[X] Close

அடுத்தடுத்து இரு தோல்விகளால் துவண்டுள்ள தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி இன்று மோதல்; காயம் காரணமாக டேல் ஸ்டெயின் தொடரில் இருந்தே விலகல்


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 08:07 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகலில் சவுத்தாம்டனில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

100 கோடிக்கும் அதிகமான ரசிகர்களின் நம்பிக்கையை சுமந்தபடி விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பை தொடரில் களமிறங்குகிறது. இந்த சகாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் விராட் கோலி கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு பல்வேறு பெருமைகளையும், சாதனைகளையும் தேடிக்கொடுத்துள்ளார்.

தற்போது முதன்முறையாக உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்த உள்ளார். இதனால் இந்த உலகக் கோப்பை தொடரானது ஒரு தலைவராக அவரதுமரபுகளை வரையறை செய்யும் விதத்தில் அமையக்கூடும். தற்போதைய இந்திய அணியானது வெற்றியை தேடித்தரக்கூடிய வீரர்கள் பலரை கொண்டுள்ளது. முக்கியமாக பேட்டிங்கில் அணியை முன்னின்று நடத்துபவராக விராட் கோலி திகழ்கிறார்.

அனைத்து வகையிலான அடிப்படை தேவைகளையும் அணி பூர்த்தி செய்துள்ள போதிலும் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான அணியை போன்றதொரு ஆத்மார்த்தமான ஒளிரும் தன்மை மட்டும் இல்லாதது போன்ற ஒரு மாயத்தோற்றம் உள்ளது. அப்போதைய அணியில் சச்சின் டெண்டுல்கர், சேவக், யுவராஜ் சிங், கவுதம் காம்பீர், ஜாகீர்கான், ஹர்ஜன் சிங் போன்ற பெரிய பெயர்களை கொண்ட நட்சத்திரங்களோடு முனாப் பட்டேல், ஆஷிஸ் நெஹ்ரா, சுரேஷ் ரெய்னா, இளமை ததும்பிய விராட் கோலி ஆகியோர் பேருதவியாக இருந்தனர்.

எனினும் தற்போதைய அணியை விராட் கோலி வழிநடத்த, தோனி பயனுள்ளஆலோசனைகள் வழங்குவதால் சிறந்த முடிவுகள் கிடைக்கப் பெறுகின்றன. உலகக் கோப்பை தொடரில் 9 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெறும்பட்சத்தில் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ள முடியும். இதற்கான பாதையை விராட் கோலி படை எளிதாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரு வருடங்களை முதலீடு செய்து ஆற்றல்மிக்க படையை உருவாக்கிஉள்ளது இந்திய அணி. இதற்கான கட்டமைப்பு பணிகளை 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணி நிர்வாகம் தொடங்கியிருந்தது. ‘மென் இன் புளூ’ என வர்ணிக்கப்படும் இந்திய அணி, உலகக் கோப்பை தொடர் தொடங்கிய 6 நாட்களுக்கு பிறகே தனது முதல் ஆட்டத்தை சந்திக்கிறது.

பெரும்பாலான அணிகள் இரு ஆட்டங்களை விளையாடி உள்ள நிலையில் போதுமான அளவு ஓய்வு கிடைக்கப் பெற்றுள்ள இந்திய அணி, ஆதிக்கம் செலுத்தும் வகையிலான செயல்திறனை வெளிப்படுத்த முழு வீச்சில் தயாராகி உள்ளது. தொடரை வெற்றிகரமாக தொடங்குவதில் இந்திய அணி முனைப்பு காட்டி வரும் நிலையில் சில அழுத்தமான கேள்விகளுக்கு விராட் கோலி விடை காண்பதும் அவசியமாகிறது.

முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, மொகமது ஷமி ஆகியோர் இருக்கும் நிலையில் 3-வது வேகப்பந்து வீச்சாளராக புவனேஷ்வர் குமார் முன்னிலைப்படுத்தப்படுவாரா?, கடந்த 22 மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஜோடியைவிட பயிற்சி ஆட்டத்தில் அசத்திய ரவீந்திர ஜடேஜாவின் மீது அணியின் பார்வை படிந்துள்ளதா? சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக எந்தவித ஆட்டத்திலும் பங்கேற்காத கேதார் ஜாதவ் போட்டியில் விளையாடுவதற்கான முழு உடல் தகுதியை எட்டிவிட்டாரா?, இங்கிலாந்து சூழ்நிலையில் விஜய் சங்கரின் செயல்திறன் எப்படி இருக்கும்? என இதுபோன்ற கேள்விகள் விராட் கோலியின் முன்பாக அணிவகுத்து நிற்கின்றன.

