[X] Close

தோனிக்கு பிசிசிஐ ஆதரவு: ‘கிளவுஸில் உள்ள முத்திரையை அழிக்கத் தேவையில்லை’


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 13:07 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி தனது கையுறையில் பால்தியன் முத்திரையை அணிவதில் எந்தவிதமான தவறும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

தோனியின் கையுறையில் இருக்கு முத்திரை தொடர்பாக ஐசிசியிடம் முறைப்படி அனுமதி கோரியிருக்கிறோம் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுத் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

சவுத்தாம்டன் நகரில் கடந்த 5-ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கையில் அணிந்திருந்த கிளவுஸில் ராணுவத்தில் ஒரு பிரிவான பலிதான் ரெஜிமென்டின் முத்திரையைக் கையுறையில் அணிந்திருந்தார்.

இந்தக் காட்சி கேமராவில் ஜூம் செய்யப்பட்டு தோனியின் கையுறையில் ராணுவ பலிதான் பிரிவு முத்திரை இருப்பது காட்டப்பட்டது.

இந்தக் காட்சியைப் பார்த்த தோனியின் ரசிகர்கள், தோனிக்கும் இருக்கும் நாட்டுப்பற்றைப் புகழ்ந்து, சமூக ஊடகங்களில் அவரைப் பாராட்டினர். தோனி கையுறையில் பலிதான் முத்திரை படம் நேற்று சமூக ஊடகங்களிலும் வைரலானது.

ஆனால், அனைத்துவிதமான வேறுபாடுகளை மறந்து விளையாடும் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் ஒருநாட்டின் ராணுவ முத்திரையைப் பதித்து விளையாடுவதை ஐசிசி விரும்பவில்லை.

உடனடியாக தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரையை நீக்குமாறு பிசிசிஐ அமைப்புக்கும், தோனிக்கும் ஐசிசி அறிவுரை வழங்கியது.

ஐசிசி பொதுமேலாளர் கிளாரி பர்லாங் விடுத்த அறிக்கையில், "இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கிளவுஸில் இந்திய ராணுவத்தின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. அதை நீக்கக் கோரி உடனடியாக பிசிசிஐக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இதுபோன்ற ஒரு நாட்டின் ராணுவத்தின் முத்திரையை அணிந்து விளையாடுவது ஐசிசி விதிகளுக்கு முரணானது. கிளவுஸில் , விளம்பரதாரர் முத்திரை மட்டுமே அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது முதல் முறையாக செய்த குற்றம் என்பதால், நாங்கள் அறிவுறுத்தலோடு விட்டுவிடுகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதலங்களில் விவாதப்பொருளாகி பெரும் சர்ச்சையாகி வருகிறது.

இந்தசூழலில் தோனியின் கையுறையில் இருக்கும் பலிதான் முத்திரையை நீக்கத்தேவையில்லை என்று பிசிசிஐ தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

viniod ra.jpg 

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் தலைவர் வினோத் ராய், நிருபருக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறுகையில், " தோனி தனது கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்கத் தேவையில்லை. இதைத் தொடர்ந்து வைத்திருப்பு தொடர்பாக ஐசிசியிடம் முறைப்படி அனுமதி கேட்டுள்ளோம். ஐசிசி விதிமுறையின்படி, வீரர்கள் வர்த்தகரீதியான, மதம்,ராணுவம் தொடர்பான அடையாளங்களை அணியக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், தோனி கையுறையில் இருக்கும் முத்திரை வர்த்தக ரீதியாகவோ, அல்லது மதரீதியாகவோ இருக்கும் அடையாளம் அல்ல என்பது நமக்குத் தெரியும்.

அதேசமயம்,இது துணை ராணுவப்படைக்கு உரிய அடையாளம் என்று தோனியின் கையுறையில் இருக்கும் முத்திரையை கூற முடியாது. தோனி எந்தவிதமான விதிமுறையையும் மீறவில்லை. தோனியின் கையுறையில் இருக்கும் முத்திரையில் இருக்கும் வார்த்தை மட்டுமே பலிதான் என்று இருக்கிறதே தவிர அது ராணுவத்தோடு தொடர்புடையது அல்ல. ஐசிசி விதிமுறைப்படியே நடந்து கொள்வோம்.

எங்களுக்கு ஐசிசி சார்பில் அந்த முத்திரையை நீக்கக் கோரி கோரிக்கை விடுத்திருந்தார்கள், ஆனால், அறிவுரை அல்ல. பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி ஆஸ்திரேலியப் போட்டிக்கு முன், ஐசிசி அதிகாரிகளுடன் பேசி இதற்கு சம்மதம் வாங்குவார்  " எனத் தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close