[X] Close

3-வது வெற்றியை பெறும் முனைப்பில் இங்கிலாந்து: மேற்கிந்தியத் தீவுகளுடன் இன்று பலப்பரீட்சை


3

  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:32 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டனில் இன்று பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன.

சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக கருதப்படும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டைவிட்டது.

இதன் பின்னர் வலுவாக மீண்டெழுந்த இங்கிலாந்து அணி , 3-வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 386 ரன்கள் குவித்து மிரட்டியிருந்தது.

பேட்டிங்கில் ஜேசன் ராய் (215 ரன்கள்), ஜோ ரூட் (179), இயன் மோர்கன் (101) ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம்வெளிப்படக்கூடும். கடந்த ஆட்டத்தில் 44 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பீல்டிங்கின் போது களமிறங்கவில்லை.

இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜாஸ் பட்லர் களமிறங்குவது சந்தேகம்என கூறப்பட்டது. இந்நிலையில் போட்டிக்கான உடற்தகுதியை ஜாஸ் பட்லர் எட்டிவிட்டதாக இங்கிலாந்து அணி நிர்வாகம் நேற்று முறைப்படி தெரிவித்தது. இந்தத் தொடரில் ஒரு சதம், ஒரு அரை சதம் என 185 ரன்கள் விளாசியுள்ள ஜாஸ் பட்லர் மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளார்.

பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர்தனது சீரான வேகம் மற்றும் பவுன்சர்களால் எந்த ஒரு எதிரணிக்கும் சவால் கொடுக்கும் திறனை கொண்டுள்ளார். ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் நடு ஓவர்களில் பந்து வீச்சின் போது அணிக்கு உறுதுணையாக உள்ளார்.

மேலும் பேட்டிங்கின்போது தேவையான தருணங்களில் ரன்கள் சேர்ப்பது பலமாக உள்ளது. இவர்களுடன் ஆதில் ரஷித், மார்க் வுட் ஆகியோர் ஆட்டத்தின் எந்த ஒரு கட்டத்திலும் விக்கெட்கள் கைப்பற்றுபவர்களாக இருப்பது அணியின் ஸ்திரத்தன்மையை அதிரிக்கச் செய்துள்ளது.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணிதனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. அதேவேளையில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தது.

மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் தனது 4-வது ஆட்டத்தை இன்று எதிர்கொள்கிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது ஆதிக்கம் செலுத்தி முன்னணி பேட்ஸ்மேன்களை விரைவிலேயே பெவிலியனுக்கு திருப்பியது.

147 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் நேதன் கவுல்டர் நைல் (92) அதிரடியாக விளையாடி ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். இதனால் 200 ரன்களுக்குள் ஆட்டமிழக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் குவித்தது. எனவே இன்றைய பந்து வீச்சு துறையில் முன்னேற்றம் காண்பதில் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முனைப்பு காட்டக்கூடும்.

அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஷாட்களை மேற்கொண்டு விக்கெட்களை எளிதாக தாரை வார்த்திருந்தனர். எனவேஇந்த விஷயத்திலும் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடின. ரன் வேட்டை நிகழ்த்தப்பட்ட இந்த தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்திருந்தது. ஒரு ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது.

இந்தத் தொடரில் கிறிஸ் கெயில் 39 சிக்ஸர்களுடன் 424 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். இதனால் அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அவருக்கு ஜோப்ரா ஆர்ச்சர் சவால்தரக்கூடும். ஆல் ரவுண்டரான ஆந்த்ரே ரஸ்ஸல், முழங்கால் பிரச்சினையால் அவதிப்பட்டு வருவதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கவில்லை. இன்றைய ஆட்டத்திலும் அவர், களமிறங்குவது சந்தேகம்தான்.

இன்றைய ஆட்டம் நடைபெறும் சவுத்தாம்டனில்தான் தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய ஆட்டம் 7.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது. நேற்றும் சவுத்தாம்டன் நகரை கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. எனினும் இன்றைய ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புகள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close