[X] Close

வங்கதேசத்துடன் இன்று மோதல்; வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா


  • kamadenu
  • Posted: 02 Jun, 2019 08:57 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. 312 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 207ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணியை 311 ரன்களுக்குள் மடக்கியதால் தென்ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கத்தில் ஹசிம் ஆம்லா, ஜோப்ரா ஆர்ச்சரின் பந்தில் காயம் அடைந்து வெளியேறியது அதன் பின்னர் டு பிளெஸ்ஸிஸ், எய்டன் மார்க்ரம் குறைந்த ரன்களில் நடையை கட்டியது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.

நடுவரிசையில் ஜேபி டுமினியும் கைகொடுக்கத் தவறினார். குயிண்டன் டி காக், வான் டெர் டசன் ஆகியோர் அரை சதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஆனால் இந்த ஜோடி வெளியேறியதும் பின்கள பேட்டிங் வரிசை எளிதாக சரணடைந்தது.

ஜோப்ரா ஆர்ச்சரின் சீரான வேகம், பவுன்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸின் முப்பரிமான திறனால் தோல்வியை சந்தித்த தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராகவிளையாடிய அதே மைதானத்தில்தான் இன்றைய ஆட்டத்தையும் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது. இது அந்த அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

கடந்த உலகக் கோப்பை தொடரில் கால் இறுதி வரை முன்னேறிய வங்கதேச அணி சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் கோப்பையை வென்று அசத்தியிருந்தது. எனினும் முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளது அந்த அணியை கவலையடைச் செய்துள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான தமிம் இக்பால் நேற்று முன்தினம் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட போது இடது மணிக்கட்டு பகுதியில் காயம் அடைந்தார்.

இதையடுத்து மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர், அதன் பின்னர் பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை. இங்கிலாந்து மண்ணில் தமிம் இக்பால் 7 ஆட்டங்களில் விளையாடி சராசரி 50.71 உடன் சுமார் 350 ரன்கள் சேர்த்துள்ளார். அதிலும் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் முறையே 128மற்றும் 95 ரன்கள் விளாசி இருந்தார்.

இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டால் வங்கதேச அணிக்கு பாதகமாகவே அமையும். இது ஒருபுறம் இருக்க கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான மஷ்ரஃப் மோர்டசா, தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

ஏற்கெனவே முஸ்டாபிஸூர் ரஹ்மான் கணுக்கால் காயத்தாலும், ஆல்ரவுண்டரான ஷகிப் அல்ஹசன் நரம்பு பிடிப்பாலும், மஹ்மதுல்லா ரியாத் தோள்பட்டை காயத்தாலும் சிரமப்பட்டு வருகின்றனர். எனினும் இவர்கள், விளையாடு வதற்கான உடற்தகுதியை எட்டிவிடக்கூடும் என அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

அணிகள் விவரம்

வங்கதேசம்: மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), தமிம் இக்பால், லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முஸ்பிஹூர் ரகிம், மஹ்மதுல்லா ரியாத், ஷகிப் அல் ஹசன், மொகமது மிதுன், சபீர் ரஹ்மான், மொசடக் ஹோசைன், மொகமது சைபுதீன், மெஹிதி ஹசன், ரூபல் ஹோசைன், முஸ்டாபிஸூர் ரஹ்மான், அபு ஜயத்.

தென் ஆப்பிரிக்கா: டுபிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, குயிண்டன் டிகாக், டேவிட் மில்லர், மார்க் ராம், ஜேபி டுமினி, பெலுக்வயோ, கிறிஸ் மோரிஸ், பிரிட்டோரியஸ், வான் டெர் டசன், இம்ரன் தகிர், தப்ரைஸ் ஷம்சி, டேல் ஸ்டெயின், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி.

4-வது முறையாக

உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா 2 வெற்றிகளையும், வங்கதேசம் ஒரு வெற்றியையும் பெற்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close