[X] Close

ரோஹித் சர்மா சாதனை சதத்துடன் இந்திய அணி 314 ரன்கள் குவிப்பு: முஸ்தபிசுர் ரஹ்மான் அபார பவுலிங்கில் 5 விக்கெட்


314-5

  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 19:38 pm
  • அ+ அ-

ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019-ன் 40வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ரோஹித் சர்மா சதத்துடன் முஸ்தபிசுர் ரஹ்மானின் அபாரப் பந்துவீச்சையும் மீறி 314  ரன்கள் குவித்துள்ளது.

 

ரோஹித் சர்மாவுக்கு 9 ரன்களில் கேட்சை விட்டார் தமிம் இக்பால், அதைப் பயன்படுத்தி பிரமாத சதம் எடுத்த ரோஹித் சர்மா 104 ரன்களில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என்று ஹிட்மேனாகி 30வது ஓவரில் ரோஹித்தை வெளியேற்றினார். முஸ்தபிசுர் ரஹ்மான் ஒரே ஓவரில் விராட் கோலி (26), ஹர்திக் பாண்டியா (0) ஆகியோரை வீழ்த்தினார். அந்த ஓவர் மெய்டன் ஓவராகவும் அமைந்த்து. பிறகு முஸ்தபிசுர் கடைசி 2 ஓவர்களில் 6 ரன்களுக்கு மேலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் இந்திய அணி 318 ரன்கள் எடுப்பதை தடுக்க முடியவில்லை.

 

இந்திய அணி 300 ரன்களைக் கடப்பதை உறுதி செய்தவர் தோனி. அவர் மொத்தம் 33 பந்துகள் ஆடி 35 ரன்களை 4 பவுண்டரிகளுடன் அபாரமாக ஆடி எடுத்ததால் மட்டுமே 300 ரன்களைக் கடக்க முடிந்தது. தினேஷ் கார்த்திக்கிற்கு எப்போதாவது அரிதாக வாய்ப்பு வழங்கினாலும் அவர் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. அவர் 9 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

 

எதிர்முனையில் தோனி இருக்கும் போது தினேஷ் கார்த்திக் தோள்பட்டைக்கு வரும் ஷார்ட் பிட்ச் ஸ்லோ ஆப் கட்டரை புல் ஆடுகிறேன் என்று கொடியேற்றினார். 30 அடி வளையத்துக்குள்ளேயே அவுட். தோனி ஒரு முனையில் இருக்கும் போது தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுப்பதுதான் முறை பெரிய ஷாட் அடிக்கப் போய் ஆட்டமிழந்து தன் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் வெளியேறினார்.

 

அதே போல்தான் ரிஷப் பந்த்  (48), தோனியுடன் சுமார் 5 ஒவர்களில் 40 ரன்கள் கூட்டணி அமைத்தார். ஆனால் அரைசதம் எடுக்கும் முன் எதிர்முனையில் தோனி இருக்கும் போது சிங்கிள் எடுத்து ஆடாமல் பெரிய ஷாட்டான ஸ்லாக் ஸ்வீப்பை ஆடி  மைதானத்தின் நீளமான பவுண்டரியில் கேட்ச் ஆகி வெளியேறினார். எதிர்முனையில் அதிரடி பினிஷர் இருக்கும் போது அவருடன் எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடியிருந்தால் ரிஷப் பந்த் அரைசதம் கண்டு அதற்கு மேலேயும் சென்றிருக்கலாம். பிட்சின் தன்மையைப் புரிந்து கொண்டுதான் தோனி ரிஸ்க் எடுப்பதில்லை, அதனால்தான் அவர் புல்டாஸ்களையும் எச்சரிக்கையாக ஒன்று, இரண்டு என்று ஆடுகிறார். தோனியின் பேட்டிங் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை தினேஷ் கார்த்திக்கும், ரிஷப் பந்த்தும், ராகுலும் உருவிக் கொள்வது நல்லது.

