[X] Close

ரிவியூவை இழந்த ஆப்கான்: நடுவர் தீர்ப்புகள் படுமோசமான சோகம்; கத்துக்குட்டி குல்பதீன் நயீபின் மோசமான தவறுகள்: ஆப்கானை வீழ்த்தி டாப் 4-இல் நுழைந்த பாகிஸ்தான்


4

  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 00:51 am
  • அ+ அ-

லீட்ஸில் நடைபெற்ற உலகக்கோப்பை 2019-ன் 36வது லீக் ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கும் ரசிகர்களுக்கும் கடும் பீதியைக் கிளப்பியிருக்கும், ஆப்கான் அணி இந்தியாவுக்கு கிளப்பிய பீதியைப் போல் பாகிஸ்தானுக்கும் கிளப்பியது, ஆனாலும் கடைசியில் பாகிஸ்தான் 2 பந்துகள் மீதமிருக்க 230/7 என்று வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 9 புள்ளிகளுடன் 4ம் இடத்துக்கு முன்னேறி இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளியது.

 

இரு அணிகளும் 7 ஓவர்களுக்குள் ரிவியூ வாய்ப்புகள் அனைத்தையும் இழந்து தவிக்கையில் ஆப்கானுக்குத்தான் பேரிழப்புகள், 3-4 அவுட்கள் நடுவரால் நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது ஆப்கானிஸ்தானினால் ரிவியூ  செய்ய முடியவில்லை. பல திருப்பங்களைக் கொண்ட இந்த ஆட்டத்தில் நடுவர்களின் இந்த மட்டமான தீர்ப்புகள் பாகிஸ்தான் வெற்றிக்கு சாதகமாக அமைந்தன. மேலும் குல்பதீன் நயீப் என்பவரை யார் கேப்டனாக நியமித்தது என்று தெரியவில்லை.

 

ஏனெனில் 45 ஓவர்கள் முடிவில் 182/6 என்று பாகிஸ்தான் தோல்வியின் பிடியிலிருந்தது. ஓவருக்கு பாகிஸ்தான் வெற்றி பெற ரன் விகிதம் 9.20. நிச்சயம் பாகிஸ்தான் தோல்வியை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தது, அதன் உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தவர் இமாத் வாசிம், ஷதாப் கான் ஆகியோர்களாவார்கள். ஆனால் குல்பதீன் நயீப் புல்டாஸ், ஷார்ட் பிட்ச் என்று வீசி அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் வைடுகள், என்று 18 ரன்களை விட்டுக் கொடுத்ததில் மேட்ச் திரும்பி விட்டது.

 

மேலும் இதே ஓவரில் இமாத் வாசிம் அடித்த ஷாட் ஒன்று மேலே எழும்ப மிட் ஆஃபில் தூக்க அது கேட்ச் வாய்ப்பு ஆனால் அஷ்கர் ஆப்கான் அதை என்னவெல்லாமோ செய்து கடைசியில் விட்டார். ஏற்கெனவே 8 ஓவர் 47 ரன்கள் என்று படுமோசமாக வீசிய குல்பதீன் நயீப் இந்த ஓவரை வீசியதன் மூலம் 9 ஒவர் 65 ரன்கள் என்று வாரி வழங்கியிருந்தார். இதோடு இல்லாமல் பரபரப்பான கடைசி ஒவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் குல்பதீன் நயீப் மீண்டும் வீச வந்தார் என்ன ஒரு அராஜகம்!

வந்ததோடு இல்லாமல் 3வது பந்தில் இமாத் வாசிம் கவரில் அடித்து விட்டு ஒரு ரன்னை வேகமாக எடுக்க முயன்றார் பீல்டர் பந்தை ரன்னர் முனையில் அடிக்க பந்தை வாங்கி அடிக்க வேண்டும் அவ்வளவுதான், ஆனால் பந்தைக் கோட்டை விட்டார், அது ஓவர் த்ரோவில் 2வது ரன்னாக மாறியதோடு இமாத் வாசிம் ஸ்ட்ரைக்குக்கு வந்து விட்டார். கடைசியில் மீண்டும் 4வது பந்தை அசிங்கமாக ஒரு புல்டாஸை வீச இமாத் வாசிம் கவரில் பவுண்டரி அடிக்க பாகிஸ்தான் அணியிடம் மகிழ்ச்சித் துள்ளல், நிம்மதிப் பெருமூச்சு, கிரேட் எஸ்கேப். இதற்கு முழு காரணம் ஆப்கானின் கத்துக்குட்டி கேப்டன் குல்பதீன் நயீப்.

