[X] Close

ஜோ ரூட்டின் 2 முக்கிய விக்கெட்டுகள்; ஆர்ச்சர், உட் அபாரம்: மே.இ.தீவுகளை 212 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து


2-212

  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 19:09 pm
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2019-ன் 18வது போட்டியில் டாஸ் வென்று மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்த இங்கிலாந்து அணி மே.இ.தீவுகள் அணியை 44.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து முடக்கியது.

 

மே.இ.தீவுகளின் பெரிய பவர் ஹிட்டர்கள் இம்முறை சோபிக்க அனுமதிக்கப்படவில்லை. நிகோலஸ் பூரன் மட்டுமே தனது முதல் ஒருநாள் அரைசதத்தை எட்டினார்.

 

மே.இ.தீவுகள் வீரரான இங்கிலாந்துக்கு ஆடும் ஜோஃப்ரா ஆர்ச்சர் மே.இ.தீவுகளுக்கு அதன் மருத்துவத்தையே அளித்தார், பந்துகள் நல்ல வேகத்துடன் புருவம் வரை எகிறியதால் மே.இ.தீவுகள் பேட்ஸ்மென்கள் டான்ஸ் ஆடத் தொடங்கினர். அவர் 3 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கு வீழ்த்தினார்.  மணிக்கு 150 கிமீ வேகம் வரை வீசும் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

ஆனால் மே.இ.தீவுகளின் கனவுகளுக்கு அடி கொடுத்தவர் என்றால் அது ஜோ ரூட் எடுத்த 2 விக்கெட்டுகள்தான், இவர் ஹெட்மையர் (39) நன்றாக பொறுமையுடன் ஆடி வந்த நிலையில் தன் பந்து வீச்சில் தானே கேட்ச் எடுத்து வீட்டுக்கு அனுப்பினார், அடுத்து இறங்கிய அபாய வீரர் ஜேசன் ஹோல்டர், ஜோ ரூட்டை ஒரு அபாரமான லாங் ஆஃப் சிக்ஸர் தூக்கினார், ஆனால் அடுத்த பந்தே ரவுண்ட் த விக்கெட்டில் ரூட் வீசிய பந்து நின்று வர லெக் திசையில் திருப்பப் பார்த்தார் ஹோல்டர் அது முன் விளிம்பில் பட்டு ரூட்டிடமே கேட்ச் ஆனது. இந்த 2 விக்கெட்டுகளால் 144/3 என்று இருந்த மே.இ.தீவுகள் 212 ரன்களுக்குச் சுருண்டு போக நேரிட்டது.

 

கிறிஸ் வோக்ஸ் (1/16) முதலில் எவின் லூயிஸை யார்க்கரில் பவுல்டு செய்ய, கிறிஸ் கெய்ல் நிதானம் கடைபிடித்தார், பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்ததால் பந்துகள் ஸ்விங் ஆனதோடு எகிறின, இதனால் கெய்ல் முதலில் 13 பந்துகளில் 1 ரன் எடுத்தவர் 41 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து பிளங்கெட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து தன் விக்கெட்டைத் தூக்கி எறிந்தார். ஷேய் ஹோப் 27 பந்துகளில் 6 ரன்கள் என்று முடக்கப்பட்ட நிலையில் கடைசியில் 11 ரன்கள் எடுத்து மார்க் உட்டின் இன்கட்டர் பந்தை நேராக கால்காப்பில் வாங்கினார் எல்.பிகொடுக்க பயந்த தர்மசேனா நாட் அவுட் என்றார், ஆனால் ரிவியூவில் பிளம்ப் என்று தெரிந்தது. மே.இ.தீவுகள் 55/3 என்று ஆனது.

 

அதன் பிறகு பூரன், ஹெட்மையர் இணைந்து ஆடி சுமார் 16 ஓவர்களில் 89 ரன்களைச் சேர்த்தனர். நன்றாக ஆடிவந்த நிலையில் ஹெட்மையர் 39 ரன்களில் ரூட்டிடம் ஆட்டமிழக்க, ஹோல்டர் ஒரு சிக்சர் அடித்த பிறகு ரூட்டிடம் கேட்ச் கொடுக்க மே.இ.தீவுகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

 

ஆந்த்ரே ரஸல்தான் ஆபத்பாந்தவர் என்று நினைத்ததற்கு ஏற்ப அவர் ஆதில் ரஷீத்தை 2 மிகப்பெரிய சிக்சர்கள் தூக்கி 16 பந்துகளில் 21 ரன்கள் என்று இருந்தார், அதுவும் இவருக்கு ஒரு கேட்ச் தவறவிடப்பட்டது, இங்கிலாந்து இதற்கான விலையைக் கொடுக்கும் என்று நினைத்த நேரத்தில் ரஸலும் தன் விக்கெட்டை மார்க் உட் ஷார்ட் பிட்ச் பந்துக்குத் தூக்கி எறிந்து விட்டு சென்றார். நிகோலஸ் பூரனும் அதிரடி ஆட முடியவில்லை அவர் 78 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து ஆர்ச்சரின் எழும்பிய பந்துக்கு பட்லரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். காட்ரெல், காப்ரியல் டக் அவுட் ஆக பிராத்வெய்ட் 14 ரன்களில் ஆர்ச்சரின் பந்தில் விக்கெட்டை தூக்கி எறிந்து வெளியேறினார். அனாமத்தாக இன்னும் 32 பந்துகள் மீதமிருக்க மே.இ.தீவுகள் 212 ரன்களுக்குச் சுருண்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close