இது ஒருபுறம் இருக்க தொடக்க வீரர்களான ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் கடந்த சில மாதங்களாக சிறந்த பார்மில் இல்லை. இரு பயிற்சி ஆட்டங்களில் கூட அவர்கள், ரன்கள் சேர்க்க தடுமாறினர். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுக்கும் திறனை கொண்ட இந்த ஜோடி இன்றைய ஆட்டத்தில் மீண்டும் பார்முக்கு திரும்புவதில் அதீத கவனம் செலுத்தக்கூடும்.

பேட்டிங்கில் 4-வது வீரராக கே.எல்.ராகுல் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனெனில் அவர், வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தார். 5-வது இடத்தில் களமிறங்கும் தோனி, பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக 78 பந்துகளில் 113 ரன்கள் விளாசியது போன்ற உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை சிதைவுக்கு உள்ளாக்க முடியும்.

டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, உலகக் கோப்பை தொடரை சிறப்பு மிக்க வகையில் தொடங்கவில்லை. அந்த அணி இங்கிலாந்து, வங்கதேச அணிகளிடம் தோல்வியடைந்த நிலையில் இன்றையஆட்டத்தை சந்திக்கிறது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்துள்ளது அணியை பலவீனப்படுத்தி உள்ள நிலையில் அணியின் பேட்டிங்கும் கடும் சரிவை சந்திப்பது கேப்டன் டு பிளெஸ்ஸிஸுக்கு பெரிய தலைவலியை உருவாக்கி உள்ளது.

வேகத்தை குறைத்து வீசும் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் கையாளும் மோசமான யுத்திகள் இரு ஆட்டங்களிலும் அம்பலமானது. தரம் வாய்ந்த இரு சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் 20 ஓவர்களை தென் ஆப்பிரிக்க அணி கையாள்வது என்பது கடினமான செயலாக மாறியுள்ளது. இதனால் இன்றையஆட்டத்தில் யுவேந்திர சாஹல், குல்தீப்யாதவ் ஜோடி கடும் சவால்கள் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது நடைபெற்ற 6 ஆட்டங்களில் குல்தீப் யாதவ் 17 விக்கெட்களையும், யுவேந்திர சாஹல் 16 விக்கெட்களையும் வேட்டையாடிஇருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேகப் பந்து வீச்சில் முன்னணி வீரரான லுங்கி நிகிடி, தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை.

இதற்கிடையே தோள்பட்டை காயம் காரணமாக முதல் இரு ஆட்டங்களிலும் களமிறங்காமல் இருந்த சீனியர் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் உலகக் கோப்பை தொடரில் இருந்தே விலகியுள்ளார். தோள்பட்டையில் 2-வது முறையாக ஸ்டெயினுக்கு ஏற்பட்டிருந்த காயம் சிகிச்சைக்கு ஏற்ற பலனை தராததால் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பியூரன் ஹெண்ட்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லுங்கி நிகிடி காயம், ஸ்டெயின் விலகல் ஆகியவை தென் ஆப்பிரிக்க அணியில் மேலும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இன்றைய ஆட்டத்தில் நிகிடிக்கு பதிலாக மித வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான பிரிட்டோரியஸ் அல்லது சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி களமிறக்கப்படக்கூடும். தற்போதைய நிலையில் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்க அணியின் ஒரே நம்பிக்கை காகிசோ ரபாடா மட்டுமே.

தொடக்க ஓவர்களில் அவர், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தால் மட்டுமே மற்ற பந்து வீச்சாளர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த முடியும். லெக் ஸ்பின்னில் ரோஹித் சர்மா, திணறக்கூடியவர் என்பதால் மீண்டும் ஒருமுறை தொடக்க ஓவர்களை இம்ரன் தகிர் வீச வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் காயம் அடைந்த ஹசிம் ஆம்லா முழு உடற்தகுதியை எட்டியுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close