[X] Close

'ரபாடாவுடன் நேருக்கு நேர் பேசி தீர்த்துக்கொள்கிறேன்': விராட் கோலி பதில்


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 10:22 am
  • அ+ அ-

-பி.டி.ஐ.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கும், எனக்கும் இருக்கும் பிரச்சினையை நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்கிறேன்.பத்திரிகையாளர்களிடம் பேச விரும்வில்லை என்று இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா சமீபத்தில் ஒரு இணையதளத்துக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், "நான் போட்டியில் எவ்வாறு விளையாடலாம் என்றுதான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஆனால், என் பந்தில் ஒரு பவுண்டரி அடித்துவிட்டு, விராட் கோலி என் மீது மோதிவிட்டு ஏதாவது வார்த்தை கூறிவிட்டுச் செல்வார்.

நான் ஏதாவது பதிலுக்குப் பேசினால் அவர் ஆத்திரமடைவார், கோபப்படுவார். நான் கடந்து வந்த வீரர்களில் விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரர். அவர் எதிரணி வீரர்களைத் திட்டலாம், ஆனால், நாங்கள் திட்டினால் கோபப்படுகிறார்" எனத் தெரிவித்திருந்தார்.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் ஆட்டம் சவுத்தாம்டன் நகரில் இன்று நடக்கிறது. அதற்கு முன்னதாக கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது, கேப்டன் கோலியிடம், ரபாடா உங்களைப் பற்றி விமர்சித்துள்ளாரே என்ன பதில் அளிப்பீர்கள் என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு விராட் கோலி கூறுகையில், "நான் ரபாடாவுடன் இதற்கு முன் பலமுறை விளையாடி இருக்கிறேன். ஏதாவது அவருடன் ஆலோசிக்க வேண்டியது இருந்தால், பேச வேண்டிய தேவை இருந்தால், நான் நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்கிறேன். பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி எதற்கும் பதில் அளிக்கமாட்டேன்.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் லுங்கி இங்கிடி, ஸ்டெயின், ரபாடா ஆகியோர் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள், எந்த அணிக்கும் எதிராக அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடியவர்கள். ரபாடாவுக்கு கிரிக்கெட் மீதான பற்று, திறமை, எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை  இருக்கிறது. எந்த பேட்டிங் வரிசையும் குலைக்கும் வகையில் பந்துவீசக்கூடியவர் ரபாடா.

டேல் ஸ்டெயின் மிகச்சிறந்த வீரர், அன்பாக பழகக்கூடியவர். என்னுடைய நீண்டகால நண்பர் ஸ்டெயின். அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு உலகக்கோப்பையில் விளையாட முடியாத செய்தி வேதனைக்குரியது. மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வந்திருப்பது குறித்து என்னிடம் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது விளையாட முடியாமல் போனது வேதனைதான். அவர் விரைவாக குணமடைந்து வர நான் வாழ்த்துகிறேன்''.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close