[X] Close

உலகக் கோப்பை போட்டியின் முக்கிய லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸி. இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 08:43 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கிய லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

லண்டன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.உலகக் கோப்பை போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா சிறப்பாக விளையாடி தென் ஆப்பிரிக்க அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ரோஹித் சர்மாவின் சிறப்பான சதத்தாலும், யுவேந்திர சாஹலின் அற்புதமான பந்துவீச்சாலும் இந்திய அணி வெற்றியை எட்டியது.

இந்நிலையில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணி 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. லீக் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணியில் ரோஹித் சர்மா மட்டுமே சிறப்பாக விளையாடினார். ஷிகர் தவண், கே.எல்.ராகுல், கேப்டன் விராட் கோலி, எம்.எஸ். தோனி ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.

கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா சில அபாரமான ஷாட்களை விளையாடினார். ஆனால் இந்த ஆட்டத்தில் முன்வரிசை வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதைப்போலவே முதல் ஆட்டத்தில் பந்துவீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் அபாரமாக பந்துவீசினர். குறிப்பாக பும்ரா பந்துவீச்சில் அனல் பறந்தது. அதைப் போலவே சாஹலின் சுழல்பந்துவீச்சுக்கு தென் ஆப்பிரிக்க வீரர்கள் பலியாயினர். எனவே அவர்களிடமிருந்து மற்றுமொரு சிறப்பான பந்துவீச்சு இன்றும் வெளிப்படக்கூடும். முதல் ஆட்டத்தில் இடம்பெறாத மொகமது ஷமி இந்த ஆட்டத்தில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் இந்திய அணியின் பலத்தை பரிட்சித்துப் பார்க்கும் விதத்தில் களம் புகுந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

அந்த அணியில் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர். உஸ்மான் கவாஜா, கேப்டன் ஆரோன் பிஞ்ச், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரே ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்மித்தும், நாதன் கவுல்ட்டர் நைலும் அபாரமாக விளையாடினார். குறிப்பாக நைல், விளாசித் தள்ளினார். அவர்களிடமிருந்து மேலும் ஒரு அபாரமான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க, நாதன் கவுல்ட்டர் நைல், பெஹரன்டார்ப், கம்மின்ஸ், ஆடம் ஸம்பா ஆகியோர் மிரட்டக் காத்திருக்கின்றனர்.

மேற்கு இந்தியத் தீவு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் கலக்கிய கவுல்ட்டர் நைல், பவுலிங்கில் கோட்டைவிட்டார். எனவே இந்த ஆட்டத்தில் அவர் இடம்பெறமாட்டார் எனத் தெரிகிறது.

அணி விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, மொகமது ஷமி, புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரே, ஆடம் ஸம்பா, பாட் கம்மின்ஸ், நாதன் கவுல்ட்டர்-நைல், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன்ஸ், ஷான் மார்ஷ், ஜேசன் பெஹரன்டார்ப், கேன் ரிச்சர்ட்சன்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close