[X] Close

இந்தியாவுக்கு முதல் தோல்வி- 27 ஆண்டுகளுக்குப்பின் இங்கிலாந்து வெற்றி: பாகிஸ்தானுக்கு சிக்கல்


27

  • kamadenu
  • Posted: 01 Jul, 2019 00:13 am
  • அ+ அ-

-போத்திராஜ்

பேர்ஸ்டோவின் காட்டிசதம், துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால், எட்ஜ்பாஸ்டனில் நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது.

இந்த போட்டித்தொடரில் தோல்வியே சந்திக்காமல் வந்த இந்தியஅணி முதல் தோல்வி அடைந்தது. 27 ஆண்டுகளுக்குப் பின்(1992) இந்திய அணியை உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து அணி. ஆட்டநாயகன் விருது பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 8போட்டிகளில் 5 வெற்றிகள், 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியது. அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. ஆனாலும், நியூஸிலாந்துடனான ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயம் இங்கிலாந்துக்கு இருக்கிறது.

அதேபோல பாகிஸ்தான் அணியும் 4 வெற்றி, 9 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், வங்கதேசத்துக்கு  எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

முதலில் பேட் செய்த  இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் சேர்த்தது. 338 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன்களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் சேர்த்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது.

kkk.jpg 

நம்பிக்கை

இந்திய அணியைப் பொருத்தவரை களத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி இருக்கும் வரை இந்திய அணி வென்றுவிடும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. கோலி ஆட்டமிழந்த பின்பும், அந்த நம்பிக்கையை அடுத்துவந்த ரிஷப்பந்த், ஹர்திக் பாண்டியா எடுத்துச் சென்றார்கள், ஆட்டத்தை சுவராஸ்யமாக வைத்திருந்தார்கள். ஆட்டத்தின் முடிவு யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாகப் போகலாம்  என்று இருந்தது. 

சுவாரஸ்யம் போனது

ஆனால், தோனி களத்துக்கு வந்தபின்( சொல்றதுக்கு ஒன்றுமில்லை) ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது.  சூழல் புரியாமல், தேவைப்படும் ரன்ரேட் தெரியாமல் பேட் செய்து ஆட்டத்தை சப்பென்று ஆக்கிவிட்டார். (போட்டியே உஷ் கண்டுகாதிங்க ரகமாக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது)

தோனி அடிக்க முயற்சித்தும், ஷாட்களை நினைத்த இடத்தில் அடிக்கமுடியவில்லை. கிரேட் பினிஷர் எனச் சொல்லப்படும் தோனியின் திறமையை தேடவேண்டியதாக இருக்கிறது.

சேஸிங் செய்வதற்கு தகுதியான ஆடுகளம்தான். ஆனால், ஓட்டுமொத்தத்தில் இந்திய அணி சேஸிங் செய்வது போல் இருந்தது, ஆனால் சேஸிங் செய்யவில்லை. 40 ஓவர்களிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது. கடைசி 6 ஓவர்கள்ஆடும்போது, கோலி டிக்ளேர் செய்வதாக அறிவித்திருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

ஃபார்முக்கு திரும்பிய இங்கி.

இங்கிலாந்து அணி மீண்டும் தங்களின் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பிவிட்டது. வழக்கம்போல் அட்டாக்கிங் பேட்டிங், பெரிய இலக்கை வகுத்து பந்துவீச்சில் எதிரணியை திணறவைப்பது என வழக்கம் போல் ஆடினர். பந்துவீச்சில் ஒழுக்கம் தென்பட்டது, ரன்களை விட்டுக்கொடுக்காமல் ஆடி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.

338 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ராகுல், ரோஹித் சர்மா ஆட்டத்தை தொடங்கினார்கள்.

