[X] Close

தோனி கிளவுஸ் சர்ச்சை: பிசிசிஐ கோரிக்கை நிராகரிப்பு; ஐசிசி திட்டவட்டம்


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 09:49 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியின் கிளவுஸில் இருக்கும் பலிதான் முத்திரையை அகற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டவட்டமாக பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்துள்ளது.

தோனி கையுறையில் இருக்கும் முத்திரைக்கும் ராணுவத்துக்கும் தொடர்பில்லை என்று பிசிசிஐ தெரிவித்த பின்பும் அந்த விளக்கத்தை ஏற்க ஐசிசி தயாராக இல்லை.

சவுத்தாம்டன் நகரில் கடந்த 5-ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கையில் அணிந்திருந்த கிளவுஸில் ராணுவத்தில் ஒரு பிரிவான பலிதான் ரெஜிமென்டின் முத்திரையை கையுறையில் அணிந்திருந்தார்.

இந்தக் காட்சி கேமராவில் ஜூம் செய்யப்பட்டு தோனியின் கையுறையில் ராணுவ பலிதான் பிரிவு முத்திரை இருப்பது காட்டப்பட்டது.

இந்தக் காட்சியைப் பார்த்த தோனியின் ரசிகர்கள், தோனிக்கு இருக்கும் நாட்டுப்பற்றைப் புகழ்ந்து, சமூக ஊடகங்களில் அவரைப் பாராட்டினர். தோனி கையுறையில் பலிதான் முத்திரை படம் நேற்று சமூக ஊடகங்களிலும் வைரலானது.

ஆனால், அனைத்துவிதமான வேறுபாடுகளை மறந்து விளையாடும் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் ஒருநாட்டின் ராணுவ முத்திரையைப் பதித்து விளையாடுவதை ஐசிசி விரும்பவில்லை.

உடனடியாக தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரையை நீக்குமாறு பிசிசிஐ அமைப்புக்கும், தோனிக்கும் ஐசிசி அறிவுரை வழங்கியது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் தலைவர் வினோத் ராய், நிருபருக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறுகையில், "தோனி தனது கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்கத் தேவையில்லை. இதைத் தொடர்ந்து வைத்திருப்பு தொடர்பாக ஐசிசியிடம் முறைப்படி அனுமதி கேட்டுள்ளோம். ஐசிசி விதிமுறையின்படி, வீரர்கள் வர்த்தகரீதியான, மதம், ராணுவம் தொடர்பான அடையாளங்களை அணியக்கூடாது என்பது விதிமுறை.

ஆனால், தோனி கையுறையில் இருக்கும் முத்திரை வர்த்தக ரீதியாகவோ, அல்லது மதரீதியாகவோ இருக்கும் அடையாளம் அல்ல. இதுதொடர்பாக ஐசிசியிடம் அனுமதி கோரி பேசி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

dho.jpg 

ஆனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) விளக்கத்தை ஐசிசி ஏற்கவில்லை. உடனடியாக தோனி தனது கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில் "உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர் தோனி தனது கையுறையில் அணிந்திருந்த முத்திரைக்கு ஐசிசி சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை.

ஐசிசி விதிமுறைகளின்படி எந்த ஒரு வீரரும் எந்த தனிப்பட்ட செய்தியையோ அல்லது எந்தவிதமான பொருட்கள், கருவிகள் குறித்த முத்திரைகளையோ பதிக்க ஐசிசி அனுமதியளிக்காது. அதுமட்டுமல்லாமல் ஐசிசி விதிமுறைகளின்படி தோனி தனது கையுறையில் இருக்கும் முத்திரை விதிமுறை மீறியதாகும். அதை உடனே நீக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

ஐசிசியின் அதிகாரபூர்வ விதிமுறைகளின்படி, எந்த ஒரு தனிப்பட்ட வீரரும், அணியினரும், தனது ஆடையில், பயன்படுத்தும் பொருட்களில், கையில் அணியும் பேண்ட்,  ஆடைகள் போன்றவற்றில் தனிப்பட்ட செய்திகளைத் தெரிவிக்க அனுமதியில்லை.

அதுமட்டுமல்லாமல் அரசியல், மதரீதியான, இனரீதியான எந்தவிதமான செய்தியையம் தெரிவிக்க வீரர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close