[X] Close

‘பிரில்லியண்ட் ஸ்டோக்ஸ்’ ஆல்ரவுண்ட் அசத்தல்; ஜோஃப்ரா ஆர்ச்சரின் வேகம்: இங்கிலாந்தின் துல்லியத்தின் முன் சவாலின்றி  தெ.ஆ. சரண்


  • kamadenu
  • Posted: 31 May, 2019 00:27 am
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை 2019-ன் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை இங்கிலாந்தின் துல்லியம் வீழ்த்தியது, இதனால் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தொழில்நேர்த்தியுடன் வெற்றி பெற்றது.

 

டாஸ் வென்ற டுப்ளெசிஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார், ஓரளவுக்கு இங்கிலாந்தை 125 டாட்பால்களுடன் கட்டுப்படுத்தி 311 ரன்களுக்குச் சுருக்கினார், ஆனால் மீண்டும் பேட் செய்த போது ஹஷிம் ஆம்லா தொடக்கத்தில் ஆர்ச்சர் பவுன்சரில் அடி வாங்கி பெவிலியன் சென்றதால் ஏற்பட்ட பின்னடைவு சரிசெய்ய முடியாது போனதோடு, இங்கிலாந்தின் துல்லியத் தாக்குதல் பவுலிங், மிகப்பிரமாதமான பீல்டிங் ஆகியவற்றினால் 39.5 ஓவர்களில் 207 ரன்களுக்குச் சுருண்டது.  இன்னும் 10.1 ஒவர் இருக்கிறது. விக்கெட்டுகளை தக்க வைத்திருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

 

பிரமிப்பூட்டும் பென் ஸ்டோக்ஸின் ‘நூற்றாண்டின் சிறந்த கேட்ச்’

 

Capture.JPG 

 

பென் ஸ்டோக்ஸ் இன்று பிரமாதமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி 89 ரன்களை எடுத்ததோடு 2 விக்கெட்டுகளைக்  கைப்பற்றினார், அதோடு உலகின் ஆகச்சிறந்த கேட்ச் என்று வர்ணிக்கப்படும் ஒரு கேட்சை பென் ஸ்டோக்ஸ் பிடித்தார். தென் ஆப்பிரிக்காவின் ஆண்டில் பெலுக்வயோ 25 பந்துகளி 5 பவுண்டரிகளுடன் 24 என்று அபாயகரமாக ஆடிக்கொண்டிருந்த போது ஆதில் ரஷித் வீசிய பந்தை டீப் மிட்விக்கெட்டில் தூக்கி அடிக்க பந்து சிக்சருக்கு பிளாட்டாகச் சென்று கொண்டிருந்தது. கால்பந்து கோல் கீப்பர் போல் செயல்பட்ட ஸ்டோக்ஸ் ஒரு கட்டத்தில் படுக்கைவசமாக இருந்ததோடு மேலேயும் எழும்பினார் வலது கையில் வாகாக இல்லாத ஒரு நிலையில் கேட்ச் உட்கார்ந்தது.  அதிவேகமாகச் சென்ற பந்தை திகைப்பூட்டும் விதத்தில் பிடித்தார், இதுதான் ஒன்றிரண்டு நாட்களுக்குப் பேச்சாக இருக்கப் போகிறது. உண்மையில் பார்க்கும் போது நம்ப முடியாத ஒன்றாக இருந்த கேட்ச். எப்படி ஷேன் வார்னின் மைக் கேட்டிங் பவுல்டு பந்து ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ என்று வர்ணிக்கப்பட்டதோ, அது போல் இந்தக் கேட்ச் ‘நூற்றாண்டின் சிறந்த கேட்ச்’ என்று வர்ணிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

ஜோஃப்ரா ஆர்ச்சரின் துல்லியம்:

 

ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த உலகக்கோப்பையில் டேவிட் வில்லேயின் இடத்தைப் பிடித்துக் கொண்டார் என்று இங்கிலாந்தின் ஒரு சில ‘வெள்ளை’ தரப்பில் ஆதங்கமும் ஆத்திரமும் இருந்தது, ஆனால் டேவிட் வில்லே நிச்சயம் ஜோஃப்ரா ஆர்ச்சரின் திறமைக்கு முன் குறைந்தவரே என்பதை ஆர்ச்சர் நிரூபித்தார்.