வோக்ஸ் முதல்ஓவரை கட்டுக்கோப்பாக வீசினார். ஆர்ச்சர் வீசிய 2-வது ஓவரில் ரோஹித் சர்மா அடித்த ஷாட்டில் வந்த கேட்சை ஸ்பில்லில் இருந்த ரூட் தவறவிட்டார். அந்த ஓவரில் ரோஹித் சர்மா 2 பவுண்டரிகள் அடித்தார்.

வோக்ஸ் வீசிய 3-வது ஓவரில் "ஷாட்பிட்ச்சாக" வந்த பந்தை கவனக்குறையாக ராகுல் தொட்டவுடன் வோக்ஸிடமே கேட்சாக மாறியது. டக்அவுட்டில் ராகுல் வெளியேறினார். 8 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி.

நிதான ஆட்டம்

அடுத்து கோலி களமிறங்கி, ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். இருவரும் மிகவும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அவ்வப்போது இங்கிலாந்து பந்துவீ்ச்சாளர்களின் மோசமான பந்துகளை மட்டுமே தேர்வு செய்து பவுண்டரிகள் அடித்தனர்.

இருவரின் ஆட்டத்திலும் நேற்று சிறந்த ஒழுக்கம் தெரிந்தது. தேவையற்ற எந்த ஷாட்களையும் அடிக்காமல், தவறுக்கு இடம் கொடுக்காமல் பேட் செய்தனர். இதனால், இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினார்கள்.

விராட் கோலி 59 பந்துகளில் உலகக் கோப்பைப் போட்டியில் தனது 5-வது அரைசதத்தை பதிவு செய்தார். ரோஹித் சர்மா 65 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அதில் ரஷித்தின் பந்துவீச்சை பயன்படுத்திய இருவரும் பவுண்டரிகளாக நொறுக்கி எடுத்தனர்.  இதனால் ரஷித்துக்கு ஓவர் கொடுப்பது நிறுத்தப்பட்டது. ஸ்டோக்ஸ் வீசிய 26-வது ஓவரில் ரோஹித் சர்மா மிக அழகாக, நேர்த்தியாக ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார்.  இருவரின் ஆட்டத்தால் ரன்ரேட் 5க்கு குறையாமல் சென்றது.

plune.jpg 

திருப்பம்

பிளங்கெட் வீசிய 29-வது ஓவரில் திருப்பம் நிகழ்ந்தது. லெந்த்தில் வந்த பந்தை விராட் கோலி, ஆப்சைடில், வலது கையை அழுத்தம் கொடுத்து கட் செய்து விளையாடினார். ஆனால், அடித்த பந்து வின்ஸிடம் கேட்சாக மாறியதாதல், கோலி 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

உண்மையில் இந்த ஷாட்டை விராட் கோலி, சிறிது "பேக்வார்ட்" சென்று, அதாவது பின்னால் காலை நகர்த்தி பந்தை அதன்போக்கில் வெட்டி இருந்தால், தேர்டுமேன் பிடிக்கமுடியாத வகையில் பவுண்டரி சென்றிருக்கும். ஆனால், இதேபோன்று கடந்த இரு ஆட்டத்திலும் கோலி ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பந்த் பதற்றம்

அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் களமிறங்கி, ரோஹித்துடன் சேர்ந்தார். ரிஷப் முதல்பந்தில் ரன் எடுக்க முயற்சித்து ரன்அவுட் ஆக நேர்ந்தார். மிகவும் பதற்றத்துடன் காணப்பட்ட ரிஷப் பந்த் அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா எதிர்முனையில் நிற்கும்போது அவசரப்பட்டு ஓடி ரன்அவுட்டில் இருந்து தப்பித்தார்.

