[X] Close

மே.இ.தீவுகளின் 'பவர் ஹிட்டிங்' பேட்ஸ்மேன்களை சமாளிக்குமா பாகிஸ்தான்?: நாளை மோதல்


  • kamadenu
  • Posted: 30 May, 2019 17:43 pm
  • அ+ அ-

நாட்டிங்ஹாமில் நாளை நடக்கும் 2019 உலகக் கோப்பைப் போட்டியின் 2-வது ஆட்டத்தில் வலிமை மிக்க மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பவர்ஹிட்டிங் பேட்ஸ்மேன்களை பாகிஸ்தான் எதிர்கொள்ளுமா எனும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அந்த அணியினர் கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துள்ளார்கள். துபாயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரிலும் தோல்வி அடைந்தது பாகிஸ்தான்

அதுமட்டுமல்லாமல் கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பின் ஒருநாள் தரவரிசையில் டாப் 5 அணிகளுக்கு எதிரான 23 ஆட்டங்களில் பாகிஸ்தான் 3-ல் வெற்றி பெற்றுள்ளது.  அந்த அணியின் ஸ்திரத்தன்மை எப்படி என்பதை காட்டுகிறது.

பயிற்சிப் போட்டியில் கூட ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சும், பீல்டிங்கும் படுமோசமாக இருக்கிறது. ஆனால் இந்த வீரர்களை வைத்துக்கொண்டுதான் வலிமையான அணி என்று தொடர்ந்து நிர்வாகம் கூறி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பீல்டிங் படுமோசமாக இருந்தது என்று கடும் விமர்சனம் எழுந்தது.

paki.jpeg 

பந்துவீச்சில் உலகக் கோப்பைக்கு தேர்வான ஜூனைத்தை நீக்கிவிட்டு மூத்த வீரர்கள் வஹாப் ரியாஸ், முகமது அமீரை அணி நிர்வாகம் சேர்த்துள்ளது. ஏனென்றால், இங்கிலாந்து ஆடுகளத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு பலவீனமாக ரன்களை வாரிக்கொடுப்பதாக இருந்தது. 4 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி 350 ரன்களுக்கு மேல் அடிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் பந்துவீச்சு மோசமாக அமைந்தது. இதனால்தான் மூத்த வீரர்கள் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டனர்.

ஆனால், முகமது அமீர், ரியாஸ், ஷாகீன் அப்ரிடி அணிக்குள் வந்தாலும் கடந்த சில மாதங்களாக இருவரும் பந்துவீச்சில் ஃபார்மில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் செயல்பாடு நாளை மைதானத்தில்தான் தெரியும்.

பேட்டிங்கைப் பொருத்தவரை பகர் ஜமான், பாபர் ஆசம், இமாம் உல் ஹக், முகமது ஹபீஸ் ஆகியோர் மட்டுமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இங்கிலாந்து தொடரில் இவர்கள் நல்ல ஸ்கோர் செய்தார்கள். சோயிப் மாலிக், சர்பிராஸ் அகமது நடுவரிசையில் இருந்தும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேட் செய்யவில்லை.

அதிலும் கேப்டன் சர்பிராஸ் அகமது பீல்டர்களை அமைக்கத் தெரியாமல் களத்தில் தடுமாறுவதைப் பார்க்கும்போது எவ்வாறு அணியை வழிநடத்தப்போகிறார் என்று சந்தேகமாக இருக்கிறது.

அதிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியில் பவர் ஹிட்டர்களான ரஸல், கெயில், சாய் ஹோப், லூயிஸ், ஹோல்டர், ஹெட்மெயர் போன்ற பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு பாகிஸ்தான் பந்துவீச்சு வலுவாக அமையுமா என்பது சந்தேகமே. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் ஏதேனும் அதிசயம் நிகழ்த்தினால் மட்டுமே வெற்றியை நோக்கி நகர முடியும். இல்லாவிட்டால் மேற்கிந்தியத்தீவுகள்  அதிரடி பேட்ஸ்மேன்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிவிடுவார்கள்.

russel.jpg 

மேற்கிந்தியத்தீவுகள் அணியைப் பொறுத்தவரை கடந்த 1980-களில் இருந்த அணியைப் போன்று படுஉத்வேகமாக இருக்கிறார்கள். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் எதிரணிக்கு வலுவான சவால் அளிக்கும் வகையில் இருக்கிறார்கள்.

குறிப்பாக தொடக்க வீரர் கிறிஸ் கெயில், ஆன்ட்ரூ ரஸல், சாய் ஹோப், ஹெட்மயர், லூயிஸ் ஆகியோரின் பேட்டிங் வரிசை நிச்சயம் எதிரணிக்கு கடும் நெருக்கடியை, அழுத்தத்தை அளிக்கும். நடுவரிசையில் அணியை சமாளிக்க ஹோல்டர் உள்ளார். இவர்களை சமாளிப்பதுமிகக் கடினம்

பயிற்சிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 421 ரன்கள் சேர்த்து மிரளவைத்தார்கள்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை மேற்கிந்தியத்தீவுகள் அணி சற்று பலவீனமாக இருப்பதாகத் தெரிகிறது. ரஸல், தாமஸ், ஹோல்டர், ரோச் ஆகியோர் மட்டுமே நன்கு பந்துவீசக்கூடியவர்கள். இதுதவிர 30 ஓவர்களுக்கு மேல் பகுதிநேர பந்துவீ்ச்சாளர்கள் தகுதியானவர்கள் இல்லை என்பது சற்று பலவீனமாகும். ஒட்டுமொத்தத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பேட்டிங் வரிசை எந்த அணிக்கும் சவால் விடுக்கும் வகையில் அமைந்திருப்பது பலமாகும்.

பாகிஸ்தான் அணி விவரம்:

ஆசிப் அலி, சர்பிராஸ் அகமது(கேப்டன்), பக்கர் ஜமான், ஹசன் அலி, இமாம் உல்  ஹக், முகமது ஹபிஸ், சதாப் கான், சோயிப் மாலிக், பாபர் ஆசம், ஹிர்ஸ் சோஹைல், இமாத் வாசிம், முகமது அமீர், முகமது ஹஸ்நன், ஷாஹின் அப்ரிடி, வஹாப் ரியாஸ்

மே.இ.தீவுகள் அணி விவரம்:

ஜேஸன் ஹோல்டர்(கேப்டன்), பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷேனன் கேப்ரியல், ஷிம்ரன் ஹெட்மயர், எவின் லூயிஸ், நிகோலஸ் பூரன், ஆன்ட்ரூ ரஸல், கார்லோஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் கான்ட்ரெல், கிறிஸ் கெயில், சாய் ஹோப், ஆஷ்லே நர்ஸ், கேமர் ரோச், ஓஷ்னே தாமஸ்

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close