 

விக்கெட் எடுக்கும் முன்பே தன் இருப்பைப் பதிவு செய்தார், ஹஷிம் ஆம்லாவுக்கு ஸ்லோ பந்தை வீசி விட்டு அடுத்ததாக ஒரு எழுச்சிப் பவுன்சரை மணிக்கு 145 கிமீ வேகத்தில் வீச புல் ஷாட் ஆட முயன்ற ஆம்லாவின் ஹெல்மெட் முன்பகுதியைத் தாக்கியது. காயத்துடன் அவர் வெளியேறினார், பிறகுதான் இறங்கினார். பிறகு தென் ஆப்பிரிக்காவை 44/2 என்று படுத்தினார் ஆர்ச்சர், இம்முறை அய்டன் மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்தினார், கொஞ்சம் வெளியே பந்தை பிட்ச் செய்து கூடுதலாக எழுப்ப பின் காலில் சென்று பஞ்ச் ஆட முயன்ற மார்க்ரம் எட்ஜ் செய்ய ஸ்லிப்பில் ஜோ ரூட் அள்ளிப் போட்டார்.

archer.jpg 

கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் 5 ரன்களில் இருந்த போது ஜோப்ரா ஆர்ச்சர் அவரது புருவத்துக்கு ஒரு பவுன்சரை விச பிளெசிஸ் அதனை புல் ஆடினார். ஃபைன் லெக்கில் மொயின் அலி எளிதாக அள்ளிப்போட்டார். 7 ஓவர்களில் ஆர்ச்சர் 27 ரன்களுக்கு ஒரு மெய்டனுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார், அற்புதமான பந்து வீச்சு. தென் ஆப்பிரிக்காவிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை.

 

குவிண்டன் டி காக், வான் டெர் ட்யூசன்  இணைந்து 14 ஒவர்களில் 85 ரன்களைச் சேர்த்தனர். குறிப்பாக குவிண்டன் டி காக் முதிர்ச்சியுடன் ஆடினார், அடிக்க முடியாது என்று தெரிந்த பிறகு நிதானத்துடன் ஆடினார். ஆனால் லியாம் பிளெங்கெட்டின் அதிர்ச்சிக்கேற்ப அவரது ஒரு பந்தை கவர் திசையில் சிக்ஸ் அடித்தது அபூர்வமான ஒரு ஷாட்.  74 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர் 68 ரன்கள் எடுத்து பிளங்கெட் பந்தில் மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் டீப் ஸ்கொயர் லெக் கையில் அடித்தார். இது நல்ல பந்து அல்ல விட்டிருந்தால் கூட லெக் திசை வைடு ஆகியிருக்கும், ஆனால் இவர் சுழற்றினார் நேராக கையில் போய் உட்கார்ந்தது 129/3 என்று ஆனது.

 

ஜேபி டுமினி 8 ரன்கள் எடுத்து பொறுமையுடன் கொண்டு செல்ல வேண்டிய நேரத்தில் மொயின் அலி பந்தை லாங் ஆஃப் மேல் தூக்கி அடிக்க முயன்று குறிபார்த்து பீல்டர் கையில் கொடுத்து வெளியேறினார். ப்ரிடோரியஸ் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

 

யார் இந்த வான் டெர் ட்யுசன் என்று தெரியவில்லை, எடுத்த எடுப்பிலேயே அனாயசமாக ஆடுகிறார். 61 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து மீண்டும் ஒரு ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சருக்கு கேட்ச் ஆகி வெளியேறினார். 167/6 என்று தடுமாறியது, பெலுக்வயோ 24 ரன்களில்தான் பென் ஸ்டோக்ஸின் ஒரு கை டைவிங் பறக்கும் கேட்சுக்கு வீழ்ந்தார், பந்து சிக்சருக்குச் சென்று கொண்டிருந்தது வேறு கதை.  180/7 என்ற நிலையில் என்ன செய்ய முடியும்.

