[X] Close

கவாஜா, கேரியின் அபார பேட்டிங்கும் மிட்செல் ஸ்டார்க்கின் 5 விக்கெட்டும் நியூஸி.யை நொறுக்கியது: ஆஸ்திரேலியா அபார வெற்றி


5

  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 02:37 am
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 37வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை ஆஸ்திரேலியா 86 ரன்களில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 8 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் திகழ்கிறது.

 

டாஸ் வென்று கடினமான பிட்சில் முதலில் பேட் செய்ய ஆஸ்திரேலியா கேப்டன் ஏரோன் பிஞ்ச் முடிவெடுத்தார், ஆனால் அந்த அணி போல்ட், நீஷம், பெர்குசன் பந்துவீச்சுகளி 22வது ஓவரில் 92/5 என்று தடுமாறியது அப்போது கவாஜா, கேரி இணைந்தனர், கவாஜா 129 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 88 ரன்களைச் சேர்க்க விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆடி 72 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 71 ரன்களை விளாச, ஸ்டாய்னிஸ், (21), கமின்ஸ் (23) பங்களிப்புகளுடன் 50 ஓவர்களில் 243/9 என்று முடிந்தது, நியூஸிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல் ஹாட்ரிக் சாதனை புரிந்து 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  பெர்கூசன் 2 விக்கெட்டுகளையும்., நீஷம் ஒரு அற்புதமான காட் அண்ட் பவுல்டுடன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேன் வில்லியம்சன் தன் பங்குக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றி முக்கியமாக கவாஜா, கேரி 107 ரன் கூட்டணியை உடைத்தார்.

 

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் வில்லியம்சன் திருப்தியளிக்காத ஒரு இன்னிங்சில் 40 ரன்களை அதிகபட்சமாக எடுக்க ஆஸ்திரேலியா பந்து வீச்சு அவர்களை நொறுக்கி எழும்ப விடாமல் செய்தது. மிட்செல் ஸ்டார்க் 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்க்க பெஹெண்டார்ப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற நியூஸிலாந்து அணி 43.4 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ஏரோன் பிஞ்ச் 1 ஒவர், ஸ்டீவ் ஸ்மித் 2 ஓவர் 1 விக்கெட் என ஆச்சரியமளிக்க 8 பவுலர்களை ஆஸ்திரேலியா பயன்படுத்தியது. நியூஸிலாந்து தற்போது 8 ஆட்டங்களில் 11 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.

 

சிறப்பான பிரமிப்பூட்டும் கேட்ச்களை எடுத்தாலும் ஆரம்பத்தில் கப்தில் கேட்ச் விட்டார், பிறகு கவாஜாவுக்கு 2 கேட்ச்கள் விடப்பட்டது.

 

இலக்கை விரட்டும் போது கொலின் மன்ரோவுக்குப் பதிலாக தேர்வு செய்யப்பட்ட ஹென்றி நிகோல்ஸ் 8 ரன்களில் பெஹெண்டார்ப் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆடுகிறேன் என்று கிளவ்வில் வாங்கி விக்கெட் கீப்பர் கேரியிடம் கேட்ச் ஆகும் போது 10வது ஓவரில் 29/1. அந்த அளவுக்கு ஆஸ்திரேலியா டைட் பந்து வீச்சு. 43 பந்துகள் ஆடிய மார்டின் கப்தில் 20 ரன்களுக்குக் கட்டிப்போடப்பட்டு கடைசியில் பெஹண்டார்ப் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார்.

 

கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இணைந்து ஸ்கொரை 42/2 என்பதிலிருந்து 97 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அதாவது திருப்தியளிக்காத ஒரு பேட்டிங்கில் இருவரும் 12.3 ஒவர்களில் 55 ரன்களையே சேர்க்க முடிந்தது. மீண்டும் ஆஸ்திரேலியாவின் கிடுக்கிப்பிடி களவியூகம் மற்றும் பந்து வீச்சு. 40 ரன்களில் வில்லியம்சன் ஸ்டார்க் பந்தில் மெலிதான எட்ஜ் எடுக்க கேரி கேட்சுக்கு வெளியேறினார்.

 

அரையிறுதியை உறுதி செய்யும் வாய்ப்பு ராஸ் டெய்லர் (30), கொலின் டி கிராண்ட் ஹோம் (0), டாம் லேதம் (14) ஆகியோர் ஆட்டமிழந்து 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுக்க 125/6 என்று ஆயினர். இதில் ஸ்மித் வீசி ஆச்சரியகரமாக முதல் பந்திலேயே கொலின் டி கிராண்ட் ஹோமை வீழ்த்தினார், இவர் நேராக லாங் ஆஃபில் கவாஜா கையில் அடித்து டக் அவுட் ஆக, டாம் லேதம் 14 ரன்களில் ஸ்மித்தின் அற்புதமான கேட்சுக்கு ஸ்டார்க்கிடம் வெளியேறினார். நேதன் லயன் (1/36), ஜேம்ஸ் நீஷம் விக்கெட்டை தானே கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.

