[X] Close

இந்திய அணியுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது இங்கிலாந்து அணி


  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 07:44 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகலில் பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 6 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, ஒரு ஆட்டம் ரத்து என 11 புள்ளிகளுடன் பட்டிய லில் 2-வது இடம் வகிக்கிறது. இது வரை தோல்வியை சந்திக்காமல் வலம் வரும் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு எஞ்சி யுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே போதும் என்ற நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணியை பொறுத்த வரையில் பேட்டிங்கில் 4-வது இடத் தில் களமிறங்கும் விஜய் சங்கரிடம் இருந்து பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படாதது மட்டுமே சற்று பலவீனமாக உள்ளது. 3 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள விஜய் சங்கர் 58 ரன்களே சேர்த்துள்ளார். 4-வது இடத்துக்கு கடும் போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் விஜய் சங்கர் விளையாடும் விதம் இந்திய அணி நிர்வாகத்துக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அவரது இடத்தில் ரிஷப் பந்த் அல்லது தினேஷ் கார்த்திக் களமிறக்கப்படக்கூடும். இதற்கு முன்னோட்டமாக நேற்றைய பயிற்சியின் போது ரிஷப் பந்த் அதிக நேரம் பேட்டிங்கில் ஈடுபட்டார். அவருக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சீனியர் வீரரான தோனி ஆகியோர் ஆலோசனைகளையும் வழங்கினர்.

டாப் ஆர்டரில் கே.எல்.ராகுல் சீராக ரன்கள் சேர்த்து வருகிறார். கடந்த ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா, மீண்டும் ஒருமுறை மட்டையை சுழற்றுவதில் தீவிரம் காட்டக்கூடும் ஆப்கானிஸ் தான் அணிக்கு எதிராக படுமந்தமாக விளையாடி விமர்சனங்களை எதிர் கொண்ட தோனி, மேற் கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக் கத்தில் பந்துகளை வீணடித்த போதிலும் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடினார்.

அந்த ஆட்டத்தில் தோனி, 91.80 ஸ்டிரைக் ரேட்டுடன் அரை சதம் விளாசி சற்று தாக்கத்தை ஏற்படுத்தினார். பார்முக்கு திரும்பியுள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் மொகமது ஷமி தேவையான தருணங்களில் விக்கெட்கள் கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்துபவராக உள்ளார்.

அவருக்கு உறு துணையாக ஜஸ்பிரித் பும்ரா உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி வரு கிறார். அதிலும் இறுதிக்கட்ட ஓவர்களில் எதிரணியின் பேட்ஸ் மேன்களை ரன்கள் சேர்க்கவிடாமல் கட்டுப்படுத்துவதில் பும்ரா தீவிரம் காட்டுவது அணிக்கு பெரிய அள வில் பலம் சேர்க்கிறது. இந்த கூட்டணி இங்கிலாந்து பேட்டிங் வரிசைக்கு சவால் தரக்கூடும்.

போட்டி நடைபெறும் எட்ஜ் பாஸ்டன் ஆடுகளம் நன்கு உலர்ந்து காணப்படுவதால் வழக்கத்தை விட பந்துகள் அதிகம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரிஸ்ட் ஸ்பின்னர் களான குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஜோடி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

பட்டம் வெல்லக்கூடிய பிரதான அணிகளுள் ஒன்று என முத்திரை குத்தப்பட்ட மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை சிறப்பாகவே தொடங்கியது. ஆனால் தனது கடைசி இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இலங்கை அணி களுக்கு எதிராக இங்கிலாந்து அணி தோல்விகளை சந்தித்ததால் தற் போது அரை இறுதிக்கு முன்னேறு வதில் சிக்கல் எழுந்துள்ளது.

