[X] Close

யாரும் அரைசதம் இல்லை; பும்ரா, சாஹல் அபாரம்: தென் ஆப்பிரிக்க அணி 9 விக். இழப்புக்கு 227 ரன்கள்


9-227

  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 19:13 pm
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

சவுத்தாம்ப்டனில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 8வது போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.

 

இன்னிங்ஸ் முழுதும் இந்தியப் பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக தொழில் நேர்த்தியுடன் வீசினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி தொடர் நெருக்கடிக்கு ஆட்படுத்தப்பட்டது. பும்ரா 10 ஓவர் 35ரன்கள் 2 விக்கெட், சாஹல் 10 ஒவர் 51 ரன் 4 விக்கெட். புவனேஷ்வர் குமார் 10 ஓவர் 44 ரன்கள் 2 விக்கெட்.

 

சாஹல், குல்தீப் சேர்ந்து வீசும்போது ஓவருக்கு ஒரு ஷாட்டாவது தவறான ஷாட்டை அடித்தனர் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள்.

 

தென் ஆப்பிரிக்க அணியில் யாரும் அரைசதம் எடுக்கவில்லை. கிறிஸ் மோரிஸ் மட்டுமே அதிகபட்சமாக 42 ரன்களை எடுத்தார். டுமினி ஆட்டமிழக்கும் போது 89/5 என்று தென் ஆப்பிரிக்கா 23வது ஓவர் முடிவில் தடவிக்கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு இந்திய அணி சற்றே பிடியைத் தளர்த்தியது. ஹர்திக் பாண்டியா 6 ஓவர்கள் 31 ரன்கள் விக்கெட் இல்லை, ஜாத 4 ஓவர் 16 ரன்கள் விக்கெடெ இல்லை. இந்த 10 ஓவர்களில் 47 ரன்கள் வர கொஞ்சம் பிடி தளர்ந்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவின் பின் கள வீரர்களான பெலுக்வயோ (34), கிறிஸ் மோரிஸ் (42), கேகிசோ ரபாடா (31) ஆகியோர் ரன்கள் சேர்க்க 89/5லிருந்து ஓரளவுக்கு போட்டிதரக்கூடிய 227 ரன்களுக்கு வந்தது.

 

குறிப்பாக கிறிஸ் மோரிஸ், கேகிஸோ ரபாடா 66 ரன்களை ஓவருக்கு 6.7 என்ற விகிதத்தில் அடித்தனர்.  புதிய பந்து பழசானவுடன் கொஞ்சம் சுலபமானது, ஆனால் தென் ஆப்பிரிக்கா ஸ்பின்னர்களைக் கண்டாலே அலறும் அணியானதால் சாஹல் அவர்களை காலி செய்தார். சாஹல், குல்தீப் இருவரும் ஆரஞ்சு பழத்தில் பவுலிங் செய்து கூட தென் ஆப்பிரிக்காவைக் காலி செய்வார்கள் போல் தெரிகிறது.

 

தொடக்கத்தில் பும்ராவின் பந்து வீச்சு உஷ்ணத்தை குவிண்டன் டி காக் எதிர்கொண்டார், ஆனால் ஆம்லாவும் இவரும் ஆட்கொள்ளவில்லை. ஹஷிம் ஆம்லாவுக்கு மிகப்பிரமாதமாக ஒரு டெலிவரியை பும்ரா ஆஃப் ஸ்டம்பில் வீச கிரீசில் நின்ற படியே பந்தை இடித்தார். 2வது ஸ்லிப்பில் ரோஹித் சர்மா கேட்ச் எடுத்தார். தொடர்ந்து டெஸ்ட் போட்டி போல் 3 ஸ்லிப்களை வைத்து அட்டாக் செய்தார் விராட் கோலி.

 

டி காக் 10 ரன்கள் எடுக்க தடுமாறினார் காரணம் பும்ரா அவரது உடலுக்குக் குறுக்காக அதிவேகத்தில் எழும்பும் பந்துகளை ஸ்விங் செய்ய அவருக்கு அந்தக் கோணம் கடும் சிரமங்களைக் கொடுத்தது, கடைசியில் ஒரு பந்தை ஃபுல் லெந்தில் சற்றே வைடாக வீச எதிர்பார்த்தது போல் டி காக் பவுண்டரி பந்து என நினைத்து மட்டையை விட்டார் எட்ஜ் ஆகி 3வது ஸ்லிப்பில் கோலி கையில் தஞ்சமடைந்தது.

 

டுபிளெசிஸ் தடுமாற்றத்துடன் தான் ஆடினார், நம்பிக்கையுடன் ஆடவில்லை, ஆனால் 4 பவுண்டரிகளை அவர் அடித்தார். அவரை விட வான் டெர் டூசன் நம்பிக்கையுடன் ஆடினார். இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்காக 54 ரன்களை சுமார் 14 ஓவர்களில் சேர்த்தனர். பிறகு டூசன் தேவையில்லாமல் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆடி சாஹலிடம் 22 ரன்களில் பவுல்டு ஆனார். அதுவும் முன் கூட்டியே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்போவதாக அவரது நகர்வு இருந்ததால் லெக் ஸ்டம்பில் வீசினார் சாஹல் நேராக பவுல்டு. தேவையில்லாத அனாவசிய ஷாட்.

 

இவர் ஆட்டமிழந்த பிறகு 38 ரன்களில் டுபிளெசிஸ், சாஹலின் பந்தைச் சரியாக கணிக்காமல் ஆட முயற்சி செய்ய பந்து மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து ஸ்டம்பை தொந்தரவு செய்ய அபாரமான பந்தில் டுப்ளெசிஸ் பவுல்டு.  டுமினி 11 பந்துகள் ஆடி 3 ரன்கள் என்று கடும் நெருக்கடியில் தள்ளப்பட குல்தீப் ஒரு பந்தை வேகமாக வீச நேராக எல்.பி.ஆகி வெளியேறினார், இவருக்குப் பதிலாக அந்த ஹென்றிக் கிளாசனை அணியில் தேர்வு செய்திருக்கலாம். ஆனால் ஏனோ அவரைத் தேர்வு செய்யவில்லை. 89/5 என்ற நிலையிலிருந்து டேவிட் மில்லர், பெலுக்வயோ கூட்டணி நம்பிக்கையுடன் ஸ்கோரை 135க்கு உயர்த்தினர், டேவிட் மில்லர் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆட முடியவில்லை அவர் கட்டுப்படுத்தப்பட்டார். 40 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரியுடன் 31 எடுத்து சாஹலின் லெக்ஸ்பின்னை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

பெலுக்வயோ 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து மேலேறி வந்தார் அதாவது திரும்பிப் போக முடியாத அளவுக்கு மேலேற பந்து அவரைத் தாண்டி சென்றது... அங்கு கழுகு போல் காத்திருந்த தோனி ஸ்டம்பிங்கை முடித்தார்.  அதன் பிறகுதான் கிறிஸ் மோரிஸ், ரபாடா இணைந்து 66 ரன்களைச் சேர்த்தனர்.  புவனேஷ்வர் குமார் கிறிஸ்மோரிசையும், இம்ரான் தாஹிரையும் வீழ்த்த 50 ஓவர்களில் 227/9 என்று தென் ஆப்பிரிக்கா முடிந்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close