[X] Close

‘35 உதிரிகளை வாரி வழங்கி விட்டோம்’: முதல் 10 ஓவர்களை மோசமாக வீசியதே எங்களது தோல்விக்கு காரணம் - ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பாதின் நயிப் கருத்து


35-10

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 10:41 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 10 ஓவர்களை மோசமாக வீசியதே தோல்விக்கு காரணம் என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பாதின் நயிப் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கார்டிப் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பந்து வீசிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் ஆடுகளத்தின் சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியது. முதல் 10 ஓவர்களில் 79 ரன்களை வழங்கிய ஆப்கானிஸ்தான் அணி நடு ஓவர்களில்ஆட்டத்துக்குள் மீண்டு வந்தது.

ஆனால் அதற்குள் இலங்கை அணிபோதுமான அளவு ரன்களை சேர்த்துவிட்டது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தஆட்டத்தில் இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் 35 உதிரிகளை வாரி வழங்கியிருந்தனர். இதில் 22 அகல பந்துகள், 3 நோ-பால்கள், 10 லெக் பைஸ் ஆகியவை அடங்கும்.

இதன் பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 187 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி மலிங்கா, நூவன் பிரதீப் ஆகியோரது வேகத்தில் 32.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு சுருண்டது. 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது.

முதல் ஆட்டத்தில் அந்த அணி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டிருந்தது. இலங்கை அணி சார்பில் நூவன் பிரதீப் 4, மலிங்கா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அதிலும் மலிங்கா தனது அனுபவத்தால் கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

தோல்வி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பாதின் நயிப் கூறுகையில், “பந்து வீச்சை நாங்கள் சிறப்பான முறையில் தொடங்கவில்லை. முதல் 10 ஓவர்களில் போதுமான அளவில்சரியான திசையில் நாங்கள் பந்துகளைவீசவில்லை. பந்து வீச்சாளர்கள் போதுமான பொறுப்பை எடுத்துக்கொள்ளவில்லை என்றே கருதுகிறேன்.

அதேவேளையில் நடு ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டோம். இதற்கான பாராட்டு நிச்சயம் ரஷித் கான், ஹமித் ஹசன், மொகமது நபி ஆகியோரையே சேரும். ஆனால் தொடக்கத்தில் நாங்கள் எதையோ தவறவிட்டுவிட்டோம். உதிரிகளாக நாங்கள் 35 ரன்களை விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் இலங்கை அணியால் 201 ரன்களை எடுத்திருக்க முடியாது.

இலங்கை அணி அனுபவம் வாய்ந்தது. இங்கிலாந்து அல்லது நியூஸிலாந்து போன்ற நாடுகளில் நிலவும் சூழ்நிலைகளில் இலங்கை அணி அதிகஅளவிலான ஆட்டங்களில் விளையாடிஉள்ளது. பிரிஸ்டல் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடிய ஆடுகளத்தில் இருந்து இந்த ஆடுகளம் முற்றிலும் வேறுபட்டது. எங்களது அணி வீரர்களிடம் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு நேர்திசையில் விளையாடுங்கள் என கூறியிருந்தேன்.

ஆனால் இதுபோன்ற ஆடுகளங்களில் எங்களது பேட்ஸ்மேன்கள் தடுமாறுகின்றனர். தொடக்கத்திலேயே சில விக்கெட்களை இழந்துவிட்டோம். நானும், நஜிபுல்லாவும் நிதானமாக செயல்படுவதற்கும் நேர்திசையில் மட்டையை செலுத்துவதற்கும் முயற்சி செய்தோம். ஆனால் இலங்கை அணி சிறப்பாக பந்து வீசியது. அந்த அணியின் பந்து வீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும்” என்றார்.

தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள இலங்கை அணி தனது 3-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நாளை மோதுகிறது. அதேவேளையில் ஆப்கானிஸ்தான் அணி தனது அடுத்த ஆட்டத்தில் 8-ம் தேதி நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close