[X] Close

பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 09:10 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிஸ்டல் நகரில் இன்று பிற்பகல் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன.

கணிக்க முடியாத அணி என்பதை உலகக் கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி நிரூபித்து வருகிறது. முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் 105 ரன்களில் சுருண்டு 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் தொடரை நடத்தி வரும் வலுவான இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வியக்க வைத்தது.

இந்த ஆட்டத்தில் மொகமது ஹபீஸ், பாபர் அஸாம், சர்ப்ராஸ் அகமது ஆகியோர் அரை சதம் அடிக்க பாகிஸ்தான் அணி 348 ரன்கள் குவித்திருந்தது. மேலும் பந்து வீச்சில் வகாப் ரியாஸ், மொகமது அமிர், ஷதப் கான் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை 334 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியிருந்தனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அடைந்த 11 தோல்விகளுக்கு பாகிஸ்தான் அணி முற்றுப்புள்ளி வைத்திருந்தது.

1975-ம் ஆண்டு உலகக் கோப்பை முதல் இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 7 முறை மோதியுள்ளது. இதில் அனைத்திலும் பாகிஸ்தான் அணி வாகை சூடியுள்ளது. இதனால் அந்த அணியிடம் இருந்து மீண்டும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஹஸ்நயின் களமிறங்க வாய்ப்புள்ளது.

ஏனெனில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சில் ஆட்டம் கண்டிருந்தது. இதனால் அதேபோன்ற வகையிலான பந்து வீச்சை பிரதிபலிக்கச் செய்வதில் பாகிஸ்தான் அணி முனைப்பு காட்டக்கூடும்.

இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றிருந்தது. இந்த இரு ஆட்டங்களிலும் இலங்கை அணியின் நடுவரிசை பேட்டிங் கடும் சரிவை சந்தித்தது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியின் நடுவரிசையானது 14 ரன்களுக்கு 5 விக்கெட்களையும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்களுக்கு 7 விக்கெட்களையும் தாரை வார்த்திருந்தது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியானது நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்துவது அவசியம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 78 ரன்கள் விளாசிய குசால் பெரேராவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), பஹர் ஸமான், இமாம்-உல்-ஹக், பாபர் அஸாம், ஹாரிஸ் சோகைல், ஆசிப் அலி, ஷோயிப் மாலிக், முகமது ஹபீஸ், இமாத் வாசிம், ஷதப் கான், வகாப் ரியாஸ், முகமது அமிர், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அப்ரிடி, முகமது ஹஸ்நயின்.

திமுத் கருணாரத்னே (கேப்டன்), லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், திசரா பெரேரா, குசால் ஜனித் பெரேரா, தனஞ்ஜெயா டி சில்வா, குசால் மெண்டிஸ், இசுரு உதனா, மிலிந்தா சிறிவர்த்தனா, அவிஷ்க பெர்னாண்டோ, ஜீவன் மெண்டிஸ், லஹிரு திரிமன்னே, ஜெப்ரி வான்டர்சே, நுவன் பிரதீப், சுரங்கா லக்மல்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close