6,151ரன்கள் குவித்தார். இதில் 16 சதங்களும், 34 அரைசதங்களும் அடங்கும். ஏ கிளாஸ் பிரிவில் 160 போட்டிகளில் ராயுடு 5,103 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் 5 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும்.

இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 24-ம்தேதி ஜிம்பாப்பே அணிக்காக அம்பதி ராயுடு களமிறங்கினார். கடைசியாக கடந்த  மார்ச் மாதம் 8-ம்தேதி ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடந்த போட்டியில் இந்திய அணியில் ராயுடு இடம் பெற்றார்.

இதுவரை 55 ஒருநாள் போட்டிகளி்ல் விளையாடியுள்ள ராயுடு, 1,694 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 124 ரன்கள் சேர்த்துள்ளார். 3 சதங்கள், 10 அரைசதம் அடித்துள்ளார். 216டி20 போட்டிகளில் ராயுடு, 4,584 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு சதம், 24 அரைசதங்கள் அடித்துள்ளார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் ஹீரோஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close