[X] Close

மேற்கிந்தியத் தீவுகளுடன் ஆஸ்திரேலியா இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 10:38 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகலில் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியும், மேற்கிந்தியத் தீவுகளும் உலகக் கோப்பை தொடரை சிறப்பான முறையில் தொடங்கியிருந்தன. ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்திருந்தது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆப்கானிஸ்தானை 207 ரன்களுக்குள் மடக்கினர்.

இதன் பின்னர் இலக்கை துரத்திய போதுகேப்டன் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர்ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தியிருந்தனர். இந்த ஜோடியிடம் இருந்து மேலும் ஒருசிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இவர்களுடன் ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோரும் பேட்டிங்கில்வலுசேர்க்கக் கூடியவர்களாக உள்ளனர்.

வேகப் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்,பாட் கம்மின்ஸ், நேதன் கவுல்டர் நைல்,மார்கஸ் ஸ்டாயினிஸ் கூட்டணி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் படைக்குசவால் கொடுக்க ஆயத்தமாகி உள்ளது. சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பா நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார்.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியானது எழுச்சியுடன் விளையாடி வருகிறது. தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை ஷார்ட் பிட்ச், பவுன்ஸர்களால் 105 ரன்களுக்குள் சுருட்டி வீசியிருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

ஓஷன் தாமஸ் 4 விக்கெட்களையும், ஜேசன்ஹோல்டர், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோர் கூட்டாக 5 விக்கெட்களை வேட்டையாடியிருந்தனர். 106 ரன்களை துரத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 13.4 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 33 பந்துகளில் அரைசதம் விளாசிய கிறிஸ் கெயில் மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்றுவதில் முனைப்புக் காட்டக்கூடும்.

ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், சிம்ரன்ஹெட்மையர், ரஸ்ஸல், கார்லோஸ் பிராத்வெயிட், ஹோல்டர் ஆகியோரும் பவர் ஹிட்டர்களாக இருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு இவர்கள் கடும் சவால் அளிக்கக்கூடும்.

ஆஸ்திரேலியா

ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ், அலெக்ஸ் காரே, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், நேதன் கவுல்டர் நைல், ஜேசன் பெஹ்ரன்டார்ப், நேதன் லயன், ஆடம் ஸம்பா.

மேற்கிந்தியத் தீவுகள்

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெயில், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, சிம்ரன் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், ஆந்த்ரே ரஸ்ஸல், கார்லோஸ் பிராத் வெயிட், எவின் லீவிஸ், பேபியன் ஆலன், ஆஷ்லே நர்ஷ், கேமார் ரோச், ஒஷன் தாமஸ், ஷனோன் கபேரியல், ஷெல்டன் காட்ரெல்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close