[X] Close

125‘டாட்பால்’களுடன் 311 ரன்களுக்கு இங்கிலாந்தை மட்டுப்படுத்தியது தென் ஆப்பிரிக்கா


125-311

  • kamadenu
  • Posted: 30 May, 2019 19:13 pm
  • அ+ அ-

-நோபாலன்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை 2019 முதல் போட்டியில் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்த தென் ஆப்பிரிக்க அணி அந்த அணியை 50 ஒவர்களில் 311/8 என்று மட்டுப்படுத்தியது.

 

இது ஏன் மட்டுப்படுத்தல் என்றால், இங்கிலாந்து மொத்தம் 125 டாட்பால்களை சந்தித்தது, இது குறைக்கப்பட்டு 60 ரன்களாகவது, 50 ரன்களாவது வந்திருந்தால் கூட இங்கிலாந்தின் ஸ்கொர் 360-370 என்று சென்றிருக்கும்.

 

பேர்ஸ்டோ, ஜேசன் ராய் ஜோடி சமீபகாலங்களாக எதிரணி பவுலர்களை விளாசி வரும் நேரத்தில் தோனியுடன் ஆடிய பழக்கத்தினால் பாடம் கற்றுக்கொண்ட டுபிளெசிஸ் முதல் ஓவரையே இம்ரான் தாஹிரிடம் கொடுக்க பலன் கிடைத்தது, ஜானி பேர்ஸ்டோ ரன் எடுக்கும் முன்னரே தாஹிரின் திரும்பிய பந்தை எட்ஜ் செய்து டி காக்கிடம் கேட்ச் ஆகி வெளியேற ரன் விகிதம் தொடக்கத்தில் ஓவருக்கு 8-9 என்று எகிறுவது பெரிய அளவில் தவிர்க்கப்பட்டது.

 

ஜேசன் ராய் 54 ரன்களையும் ஜோ ரூட் 53 ரன்களையும் சேர்த்து 2வது விக்கெட்டுக்காக 106 ரன்களை 18 ஓவர்களில் சேர்த்து அணியை நிலைப்படுத்தினர். ஆனால் ஜேசன் ராய் பெலுக்வயோவின் ஷார்ட் பிட்ச் பவுலிங்கிற்கு வெளியேற, உடனேயே ஜோ ரூட் ரபாடா பந்தை பாயிண்டில் டுமினியிடம் கேட்ச் ஆகி வெளியேற 111/3 என்று ஆனது. அதன் பிறகு இயன் மோர்கனும் பென் ஸ்டோக்ஸும் இணைந்தனர்.

 

இருவரும் சேர்ந்து சுமார் 17 ஓவர்களில் 106 ரன்களைச் சேர்த்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர், மோர்கன் இங்கிடியை ஒரு சிக்சரும் எய்டன் மார்க்ரமை ஒரு சிக்சரும் விளாசி 60 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து கோல்டன் ஆர்ம் இம்ரான் தாஹிரிடம் வீழ்ந்தார். ஜோஸ் பட்லர் 16 பந்துகளில் 18 ரன்களை எடுத்த போதிலும் ஒரு பவுண்டரியும் அடிக்கவில்லை. அவர் லுங்கி இங்கிடி பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பவுல்டு ஆக தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய நிம்மதி ஏற்பட்டது.

 

மொயின் அலி (3), கிறிஸ் வோக்ஸ் (13) வெளியேற பென் ஸ்டோக்ஸ் மிகப் பிரமாதமாக ஆடி 79 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்தார். இவரும் இங்கிடி பந்தில் அவுட் ஆகி 8 வது விக்கெட்டாக விழுந்தாலும் இங்கிலாந்து ஸ்கோர் 300 ரன்களைக் கடக்க உதவினார்.

 

தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாஹிர் 20 டாட்பால்களையும், இங்கிடி 28 டாட் பால்களையும் ரபாடா 24 டாட்பால்களையும், பிரிடோரியஸ் 7 ஓவர்களில் 17 டாட்பால்களையும், பெலுக்வயோ 8 ஓவர்களில் 23 டாட்பால்களையும் டுமினி 2 ஓவர்களில் 3 டாட்பால்களையும், மார்க்ரம் 3 ஓவர்களில் 10 டாட்பால்களையும் வீசி மொத்தம் 125 பந்துகள் டாட் பால்களாக ரன் எடுக்க முடியா பந்துகளாக இங்கிலாந்து அணியை தென் ஆப்பிரிக்கா ஓரளவுக்கு விரட்டக்கூடிய 311 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது.

 

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிடி 3 விக்கெட்டுகளை 66 ரன்களுக்குக் கைப்பற்றினார்.

 

தென் ஆப்பிரிக்கா அணி 312 ரன்கள் இலக்கை விரட்டக் களமிறங்கவுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close