dhoni.jpg 

தோனி 50வது ஓவரில் முஸ்தபிசுர் வீசிய சுமார் 137-38 கிமீ பவுன்சர் வேகத்தில் மிட் ஆன் மீது அடிக்கப் பார்த்தார். ஆனால் பந்து துரதிர்ஷ்டவசமாக நடுவர் அருகில் காற்றில் எழும்ப ஷாகிப் அல்ஹசன் கேட்ச் எடுத்தார், மிக முக்கிய விக்கெட், ஏனெனில் கடைசி 3 பந்தில் தோனி 2 அல்லது 3 சிக்சர்களை அடிக்கக் கூடியவர் ஆகவே அவுட் ஆனது இந்திய ஸ்கோரில் 10-15 ரன்களைக் குறைத்தது. ஆனால் அவர் 35 ரன்களை எடுத்திருக்காவிட்டால் இந்தியா 300 ரன்களை எட்ட திணறியிருக்கும்.

 

தொடக்கத்தில் கே.எல்.ராகுல் (77), ரோஹித் சர்மா (104) இணைந்து முதல் விக்கெட்டுக்காக 29.2 ஓவர்களில் 180 ரன்கள் என்று ஓவருக்கு வெறும் 6 ரன்கள் என்ற விகிதத்தில் சென்றனர், அன்று இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியில் முதல் 10 ஓவர்களில் 28 ரன்கள்தான் வந்தது என்ற விமர்சனங்களை அடுத்து இன்று 10 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்தனர்,  ஆனால் அடுத்த 19.2 ஓவர்களில் 111 ரன்களையே எடுத்தனர்.  இதிலும் முதல் 10 ஓவர் போல் சென்றிருந்தால் ஸ்கோர் 138-140 பக்கம் வந்திருக்கும். இந்தச் சொதப்பலினால் இந்திய அணி 318 ரன்களையே எடுக்க முடிந்தது. இல்லையேனில் 340-350 ரன்கள் வந்திருக்கும்.

 

கே.எல்.ராகுல் 77 ரன்களை 92 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் எடுத்து ரூபல் ஹுசைன் பந்தை எட்ஜ் செய்து முஷ்பிகுர் ரஹீமின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார். விராட் கோலி தன் வழக்கமான பாணியில் 27 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து முஸ்தபிசுர் ரஹ்மான் பந்தை ஷார்ட் பவுண்டரியை நோக்கி குறிவைத்து அடிக்கும் முயற்சியில் கேட்ச் ஆனார். இதே ஓவரில் ஹர்திக் பாண்டியாவை நிறுத்தி வைத்து வைடு ஸ்லிப்பில் கேட்ச் ஆக்கினர். டக் அவுட் ஆனார் ஹர்திக் பாண்டியா.

 

இந்த ஓவர் திருப்பு முனையாகியிருக்கும், ஆனால் ரிஷப் பந்த் 41 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது 45வது ஓவரில் இந்திய அணி 277/5 நல்ல வேளையாக அதிலிருந்து தோனி பிரமாதமாக ஆடி 300 ரன்களை கடப்பதை உறுதி செய்ததோடு இந்திய அணி 314 ரன்கள் எட்டுவதை உறுதி செய்தார்.

 

40வது ஓவரில் இந்திய அணி 251/4 என்று இருந்தது, காரணம் பந்த் 40வது ஒவரில் சைபுதினை 3 பவுண்டரிகள் விளாசினார். 40 ஓவர் முடிவில் தோனி 3 பந்துகளில் 1 ரன் என்று இருந்தார். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தும் மேலும் 63 ரன்களை எடுக்க முடிந்தது என்றால் அது தோனியால்தான், அவர் 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கடைசி ஒவரில்தான் அவுட் ஆனார்.

 

வங்கதேசம் தரப்பில் ஹீரோ முஸ்தபிசுர் ரஹ்மான், இவர் 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷாகிப் அல் ஹசன் டைட்டாக வீசி 10 ஒவர் 41 ரன்கள் 1 விக்கெட்.  சவுமியா சர்க்கார் 6 ஓவர் 33 ரன் 1 விக்கெட்.

 

பிட்ச் கொஞ்சம் மந்தமடைந்திருப்பதால் வங்கதேசம் விரட்டுவதற்கு சற்று கடினம்தான்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close