[X] Close

பந்தை ஆடம் ஸம்பா சேதப்படுத்தவில்லை: ஆஸி. கேப்டன் ஆரோன் பின்ச் விளக்கம்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:53 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா பந்தை சேதப்படுத்தவில்லை என்று அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் விளக்கம் அளித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பா பந்துவீசினார். இந்த ஆட்டத்தின் போது ஸம்பாவின் சில நடவடிக்கைகள் பலருக்கு சந்தேகத்தை எழுப்பின. ஒரு ஓவரில் அவர், பந்து வீசுவதற்கு முன்பாக தன்னுடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் அடிக்கடி கையை விட்டு எடுத்தார். பின்னர் அவர் தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து பந்தின் மீது வைப்பது போன்று வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளானது. பந்தின் தன்மையை மாற்றுவதற்காக உப்புத்தாளை கொண்டு ஸம்பா தேய்த்தாரா என்று சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதம் செய்யப்பட்டது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், பான் கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் சிக்கி தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆடம் ஸம்பாவின் செயலும் பந்தை சேதப்படுத்தும் செயல்தான் என்று சிலர் சந்தேகம் எழுப்பினர்.

இதுகுறித்து கேப்டன் ஆரோன் பின்ச் கூறும்போது, “ஆடம் ஸம்பா தனது பேண்ட் பாக்கெட்டில் "ஹேண்ட் வார்மர்" என்ற பொருளை வைத்துக் கொண்டு, கைகளை சூடாக்கி கொண்டு பின்னர் பந்து வீசுவார். வேறு ஒன்றுமில்லை. அவர் பந்தை சேதப்படுத்திவில்லை” என்றார். பின்ச் அளித்த விளக்கத்தால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.- பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close