[X] Close

வெற்றி தொடக்கத்துக்கு ஆஸ்திரேலியா தயார்: ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 01 Jun, 2019 08:49 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மாலை பிரிஸ்டல் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.

ஆஸ்திரேலிய அணி ஆரோன்பின்ச் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணி 5-0 என ஒயிட்வாஷ் ஆனது. அந்த காலக்கட்டத்தில் தடை காரணமாக ஸ்மித், வார்னர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த தோல்விதான் ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது.

இதன் பின்னர் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா பறிகொடுத்தது. ஆனால் அதைத் தொடர்ந்து இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை வென்றுஆஸ்திரேலிய அணி சாதனை படைத்தது. முதல் இரு ஆட்டத்திலும் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 3 ஆட்டங்களை வென்று கோப்பையை தட்டிச் சென்றது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபுஅமீரகத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி மீண்டும் பழையபார்மை அடைந்தது. சரியான நேரத்தில் உச்சகட்ட பார்முக்கு திரும்பியிருப்பதன் மூலம் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாகவும் ஆஸ்திரேலிய அணி உருமாற்றம் அடைந்துள்ளது.

தடை காலத்துக்கு பிறகு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் திரும்பியுள்ளதால் அணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. வார்னர் ஐபிஎல் தொடரில் 692 ரன்கள் குவித்து சிறந்த பார்மில் உள்ளார். அதேவேளையில் ஸ்மித், இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசி அசத்தியிருந்தார். இன்றைய ஆட்டத்தில் வார்னர் களமிறங்குவது சந்தேகம்தான்.

ஏனெனில் அவர், தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

பேட்டிங் செய்வதற்கான உடற்தகுதி அவரிடம் உள்ள போதிலும், பீல்டிங் செய்வதற்கான முழு உடல்தகுதியை எட்டவில்லை. உலகக்கோப்பை தொடர் என்பதால் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணி ரிஸ்க் எடுக்கவிரும்பாது என்பதால் இன்றைய ஆட்டத்தில் அநேகமாக வார்னர் வெளியே அமரவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வார்னர் களமிறங்காத பட்சத்தில் ஆரோன் பின்ச்சுடன், தொடக்கவீரராக உஸ்மான் கவாஜா களமிறங்கக்கூடும். மேலும் விளையாடும் லெவனில் ஷான் மார்ஷ்இடம் பெறவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. நடுவரிசையில் அதிரடியாக பேட் செய்யக்கூடிய கிளென் மேக்ஸ்வெல், முப்பரிமான திறன் கொண்ட மார்கஸ் ஸ்டாயினிஸ் பலம் சேர்க்கக்கூடும்.

பந்து வீச்சு துறையில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தங்களது வேகங்களால் மிரட்ட காத்திருக்கின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக ஜேசன்பெஹ்ரன்டார்ப், நேதன் கவுல்டர் நைல், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் திகழக்கூடும். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பா, நேதன்லயன் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

அஸ்கர் ஆப்கன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டள்ளதால் ஆப்கானிஸ்தான் அணி குல்பாதின் நயிப் தலைமையில் களமிறங்குகிறது. பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணிக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. டி 20 தரவரிசையில் முதலிடத்திலும், ஒருநாள் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்திலும் உள்ள ரஷித் கான், ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய துருப்பு சீட்டாக உள்ளார்.

அவருடன் முஜீப் உர் ரஹ்மான், மொகமது நபி ஆகியோரும் பந்து வீச்சில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். பேட்டிங்கில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சிஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஹஸ்ரத்துல்லா சஷாய்,ஹஸ்மதுல்லா ஷாகிதி மொகமது ஷசாத், ரஹ்மத் ஷா ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close