7 ஆட்டங்களில் விளையாடி உள்ள இங்கிலாந்து அணி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்திலும், ஜூலை 3-ம் தேதி நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்த 3 ஆட்டங்களிலும் (பாகிஸ்தான், ஆஸ்திரேலிய, இலங்கை அணிகளுக்கு எதிராக) இலக்கை துரத்தியிருந்தது. அதேவேளையில் வெற்றி பெற்ற 4 ஆட்டங்களில் 3 முறை முதலில் பேட் செய்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி டாஸை வெல்லும் பட்சத்தில் பேட்டிங்கை தேர்வு செய்யக்கூடும்.

தொடக்க வீரரான ஜேசன் ராய் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர், களமிறங்கும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும்.

உலகக் கோப்பை வரலாற்றில் கடந்த 27 வருடங்களில் இங்கி லாந்து அணியானது இந்தியாவை வீழ்த்தியது இல்லை. இந்தக் காலட்டத்தில் இரு அணிகளும் 3 முறை மோதின. இதில் இந்திய அணி இரு ஆட்டத்தில் வெற்றி பெற் றது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இரு அணிகள் மோதிய ஆட்டம் டையில் முடிவடைந்திருந் தது.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், மகேந்திர சிங் தோனி, ரிஷப் பந்த், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்.

இங்கிலாந்து: இயன் மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஜேம்ஸ் வின்ஸ், மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித், லியாம் டாவ்சன், டாம் கரன், லியாம் பிளங்கெட், மார்க் வுட்.

‘விராட் கோலியை வீழ்த்துவேன்’

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி, தி கார்டியன் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

விராட் கோலி இந்திய அணிக்காக ரன்கள் சேர்க்க இங்கே வருகிறார். ஆனால் அவரை ஆட்டமிழக்கச் செய்ய நான் இங்கே இருக்கிறேன். அவரை போன்ற ஒரு வீரரை ஆட்டமிழக்கச் செய்வதில் நிறைய பொருள் உள்ளது.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட ஆட்டங்களை அஞ்சாமல், தழுவிக்கொள்ளும் வாய்ப்பாகவே நான் பார்க்கிறேன். உள்நாட்டில் விளையாடும்போது எங்களுக்கு அழுத்தம் இருப்பதை ஒருகாரணியாகக் கூறக்கூடாது. எங்களுடன் மோதும் இந்திய அணி மீதுதான் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோரை சிறப்பாக எதிர்கொண்டோம். அதே மனநிலையுடன் நாங்கள் மீண்டும் விளையாட வேண்டும்.

இவ்வாறு மொயின் அலி தெரிவித்துள்ளார். - பிடிஐ

‘நீலநிற உடையே பிரதானம்’

அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி வழக்கமான நீலநிற உடைக்குப் பதிலாக நேவி புளூ மற்றும் ஆரஞ்சு நிறம் கலந்த உடையில் களமிறங்குகிறது. இங்கிலாந்து அணி நீல நிற உடையில் விளையாடுவதால் அதில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் விதமாக இந்திய அணியானது புதிய சீருடையில் களம் காண்கிறது.

முன்புற தோள்பட்டை மற்றும் பின்புறம் முழுவதும் ஆரஞ்சு நிறம் இடம் பெற்றுள்ளது. மற்ற பகுதியை நேவி புளூ ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இந்த சீருடையை பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அறிமுகப் படுத்தினார்.

விராட் கோலி கூறுகையில், “ஒரு ஆட்டத்துக்கு என்று பார்க்கும் போது இந்த சீருடை நன்றாக இருக்கிறது. நாங்கள் நிரந்தரமாக இந்த திசையில் செல்வோம் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் நீலமே எப்போதும் எங்கள் நிறமாக இருக்கிறது.

அதை அணிவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். ஒரு மாற்றத்துக்காகவும், சந்தர்ப்ப சூழ்நிலைக்காகவும் பார்க்கும்போது, புதிய சீருடை ஸ்மார்ட்டாக உள்ளது. இந்த சீருடைக்கு நான் 10-க்கு 8 மதிப்பெண்கள் வழங்குவேன்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close