 

இடையில் 6வது விக்கெட் விழுந்தவுடன் ஆம்லா இறங்கினார். ஆனால் பாவமாக இருந்தது அவர் 23 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து பிளங்கெட் புருவ பவுன்சருக்கு பட்லரிடம் கேட்ச் ஆகி வெளியேறியது ஒரு லெஜண்ட்டுக்கு இது நேரக் கூடாது என்ற உணர்வை ஏற்படுத்தியது. 39.5 ஓவர்களில் 207 ரன்களுக்குச் சுருண்டது தென் ஆப்பிரிக்கா இன்னும் 10 ஓவர்கள் மீதமுள்ளன, கொஞ்சம் திட்டமிடுதல், டி காக் அளவுக்கு முதிர்ச்சி ஆகியவை மற்ற பேட்ஸ்மென்களுக்கு இருந்திருந்தால் ஒருவேளை சவால் அளித்திருக்கலாம்.

 

4 அரைசதங்களுடன் தொழில்நேர்த்தியான இங்கிலாந்தின் பேட்டிங்:

 

இம்ரான் தாஹிரை  முதல் ஓவரில் கொண்டு வந்து பேர்ஸ்டோவை எட்ஜ் செய்ய வைத்த டுப்ளெசிஸ் அந்த அச்சுறுத்தலை நீட்டிக்க முடியவில்லை, ஜோ ரூட், ஜேசன் ராய் பிறகு அவரை அடிக்கத் தொடங்கினர் இதனால் 3 ஓவ்ர் 18 ரன் 1 விக்கெட் என்று முதல் ஸ்பெல்லை முடிக்க நேரிட்டது.

 

பென் ஸ்டோக்ஸ் தன் 89 ரன்களில் 53 ரன்களை ஒன்று இரண்டு என்றுதான் எடுத்தார். அதன் பிறகுதான் பவர் கேம் ஆடத்தொடங்கினார். அதிலும் டிவைன் பிரிடோரியஸ் ஒவரில் ஒரு காட்டு ரிவர்ஸ் ஸ்கூப்பில் அரைசதம் கண்டது தென் ஆப்பிரிக்காவுக்கு மிரட்டலாக அமைந்தது.

 

ஜேசன் ராய் 54 ரன்கள், ஜோ ரூட் 51, இயான் மோர்கன் 57, ஆகியோரும் அரைசதம் எடுக்க பென் ஸ்டோக்ஸ் 89 ரன்களை எடுத்து அற்புதமாக ஆடினார். ஜோஸ் பட்லர் 18 ரன்களில் ஏமாற்றம் அளித்தார், டாப் ஆர்டரில் அரைசதம் எடுத்தவர்கள் சதம் எடுக்காதது இங்கிலாந்துக்கு ஏமாற்றமே.

 

தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் 125 டாட்பால்களை இங்கிலாந்துக்கு வீசியிருக்காவிட்டால் இங்கிலாந்தின் ஸ்கோர் 360-370 சென்றிருக்கும். ஆனால் விக்கெட்டுகள் விழுந்ததால் இங்கிலாந்து மெதுவாக ஆடியது. 311 ரன்களுகு 8 விக்கெட் என்று முடிந்தது இங்கிலாந்து.

 

89 ரன்கள், 2 விக்கெட், நூற்றாண்டின் சிறந்த கேட்ச் ஆகியவற்றுக்காக பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

 

இங்கிலாந்து அடுத்ததாக ட்ரெண்ட் பிரிட்ஜில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது. வரும் ஞாயிறன்று வங்கதேசத்துடன் தென் ஆப்பிரிக்கா தன் அடுத்த போட்டியில் மோதுகிறது.  வெள்ளிக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close