 

naib.jpg 

 

ஷமியுல்லா ஷின்வாரிக்கு 2 ஓவர்கள் மீதமுள்ளன அவர் 8 ஓவர்கள் 32 ரன்கள் என்று அசத்தினார், அவரிடம் கொடுக்காமல் குல்பதீன் நயீப் அந்த 2 ஓவர்களை வீசியது, ரன் அவுட்டை மிஸ் செய்தது கடும் சந்தேகங்களை கிளப்புவதாக உள்ளது. வஹாப் ரியாஸ் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 15 ரன்களை எடுக்க, இமாத் வாசிம் 54 பந்துகளில் 49 நாட் அவுட் பாகிஸ்தான் வெற்றிக்கனியை பறித்தது.

 

ரிவியூவை இழந்த ஆப்கானின் சோகம்... நடுவர் தீர்ப்பு விளையாட்டுக்கள் நயீபின் கத்துக்க்குட்டி கேப்டன்சி மற்றும் பந்து வீச்சு:

 

228 ரன்கள் என்ற இலக்கை பந்துகள் திரும்பும் பிட்சில் விரட்ட இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முதல் முஜிபுர் ஓவரிலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. லெந்தில் பிட்ச் ஆகிய கேரம் பந்து  ஃபகர் ஜமானின் மட்டையை கடந்து கால்காப்பைத் தாக்கியது,நடுவர் அவுட் தீர்ப்பளித்தார், ஆனால் பகர் ஜமான் தேவையில்லாமல் ரிவியூ செய்து பலனளிக்காமல் பாகிஸ்தான் ரிவியூவை இழந்தது. பகர் ஜமான் அவுட்.

 

அதன் பிறகு பாபர் ஆஸமும், இமாம் உல் ஹக்கும் பிரமாதமாக ஆடி ஸ்கோரை நகர்த்திச் சென்றனர். 7வது ஒவரில் இதே முஜிபுர் ரஹ்மான், பாபர் ஆஸம் 20 ரன்களில் இருந்த போது ஒரு பந்தை அவரது கால்காப்பிற்கு வீசி அவுட் கேட்டார் நடுவர் நாட் அவுட் என்றார். ஆனால் கத்துக்குட்டித் தனமாக விக்கெட் கீப்பரின் பேச்சை கேட்டு ரிவியூ செய்தார் கேப்டன் குல்பதீன் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே பிட்ச் ஆனது தெரிய நாட் அவுட், ரிவியூவை இழந்தது ஆப்கான், ஆக பாகிஸ்தான், ஆப்கான் இருவருமே ரிவியூ வாய்ப்புகளை இழந்து நடுவர் தீர்ப்பளித்தால் அது தவறாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர்.

 

பிறகு இமாம் உல் ஹக் 36 ரன்களில் இருந்த போது தேவைஇல்லாமல் முகமதுநபி பந்தை மேலேறி வந்து அடிக்கிறேன் என்று வர அவர் வைடாக வீச ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். இதே முகமது நபியிடம் பாபர் ஆஸம் 45 ரன்களில் ஸ்வீப் ஆடப்போய் லெக் ஸ்டம்பை இழந்தார். பாகிஸ்தான் 81/3 என்று ஆட்டம் தற்போது நெருக்கடிக்குப் போனது.

 

ஹபீஸ், ஹாரிஸ் சோஹைல் இருவரும் கிரீசுக்கு புதிய பேட்ஸ்மென்களாக இருந்தனர். அப்போது ரஷீத் கான் 3வது ஒவரை வீச கடைசி பந்தில் ஹாரிஸ் சோஹைல் 1 ரன்னில் இருந்த போது ஸ்டம்புக்கு நேராக கால்காப்பில் வாங்கினார், களநடுவர் பால் வில்சன் அந்த அவுட்டை நாட் அவுட் என்றார், ஆனால் ரிவியூ இல்லை. இது பிளம்ப் எல்.பி.  பிறகு 28வது ஓவரில் குல்பதின் நயீப் வீச லெக் திசையில் சென்ற பந்தை ஹாரிஸ் சொஹைல் தொட்டார் விக்கெட் கீப்பர் கேட்ச் எடுத்து பெரிய முறையீடு எழுந்தது. ஆனால் நடுவர் ஆர்வம் காட்டவில்லை, இதுவும் அவுட்!! ரீப்ளேயில் எட்ஜ் தெரிந்தது, ஆனால் நடுவர் காதிலி விழவில்லை, ரிவியூ இல்லை. தீர்ந்து போனது.

harris sohail.jpg 

ஆப்கானின் 2வது சோகம் இப்போது ஹாரிஸ் சோஹைல் 17 ரன்களில் இருந்தார், தப்பினார். இந்நிலையில் ஆப்கான் கடும் நெருக்கடி கொடுக்க ஹபீஸ் 19 ரன்களில் முஜீப் உர் ரஹ்மான் பந்தை கட் செய்கிறேன் என்று பாயிண்டில் நேராக கேட்ச் கொடுத்து வெளியேறினார். 121/4 என்று ஆனது. சர்பராஸ் அகமடுக்கு சமியுல்லா ஷின்வாரி தன் பந்து வீச்சில் புல்டாஸ் பந்தை சர்பராஸ் நேராக அவர் கையிலேயே அடிக்க கேட்ச் வாய்ப்பு பறிபோனது.