 

பிறகு ஸ்டார்க் இந்த உலகக்கோப்பையில் தன் விக்கெட் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் விதமாக இஷ் சோதியை தன் 22வது விக்கெட்டாக எல்பி. செய்ய பெர்குசன் ஸ்டம்புகளைப் பெயர்த்து 23வது விக்கெட்டைக் கைப்பற்றினார். பிறகு கடைசியில் சாண்ட்னரையும் வீழ்த்தி தன் 5வது விக்கெட்டையும்  உலகக்கோப்பையில் 24வது விக்கெட்டையும் கைப்பற்றினார்.  நியூஸிலாந்து அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்னும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டி மீதமுள்ளது இதில் நியூஸிலாந்தும் வெற்றி பெற வேண்டும், இங்கிலாந்தும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அது அரையிறுதிக்கு முன்னாலான அரையிறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 

ட்ரெண்ட் போல்ட் ஹாட்ரிக்:

 

trent boult.jpg 

 

முன்னதாக ஆஸ்திரேலியா இன்னிங்ஸை தொடங்கிய போது ஏரோன் பிஞ்ச் ரன் எண்ணிக்கையை தொடங்கும் முன்பே கப்தில் கேட்சை விட்டு வாழ்வு கொடுத்தார், ஆனால் பிஞ்ச் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் 8 ரன்களில் ட்ரெண்ட் போல்ட்டின் முதல் விக்கெட்டாக எல்.பி.ஆகி வெளியேறினார்.  டேவிட் வார்னர் 16 ரன்களில் பெர்குசனின் அதிவேக ஷார்ட் பிட்ச் பந்துக்கு லேதமிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

 

அதன் பிறகுதான் ஸ்டீவ் ஸ்மித் (5) இந்த உலகக்கோப்பையின் ஆகச்சிறந்த கேட்சுக்கு வெளியேறினார், கேன் வில்லியம்சன் ஒரு திட்டத்துடன் லாக்கி பெர்கூசன் ஓவரில் லெக் கல்லியில் கப்திலைக் கொண்டு வந்து நிறுத்தினார்.  ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்டீவ் ஸ்மித் செம சாத்து சாத்தினார், ஆனால் மிகவும் குறைந்த ரியாக்‌ஷன் நேரத்தில் கப்தில் இடது புறம் டைவ் அடித்து படுவேகமாகச் சென்ற பந்தை மின்னல் வேகத்தில் பிடித்தார், பிரமிப்பூட்டிய கேட்ச் அது.

 

46/3 என்று இருந்த ஆஸ்திரேலியா விரைவிலேயே 92/5 என்று சரிந்தது, ஸ்டாய்னிஸ் (21), கிளென் மேக்ஸ்வெல் (1) சோபிக்காமல் முறையே நீஷமிடம் ஆட்டமிழந்தனர். இதில் கிளென் மேக்ஸ்வெலுக்கு தன் பவுலிங்கில் நீஷம் பிடித்தது இன்னொரு பிரமிப்பூட்டும் கேட்ச். இடது புறம் டைவ் அடித்து ஒரு கையில் பிடித்தார் நீஷம்.

 

உஸ்மான் கவாஜா கொஞ்சம் தடுமாற்றத்துடன் ஆட ஆஸ்திரேலியா பெரிய சரிவு காணும் ஆபத்தில் இருந்தது. கவாஜா ரன் எடுக்காத போது கேட்ச் விடப்பட்டது, பிறகு இன்னொரு கேட்ச் விடப்பட்டது, இதனைப் பயன்படுத்தி கேரியுடன் கூட்டணி அமைத்து 107 ரன்களைச் சேர்த்தார். கேரி கொஞ்சம் சுறுசுறுப்பான ஆக்ரோஷ வீரர் இவர் 11 பவுண்டரிகளுடன் 72 பந்துகளில் அனாயசமாக 71 ரன்களை விளாசினார். 7ம் நிலையில் இறங்கி நெருக்கடியில் படு அனாயசமாக ஆடினார் கேரி.

 

கவாஜா 88 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் ஹாட்ரிக்கின் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். கவாஜா, ஸ்டார்க் இருவரும் பவுல்டு ஆக, பெஹெண்டார்ப் எல்பி ஆக போல்ட் நியூஸிலாந்தின் முதல் உலகக்கோப்பை ஹாட்ரிக் பவுலர் ஆனார். ஆஸ்திரேலியா 243 ரன்களை எடுத்தது. 92/5லிருந்து கவாஜாவுக்கு 2 வாய்ப்புகளை விட்டதால் நியூஸிலாந்து தற்போது அரையிறுதியை உறுதி செய்ய இங்கிலாந்துக்கு எதிராக கொஞ்சம் சீரியஸாக ஆட வேண்டியுள்ளது. ஆட்ட நாயகனாக அலெக்ஸ் கேரி தேர்வு செய்யப்பட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close