ரிஷப்பந்த் நிதானமாக ஆட, ரோஹித் சர்மா அவ்வப்போது சில பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை 5 ரன்னுக்கு குறையாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால், தேவைப்படும் ரன்ரேட் 9க்கு குறையாமல் இருந்தது. சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 106 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். சர்வதேச ஒருநாள் போட்டியில் 25-வது சதமாகவும், இந்த உலகக்கோப்பைப் போட்டியில் 3வது சதமாகவும் அமைந்தது.

rohit.jpg 

அதன்பின் ரிஷப்பந்த் அடிக்கத் தொடங்கி, மார்க் உட் வீசிய 36-வது ஓவரில் 2 பவுண்டரிகள்நொறுக்கினார். வோக்ஸ் வீசிய 27-வது ஓவரில் ஆஃப் கட்டராக வீசப்பட்ட பந்தை, கவ்கார்னருக்கு அடிக்க ரோஹித் சர்மா முயன்றபோது கீப்பர் பட்லரிடம் கேட்சானது. ரோஹித் சர்மா 15பவுண்டரிகள் உள்ளிட்ட 102 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 28 ரன்கள் சேர்த்தனர்.

அதிரடி ஹர்திக்

அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடத் தொடங்கிய பாண்டியா, வோக்ஸ் வீசிய 39-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி 16 ரன்கள் சேர்த்தார். இதனால் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

ஆனால் பிளங்கெட் வீசிய 40-வது ஓவரில் ரிஷப்பந்த் ஸ்குயர்லெக் பவுண்டரி பக்கம் தூக்கி அடித்தார். பந்து பவுண்டரி செல்ல முயன்றபோது, வோக்ஸ் தாவிப்பிடித்து பிடித்த கேட்ச் அற்புதம் யாரும் எதிர்பார்க்கவில்லை. ரிஷப் பந்த் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

dhni.jpg 

என்னத்த சொல்றது...

அடுத்துவந்த தோனி, ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்தார். இருவரும் சூழ்நிலை தெரியாமல் பவுண்டரி அடிக்க முயற்சி செய்யாமல் சிங்கிள் ரன்களாகச் சேர்த்தனர். லெக்சைடில் ஷார்ட் பவுண்டரி என்பதால், இங்கிலாந்து வீரர்ககளும் ஆஃப்சைடிலேயே வீசியதால், அடித்து ஆட சிரமப்பட்டனர்.

தோனியுடன் சேர்ந்தபின் ஹர்திக்பாண்டியாவின் ஸ்ட்ரைக் ரேட்டும் குறையத் தொடங்கியது. தேவைப்படும் ரன்களும், 10 லிருந்து 13 ஆக உயர்ந்தது.

பிளங்கெட் வீசிய ஓவரில் ஹர்திக் பாண்டியா லாங்க்-ஆன் திசையில் தூக்கி அடிக்க வின்ஸிடம் கேட்ச்ஆனது. 45 ரன்னில் பாண்டியா ஆட்டமிழந்தார். தோனி வருவதற்கு முன்  பாண்டியா ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக இருந்த நிலையில், ஆட்டமிழக்கும்போது, பாதியாகக் குறைந்தது. இருவரும் 41 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து கேதார் ஜாதவ்,வந்து தோனியுடன் சேர்ந்தார். இருவரின் ஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தைப் போல் விளையாடினார்கள். இருவரின் ஆட்டம் ரசிகர்களை உச்சகட்ட வெறுப்புக்கு இட்டுக்குச் சென்று மைதானத்தை விட்டு புறப்பட்டனர்.

root.jpg 

 தேவைப்படும் ரன்கள் அதிகம் இருக்கும்போது  சிலபல பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் முயற்சிக்காமல் ஒரு ரன்,2 ரன்கள் என சேர்த்து அணியை தோனியும், ஜாதவும் நெருக்கடி நிலைக்கு தள்ளினர்.   கடைசி வரை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் முயற்சிக்காமல் தோனியும், ஜாதவும் விளையாடியதைஎன்ன சொல்றது...

50 ஓவர்களில் இந்தியஅணி 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் சேர்த்து 31 ரன்னில் தோல்வி அடைந்தது. தோனி 42 ரன்களிலும், ஜாதவ் 12 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்

இங்கிலாந்து அணித் தரப்பில் பிளங்கெட் 3 விக்கெட்டுகளையும், வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close