[X] Close

டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று மோதல்; மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடியை சமாளிக்குமா பாகிஸ்தான்?


  • kamadenu
  • Posted: 31 May, 2019 08:49 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட்திருவிழாவின் 2-வது நாளான இன்றுஉலக அரங்கில், ‘கணிக்க முடியாத அணி’ என பெயரெடுத்துள்ள பாகிஸ்தான் அணியும், ‘அன்டர் டாக்ஸ்’ அணி என அழைக்கப்படும் (எதிர்பாராத வெற்றி அல்லது தோல்வியை அடையும் அணி) மேற்கிந்தியத் தீவுகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 5-0 எனவும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 4-0 எனவும் முழுமையாக பறிகொடுத்ததும் அடங்கும். இது ஒருபுறம் இருக்க பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்ததும் பாகிஸ்தான் அணியின் மனவலிமையை சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சும், பீல்டிங்கும் படுமோசமாக அமைந்தது. அதிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெரும்பாலும் 350 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியிருந்தனர். இதனால் இறுதிக்கட்டத்தில் சீனியர் வீரர்களான மொகமது அமிர், வகாப் ரியாஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

34 வயதான வகாப் ரியாஸ், கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டுநடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் விளையாடி இருந்தார். அதேவேளையில் மொகமது அமிர், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு பங்கேற்ற 15 ஒருநாள் போட்டிகளில் வெறும் 5 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். பார்மை கருத்தில் கொள்ளாமல் அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததே இவர்களை தேர்வுக்குழுவினர் அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். மற்றொரு வேகப் பந்து வீச்சாளரான ஹசன் அலியின் பார்மும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ஷாஹீன் அப்ரீடி மட்டுமே சமீபகாலமாக குறைந்த ரன் சிக்கனவிகிதத்துடன் பந்துவீசி வருகிறார். சுழலில் ஷதப்கான் நம்பிக்கைஅளித்தாலும் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதில் தேக்கம் அடைவதும் பலவீனமாக உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் பாபர் அஸாம், பஹர் ஸமான், இமாம் உல் ஹக், ஆசிப் அலி ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி சமீபகாலமாக சிறந்த பார்மில் உள்ளது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அந்த அணி வலுவானஇங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டு தொடரை 2-2 எனசமன் செய்து அசத்தியிருந்தது. கிறிஸ் கெயில், ஷாய் ஹோப், ஆந்த்ரே ரஸ்ஸல், சிம்ரன் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் பவர் ஹிட்டர்களாக உள்ளனர். நியூஸிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 421 ரன்கள் விளாசி மிரட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணியானது, பலவீனமாகி உள்ள பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை பதம்பார்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் எதிரணியை மிரளச் செய்யும் வகையிலான வீரர்கள் இல்லாதது சற்று பலவீனமாக பார்க்கப்படுகிறது. எனினும் இந்த குறையை அந்த அணி ஆல்ரவுண்டர்களை கொண்டு நிரப்பக்கூடும் என கருதப்படுகிறது.

அணிவிவரம்

பாகிஸ்தான்: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, பஹர் ஸமான், ஹசன் அலி, இமாம் உல் ஹக், மொகமது ஹபீஸ், ஷதப் கான், ஷோயிப் மாலிக், பாபர் அஸாம், ஹாரிஸ் சோகைல், இமாத் வாசிம், மொகமது அமிர், மொகமது ஹஸ்னயின், ஷாஹீன் அப்ரீடி, வகாப் ரியாஸ்.

மேற்கிந்தியத் தீவுகள்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெயில், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, ஷனோன் கப்ரியல், சிம்ரன் ஹெட்மையர், எவின் லீவிஸ், நிக்கோலஸ் பூரன், ஆந்த்ரே ரஸ்ஸல், கார்லோஸ் பிராத்வெயிட், ஷெல்டன் காட்ரெல், பேபியன் ஆலன், ஆஷ்லே நர்ஷ், கேமார் ரோச், ஓஷன் தாமஸ்.

சாம்பியன்ஸ் டிராபியும், பாகிஸ்தானும்

2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை இழந்திருந்தது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் 124 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

ஆனால் அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. யாரும் எதிர்பாராத வகையில் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையையும் கைப்பற்றியது.

இதுபோன்ற காரணங்களாலேயே கணிக்க முடியாத அணி என பாகிஸ்தான் அழைக்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடர் என்பதால் அந்த அணியிடம் இருந்து வேறு வகையிலான உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close