 

ஆனால் 35வது ஓவரில் ரஷீத் கான் வீச லெந்த் பந்துக்கு பின்னால் சென்ற ஹாரிஸ் சோஹைல் காலில் வாங்கி எல்.பி.ஆனார். இம்முறை நடுவர் கையை உயர்த்தினார், பாகிஸ்தானுக்கும் ரிவியூ இல்லை. ஆனால் இது பிளம்ப் எல்பி.

 

மீண்டும் 37வது ஓவரில் இமாத் வாசிம் 1 ரன்னில் இருந்த போது ரஷீத் கானின் நேர் பந்து இமாத் வாசிம் கால்காப்பைத் தாக்க மிகப்பெரிய அப்பீல், ஆனால் நடுவர் பால் வில்சன் மீண்டும் நாட் அவுட் என்றார், இது பிளம்ப் அவுட், ஆனால் இமாத் வாசிம் தப்பினார். அதன் பிறகு இன்னொரு திருப்பு முனை ஏற்பட 18 ரன்கள் எடுத்த சர்பராஸ் அகமட் தேவையில்லாமல் 2வது ரன்னுக்கு ஓடி பிரமாத த்ரோவில் டைவ் அடித்தும் ரீச் ஆக முடியாமல் ரன் அவுட் ஆனார், பாகிஸ்தான் 39 ஓவர் முடிவில் 156/6 என்று தோல்வியின் பிடியில் சரியாகச் சிக்கியிருந்தனர்.  47வது ஒவரில் ஷதாப் கான் 11 ரன்களில் மீண்டும் ஒரு நல்ல பீல்டிங்கிற்கு இல்லாத 2வது ரன்னை ஓடி ஆட்டமிழந்தார், பாகிஸ்தான் 205/7 என்று ஆனது.

 

அதன் பிறகு வஹாப் ரியாஸ்., ரஷீத் கானை ஒரு மிகப்பெரிய மிக முக்கியமான சிக்சரை அடிக்க சமன்பாடு மாறிப்போனது. அதன் பிறகுதான் கடைசி ஓவரில் 4 பந்துகளில் 4 ரன்கள் இருந்த போது த்ரோவை வாங்காமல் ரன் அவுட் வாய்ப்பையும் விட்டு ஓவர் த்ரோவும் சென்றது. ஆகா ஆப்கான் அணி ரிவியூவை தீர்த்ததால் 4-5 அவுட் தீர்ப்புகள் அதற்கு எதிராகப் போனது பாகிஸ்தான் வெற்றியைத் தீர்மானித்தது என்றால் மிகையாகாது. மேலும் சேதமில்லாமல் பாகிஸ்தான் அணி கிரேட் எஸ்கேப் வெற்றியைப் பெற்று இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி 4ம் இடம் பிடித்துள்ளது. முகமது நபி 10 ஒவர் 23 ரன்கள் 2 விக்கெட் என்று பாகிஸ்தானை இன்று பவுலிங்கில் படுத்தி எடுத்தார்.

pak.jpg 

முன்னதாக ஆப்கானிஸ்தான் அணி ஒருவரும் அரைசதம் அடிக்காவிட்டாலும் 227/9 என்று முடிந்தது. ஷாஹின் அப்ரீடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாகிஸ்தான் இன்னிங்ஸில் பாபர் ஆஸம் மீண்டும் பிரமாதமாக ஆடி அவரும், இமாம் உல் ஹக்கும் ஸ்கோரை 0/1லிருந்து 72 ரன்களுக்கு நகர்த்தினர். அதன் பிறகுதான் இவ்வளவு கூத்தும், நடுவர் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் இட்டுச் செல்லும்.

 

அதே போல் அஸ்கர் ஆப்கானை கேப்டன்சியிலிருந்து உலகக்கோப்பைக்கு முன்பாக தூக்கி விட்டு குல்பதீன் நயீபை கேப்டனாக்கியதற்காக ஆப்கான் நிச்சயம் வருந்தும், அவர் கடைசியில் ரஹ்மத் ஷாவுக்கு கொடுத்திருக்கலாம், அல்லது ஷின்வாரியிடம் கொடுத்திருக்கலாம், ஆனால் தானே வீசி புல்டாஸ்களை வாரி வழங்கி 18 ரன்களை ஒரே ஓவரில் கொடுத்ததும், கடைசியில் ரன் அவுட் வாய்ப்பை விட்டதும், நடுவர்கள் அவுட்களை நாட் அவுட் என்று தீர்ப்பளித்ததும்  நிச்சயம் ஆப்கான் ரசிகர்களுக்கு சந்தேகங்களைக் கிளப்பவே செய்யும்.

 

ஆட்ட நாயகனாக ஆல்ரவுண்ட் திறமை காட்டிய இமாத் வாசிம் தேர்வு செய்யப்பட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close